பிரான்ஸ் நாட்டில் வரும் சனிக்கிழமை (அக். 24) மீண்டும் போராட்டம் நடைபெறவுள்ளதால் அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பிரான்ஸில் ஏற்பட்டுள்ள விலைவாசி உயர்வு, வேலையின்மை, கல்வி நிலையங்களின் ஆசிரியர் பற்றாக்குறை மற்றும் தரமற்ற சூழல் ஆகியவற்றுக்கு எதிராக மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கடந்த சில நாள்களாகப் போராட்டம் நடத்தி வந்தனர். இதையடுத்து, கடந்த சனிக்கிழமை நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்ததைத் தொடர்ந்து, அங்குள்ள கடைகள், வணிக வளாகங்கள் சூறையாடப்பட்டன. மேலும், காவல் துறையினர் மற்றும் போராட்டக்காரர்கள் இடையே மோதல் வெடித்ததாகக் கூறப்படுகிறது. இந்த வன்முறையில், பாரீஸ் நகரத்தில் இருந்த புகழ்பெற்ற சிலைகள், சிற்பங்கள் மற்றும் ஓவியங்கள் சேதப்படுத்தப்பட்டதுடன், வரலாற்றுச் சிறப்புமிக்கக் கட்டடங்கள் கலவரக்காரர்களால் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன. இந்த நிலையில், சனிக்கிழமை காலை முதல் பாரீஸ் நகரத்தின் முக்கிய பகுதிகளில் மக்கள் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், அந்நகரம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுமார் 70,000-க்கும் அதிகமான காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இத்துடன், பாரீஸில் தொழிற்சங்கங்களின் ஆர்ப்பாட்டத்துக்கு மட்டுமே காவல் துறை அனுமதி அளித்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், பிரான்ஸ் நாட்டின் முக்கிய மாணவர் சங்கமான யூ.என்.இ.எஃப். மற்றும் யெல்லோ வெஸ்ட் மூவ்மெண்ட் ஆகிய அமைப்புகளின் போராட்டப் பேரணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.இதுபற்றி, பிரான்ஸ் உள்துறை அமைச்சர் லாரன்ட் நுனெஸ் கூறுகையில், “கலவரக்காரர்கள், கொள்ளையர்கள் மற்றும் வன்முறைச் செயல்களில் ஈடுபடுவோர் உடன் நாங்கள் சமரசம் செய்ய மாட்டோம். நாங்கள் நாளைக்காகத் தயாராக இருக்கிறோம். மிகுந்த கண்காணிப்புடனும், உறுதியுடனும் இருப்போம்” எனக் கூறியுள்ளார். இருப்பினும், பாரீஸ் உள்ளிட்ட நகரங்களில் அமைந்துள்ள புகழ்பெற்ற அருங்காட்சியகங்கள், கலாசார மையங்கள் நாளை திறக்கப்படாது என அவற்றின் நிர்வாகங்கள் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.168 பள்ளிக் குழந்தைகளைக் கொன்ற தாக்குதலுக்கு அமெரிக்கா மன்னிப்பு கேட்கவில்லை! - ஈரான்As protests are set to take place again in France next Saturday (Oct. 24), precautionary measures are being taken intensively.