புகைப்படங்கள், எழுத்து மூலம் பகிரப்படும் தகவல்கள் வெளிப்படுத்துவதில் முக்கியத்துவம் அளித்து வந்த ஃபேஸ்புக் இனி, ரீல்ஸ் வடிவிலான விடியோக்களுக்கு முன்னுரிமை அளிக்க முடிவு செய்துள்ளது. இந்தியாவில் ஃபேஸ்புக் செயலியை 40 கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர். இளைஞர்கள் முதல் முதியோர்கள் வரையில் இந்தச் செயலியில் புகைப்படங்களையும், எழுத்துப்பதிவுகளையும் பகிர்ந்து வருகின்றனர்.சமூக ஊடகத்தில் பலர் நீண்ட காலமாக ஃபேஸ்புக்கை மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், ஃபேஸ்புக்கை இனி திறக்கும்போது நேரடியாக முழுத்திரை ரீல்ஸ் விடியோ வெளியாகும்.சோதனை முயற்சியில் இந்தியாவில் பலருக்கு இந்த முறை அறிமுகமாகி வருகிறது. விடியோக்களுக்கு முன்னுரிமை அளித்தும், மேலும் பயனாளிகளை ஈர்க்க இது வடிவமைக்கப்பட்டுள்ளது. மெட்டா நிறுவனம் நடத்திய ஆய்வுகளில் 97% பேர் அதன் தளங்களில் தினமும் விடியோக்களைப் பார்ப்பதாகத் தெரியவந்துள்ளது. இந்தியாவில் நாளுக்குநாள் விடியோ பயன்பாடு அதிகரித்து வருவதால், விடியோக்களுக்கு முன்னுரிமை அளிக்கும் முயற்சியை மெட்டா நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. ஃபேஸ்புக்கில் வழக்கமான பீட் சேவை விடியோக்களுக்கு அடுத்தபடியாக இருக்கும் இதை பயனர்கள் தேர்வு செய்து பார்க்க வேண்டும்.இந்தியாவில் டிக்டாக் செயலி தடை செய்யப்பட்ட சில மாதங்களுக்குப் பிறகு, 2020-இல் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் விடியோக்கள் சோதனை செய்யப்பட்டு பிரபலமானது. தற்போது, இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக்கில் விடியோக்கள் முதலில் தோன்றும் வகையில் முன்னுரிமை அளிக்க மெட்டா நிறுவனம் பணிகளை மேற்கொண்டு வருவது இந்தியாவில் அனைத்து வயது பயனர்களையும் கவருமா என்பதைப் பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.அ.சர்ப்ராஸ்