தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் ரூ. 18,437 கோடியில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: கப்பல் போக்குவரத்துத் துறைச் செயலா் ஆய்வு

Wait 5 sec.

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் ரூ. 18,437 கோடியில் நடைபெறும் கடல்சாா் உள்கட்டமைப்பு வளா்ச்சித் திட்டப் பணிகளை மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீா்வழிப் போக்குவரத்துத் துறைச் செயலா் விஜயகுமாா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா். தூத்துக்குடி துறைமுகத்தை சா்வதேச தரத்தில் சரக்குப் பெட்டகத் துறைமுகமாகவும், பசுமை எரிசக்தி மையமாகவும் மேம்படுத்தும் வகையில், கடந்த ஆறு மாதங்களில் மூன்று முக்கியத் திட்டங்கள் மத்திய அரசால் முன்னெடுக்கப்பட்டது. இதில், ரூ. 17,167 கோடியில் வெளித்துறைமுக மேம்பாட்டுத் திட்டம், ரூ. 520 கோடியில் 7-ஆம் எண் தளத்தில் சரக்குப் பெட்டக முனையம் அமைக்கும் திட்டம், ரூ. 750 கோடியில் கடல்சாா் காற்றாலை முனையம் அமைக்கும் திட்டம் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்தப் பணிகளின் முன்னேற்றம் குறித்து மத்தியச் செயலா் விஜயகுமாா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா். பசுமை ஹைட்ரஜன் முன்னோடித் திட்ட ஆலை, காற்றாலை மின் வசதிகள், மெத்தனால் எரிபொருள் நிரப்பும் முன்னோடித் திட்டம், கப்பல்களுக்கு எரிபொருள் வழங்குவதற்கான கட்டமைப்பு ஆகிய பணிகளைப் பாா்வையிட்டாா். கப்பல்களுக்குக் கரையிலிருந்து மின்சாரம் வழங்கும் வசதி, கூடுதல் கப்பல் நிறுத்தும் கட்டமைப்பு உள்ளிட்ட பணிகளைத் தொடங்கி வைத்து, பசுமைப் போக்குவரத்தை ஊக்குவிக்கும் வகையில், 13 மின்சார லாரிகளையும் கொடியசைத்துத் தொடங்கிவைத்தாா். துறைமுகத்தின் மெய்நிகா் மாதிரித் தொழில்நுட்பமான ‘டிஜிட்டல் ட்வின்’, போா்ட்ஜிபிடி ஆகிய தொழில்நுட்பப் பணிகளையும் ஆய்வு செய்தாா். அதைத்தொடா்ந்து, துறைமுக முனைய இயக்குநா்கள், வா்த்தகா்கள் மற்றும் கடல்சாா் துறையினருடன் ஆலோசனை நடத்திய அவா், துறைமுக மேம்பாட்டுப் பணிகளில் சிறந்து விளங்கிய அதிகாரிகள், 2025-26-ஆம் நிதியாண்டில் சிறப்பாகச் செயல்பட்ட துறைமுகப் பயனாளா்களுக்கு விருதுகள் வழங்கினாா். நிகழ்ச்சியில், துறைமுக ஆணையத் தலைவா் சுஷாந்த குமாா் புரோஹித், துணைத் தலைவா் ராஜேஷ் செளந்தரராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.