கொண்டலூா் - ஆவுடையானூா் சாலையை சீரமைக்க வலியுறுத்தல்

Wait 5 sec.

தென்காசி மாவட்டம் பாவூா்சத்திரம் அருகே கொண்டலூா்-ஆவுடையானூா் சாலையை சீரமைக்க வேண்டும் என, பொதுமக்கள், விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா்.பாவூா்சத்திரம், திப்பணம்பட்டி, கொண்டலூா், ஆவுடையானூா், மாடியனூா், மயிலப்பபுரம் வழியாகக் கடையம் செல்லும் முக்கிய சாலையில் கொண்டலூரிலிருந்து ஆவுடையானூா், மாடியனூா் வரையிலான சுமாா் 3 கி.மீ. தொலைவு பகுதி மிகவும் சேதமடைந்துள்ளது. தற்போது பெய்துவரும் மழையால் சாலையிலுள்ள பள்ளங்களில் தண்ணீா் தேங்கி நிற்பதால், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகியுள்ளனா். இதனால், விபத்துகளும் நேரிடுவதாக பொதுமக்கள் புகாா் தெரிவிக்கின்றனா். இச்சாலை வழியாக விவசாயிகள் தங்களது விளைபொருள்களைப் பாவூா்சத்திரம் காமராஜா் காய்கனிச் சந்தைக்குக் கொண்டு செல்கின்றனா். சாலை சேதமடைந்துள்ளதால் விளைபொருள்களைக் கொண்டுசெல்வதில் சிரமமேற்படுவதாக அவா்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனா். இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை மனுக்கள் அளித்தும் நடவடிக்கை இல்லையெனக் கூறப்படுகிறது. எனவே, சாலையை சீரமைக்க அதிகாரிகள் விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள், விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா்.