நீலகிரி மாவட்டத்தில் மழை நீடிப்பதால் 2 நாள்களுக்கு உதகைக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை தர வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில், வடகிழக்குப் பருவமழை தொடங்கி கடந்த ஒரு வார காலமாக பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது.இந்த நிலையில், வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் நேற்று பலத்த மழை கொட்டித் தீர்த்தது. கொடைக்கானல் மற்றும் உதகையிலும் பலத்த மழை கொட்டியதால், மலைப் பாதையில் பல இடங்களில் மழைநீர், நீர்வீழ்ச்சி போல ஆர்ப்பரித்துக் கொட்டி வருகிறது.இதனால், மலைப் பாதையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், உதகை மாவட்ட நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டிருக்கும் அறிவுறுத்தலில், பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள், இன்றும் நாளையும் உதகை வருவதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.கேத்ரின் நீர்வீழ்ச்சி, கோடநாடு காட்சி முனை உள்ளிட்ட சுற்றுலா தளங்கள் மக்களின் பாதுகாப்பைக் கருதி முன்னெச்சரிக்கையாக மூடப்பட்டிருப்பதாக வனத்துறை அறிவித்துள்ளது.எனவே வார இறுதியான சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை உதகை செல்ல திட்டமிட்டிருப்பவர்கள் அதனை ரத்து செய்வது நல்லது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.உதகை அருகே பர்லியார் அருகே மண் சரிவில் அரசுப் பேருந்து சிக்கியிருப்பதால், அங்கு மீட்புப் பணிகளும் நடந்து வருகிறது. அப்பகுதியில் போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது.