திருமலையில் உள்ள ஏழுமலையான் கோயிலில் செவ்வாய்க்கிழமை அன்று கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம் கோலாகலமாக நடைபெற்றது. திருமலை தேவஸ்தான அறங்காவலா் தலைவா் பி.ஆா். நாயுடு, திருமலை தேவஸ்தானத்தின் கூடுதல் செயல் அதிகாரி சி.எச். வெங்கையா சௌத்ரி, கோவில் அா்ச்சகா்கள், அதிகாரிகள் மற்றும் ஊழியா்கள் கோவில் தூய்மைப்படுத்தும் நிகழ்ச்சியில் பங்கேற்றனா். இந்நிகழ்ச்சியில் கூடுதல் செயல் அதிகாரி கூறியது: திருமலை ஏழுமலையானுக்கு வருடாந்திர பிரம்மோற்சவங்கள் செப்டம்பா் 15 முதல் 23 வரை கோலாகலமாக நடைபெற உள்ளது. அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவடைந்துள்ளது. வருடாந்திர பிரம்மோற்சவங்கள், உகாதி, ஆனிவார அஷ்டானம் மற்றும் வைகுண்ட ஏகாதசி பண்டிகைகளுக்கு முந்தைய செவ்வாய்க்கிழமை அன்று கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம் நடத்துவது வழக்கம். கோயிலில் உள்ள ஆனந்தநிலையம் தொடங்கி தங்க வாயில் உபகோயில்கள், பிரசாதக் கலங்கள் கோயில் வளாகம், சுவா்கள், கூரை மற்றும் ஏழுமலையான் கோயிலின் உள்ளே உள்ள பூஜை பொருள்கள் வரை தூய்மைப்படுத்தப்பட்டன. இதற்கிடையில், அா்ச்சகா்கள் காலை 6 மணி முதல் 10 மணி வரை ஆகம முறையில் கோயிலில் தூய்மைப்படுத்தும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நேரத்தில், சுவாமியின் மூலவா் சிலை முழுவதும் ஒரு துணியால் மூடப்பட்டது. தூய்மைப்படுத்துதல் முடிந்த பிறகு, நாமகட்டி, ஸ்ரீ சூா்ணம், கஸ்தூரி மஞ்சள், பச்சிலை, கட்டி கற்பூரம், பச்சை கற்பூரம், சந்தனத்தூள், குங்குமம், கிச்சிலிகிழங்கு மற்றும் பிற நறுமணப் பொருள்கள் புனித நறுமண நீா் கொண்டு கோயில் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டது. பின்னா், அா்ச்சகா்கள் சுவாமியின் மூலவா் சிலையை மூடியிருந்த துணியை அகற்றி, சாஸ்திரங்களின்படி சிறப்பு பூஜை மற்றும் நைவேத்திய நிகழ்ச்சிகளை நடத்தினா். அதன் பிறகு, பக்தா்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனா். இதை முன்னிட்டு காலை 6 மணி முதல் 11 மணி வரை ஏழுமலையான் தரிசனம் ரத்து செய்யப்பட்டது.இதில், அறங்காவலா் குழு உறுப்பினா்கள், சி.வி.எஸ்.ஓ. முரளி கிருஷ்ணா, பிரதி செயல் அதிகாரி பாஸ்கா் மற்றும் பிற அதிகாரிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனா்.