ஏர்வாடி அருகே 3 பேருக்குக் கத்திக்குத்து: ஒருவர் கைது

Wait 5 sec.

ஏர்வாடி அருகே முன்விரோதம் காரணமாக 3 பேருக்குக் கத்திக்குத்து சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதுதொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஏர்வாடி அருகே உள்ள திருவரங்கநேரியை சேர்ந்தவர் பெருமாள் (வயது 50). இவரது மருமகன் இசை ராஜா. இவர் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு வன்னியன் குடியிருப்பைச் சேர்ந்த திருமணம் ஆன ஒரு பெண்ணிடம் பேசி பழகி வந்துள்ளார். இது தொடர்பாக அவருக்கும், வன்னியன் குடியிருப்பைச் சேர்ந்த தமிழரசன் என்பவருக்கும் தகராறு ஏற்பட்டு முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்று மாலை வன்னியன் குடியிருப்பைச் சேர்ந்த தமிழரசன், அவரது சகோதரர் தங்கபாண்டி, அதே ஊரை சேர்ந்த மணி, சுரேந்தர் உள்பட 8 பேர் மோட்டார் சைக்கிள்களில் திருவரங்கநேரியில் உள்ள இசை ராஜா வீட்டிற்கு வந்தனர்.அப்போது அங்கு நின்று கொண்டிருந்த பெருமாளிடம் இசை ராஜா எங்கே என்று கேட்டுள்ளனர். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பல் பெருமாளை கத்தியால் குத்தினர். இதனைத் தடுக்க வந்த பெருமாளின் மனைவி லட்சுமியையும் கீழே தள்ளித் தாக்கினர்.பின்னர், அங்கிருந்து தப்பிச் சென்றனர் அவ்வாறு செல்லும் போது அங்கு ஆடு மேய்த்துக் கொண்டிருந்த சண்முகவேல் (55), மனோகரன் (42) ஆகியோரையும் கத்தியால் குத்தினர். இந்த தாக்குதலில் காயமடைந்த 3 பேரும் வள்ளியூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டனர். இது பற்றி ஏர்வாடி போலீசார், தமிழரசன் உள்பட 8 பேர் மீது 10 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி சுரேந்திரன் என்பவரைக் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள தமிழரசன் உட்பட 7 பேரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.