சட்டப்பேரவை விவாதங்கள் மேம்படட்டும்!

Wait 5 sec.

அண்மையில் ஒரு கல்லூரிக்கு உரையாற்றச் சென்றபோது ஒரு மாணவியிடம் சட்டப்பேரவை நிகழ்வுகளைப் பார்ப்பது உண்டா? என்று கேட்டேன். ஆம், பார்க்கிறோம் என்றார்.நம் சட்டப்பேரவை நிகழ்வு சிறப்பாக இருக்கிறதா என்றேன். திரைப்படம் பார்ப்பதைவிட மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்றார். நான் மட்டுமல்ல எங்கள் மாணவர்கள், நண்பர்கள் அனைவருக்கும் அதுதான் தற்போது பொழுதுபோக்கு என்றார்.உங்கள் அனைவருக்கும் பிடித்தது எது? என்றேன். ஆட்சி அதிகாரத்தில் இருந்தவர்கள் செய்த ஊழல்களை அம்பலப்படுத்துவது என்றார். அதுதான் சட்டப்பேரவையின் பணியா? என்றேன். நாங்கள் என்ன சட்டப்பேரவை நிபுணரா? என்றார். நான் கூறினேன், நான் மத்திய அரசு நிதியுதவியுடன் சட்டப்பேரவை குறித்து இரண்டு பெரும் ஆய்வு நடத்தி புத்தகங்கள் வெளியிட்டவன் என்றேன். உடனே, அப்படி என்றால் முதலில் சட்டப்பேரவை எதற்காக எப்படி அதைப் பயன்படுத்த வேண்டும் என்று சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு ஆலோசனை கூறுங்களேன் என்றார்.சட்டப்பேரவைதான் ஒட்டுமொத்த மாநில மக்களுக்கான முடிவு எடுக்கும், கொள்கைகளை உருவாக்கும், சட்டம் இயற்றும், மேம்பாட்டுக்கு நிதி ஒதுக்கும் மாமன்றம். இவை அத்தனையும் விவாத ஜனநாயகத்தின் மூலம் நடைபெற வேண்டும். அந்த விவாத மக்களாட்சியை எந்த அளவுக்கு நிபுணத்துவத்துடன், பக்குவத்துடன், கண்ணியத்துடன் நம் மக்கள் பிரதிநிதிகள் நடத்துகின்றார்களோ, அந்த அளவுக்கு ஒட்டுமொத்த மக்களாட்சியின் தரம் உயரும் என்பது கோட்பாடு. விவாத மக்களாட்சியைப் பொறுப்புடன் கையாள மக்கள் பிரதிநிதிகளுக்கு நிபுணத்துவம் கூட்டப்படல் வேண்டும். அந்த நிபுணத்துவத்தை இரண்டு நாள் பயிற்சியில் மட்டும் உருவாக்க முடியாது.அது தரமான வாசிப்பும் நேர்த்தியான யோசிப்பும், இவற்றைக் கடந்து நாட்டின் மீதும், மக்கள் மீதும், மக்களாட்சியின் மீதும் மிகப் பெரும் நம்பிக்கையுடன் செயல்படும்போது வருவது. தேர்தலில் போட்டியிடும்போது இவற்றையெல்லாம் தெரிந்துகொண்டு எவரும் போட்டியிடுவது இல்லை.பொதுமக்களும் இந்த விவாத மக்களாட்சி குறித்தும், சட்டப்பேரவை குறித்தும் தெரிந்துகொண்டு தேர்தலில் வாக்களிப்பதில்லை. வெற்றி பெற்று வந்தவுடன் சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவருமே ஒரு புதிய உளவியலுக்கு வந்து விடுவர். நாம் சமூகத்தில் புதிய அந்தஸ்தைப் பெற்று மதிக்கத்தக்க மனிதராக வந்துவிட்டோம் என்பதுதான் அந்த உளவியல். நாம் வெற்றி பெற்று, சான்றிதழ் வாங்கியதிலிருந்து சட்டப்பேரவைகளுக்குள் பிரவேசிக்கும் வரை, தங்கள் பங்கு பணி என்ன என்பதைப் புரிந்து கொண்டார்களா என்பதுதான் அடிப்படைக் கேள்வி.முயன்றாலும் அந்த குறுகிய காலத்துக்குள் சட்டப்பேரவை குறித்த நூல்களைப் படித்து புரிந்து கொள்வது என்பதும் கடினம்தான். சட்டப்பேரவை உறுப்பினர்கள் என்பவர்கள், சாதாரண மனிதர்கள் அல்ல, மக்களின் வழிகாட்டி. அவர்கள் என்றைக்கு மக்கள் பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டார்களோ அன்றிலிருந்து அவர்கள் சாதாரண மனிதர்கள் அல்லர்; மக்களை மேம்படுத்தும், மக்களைப் பாதுகாக்கும் ஓர் அறங்காவலர்.இவர்களுக்கு கோட்பாட்டு ரீதியாக இரண்டு பணிகள் இருக்கின்றன; ஒன்று, அவர் தொகுதி மக்களின் பிரதிநிதி, இரண்டு சட்டப்பேரவையில் அவர் ஓர் உறுப்பினர். முதலில் அவர் செய்ய வேண்டிய பணி, சட்டப்பேரவை உறுப்பினர் பணி. அப்படி என்றால், அவர் செய்ய வேண்டியது என்ன? அவர் முதலில் அந்த மாநிலத்தின் ஒட்டுமொத்த மேம்பாட்டுக்கும் பணி செய்பவர். எனவே, சட்டப்பேரவைக்குள் வரும் சட்ட மசோதாக்கள், முடிவுகள், கொள்கைகள், நிதி ஒதுக்கீடு அனைத்திலும் மாநிலத்தின் ஒட்டுமொத்த நலன் சார்ந்து, தரவுகளின் அடிப்படையில், நேர்மையுடன் உண்மைத் தன்மையில் விவாதிக்க, முடிவெடுக்க சட்டப்பேரவைக்கு உதவ வேண்டும்.இரண்டாவதாக, ஒரு தொகுதியின் பிரதிநிதியாக தொகுதி மக்களின் பிரச்னைகளை தொகுத்து எந்த இடத்துக்கு கொண்டுசெல்ல வேண்டுமோ, அங்கு கொண்டுசென்று மக்கள் பிரச்னைகளைத் தீர்க்க வேண்டும். அப்போது, பிரச்னைகளின் ஆழத்தை ஆய்ந்து எந்த முடிவையும் அதன் மீது எடுக்கும் உரிமை சட்டப்பேரவை உறுப்பினரிடமே இருக்கிறது.தொகுதி மக்கள் கூறுவதை அப்படியே எடுத்துச் செல்ல வேண்டும் என்ற எந்தக் கட்டாயமும் இல்லை. ஆனால், அந்த முடிவை எடுக்கும் தகுதியுடையவராக சட்டப்பேரவை உறுப்பினர் ஒவ்வொருவரும் தங்களைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும். அதாவது, தன் அறிவையும் ஆற்றலையும், திறனையும் வளர்த்துக் கொள்வது. எதற்காக இதை செய்ய வேண்டுமென்றால், மக்களின் பிரச்னைகள் தீர்க்கப்பட வேண்டும்; சட்டப்பேரவை மாண்பு காக்கப்பட வேண்டும்; மக்களாட்சியை தரம் உயர்த்த வேண்டும் என்பதற்காகத்தான்.சட்டப்பேரவையில் நாம் பேசும் ஒவ்வொரு தருணத்திலும் வரலாற்றை உருவாக்குகிறோம் என்ற உணர்வில் பேச வேண்டும். கருத்துகளை முன்வைத்து அறிவார்ந்த விவாதத்தை முன்னெடுத்து கருத்தொற்றுமையில் முடிவுகளை எடுக்க உருவாக்கப்பட்ட மாமன்றமே சட்டப்பேரவை. அதற்கு நாம் பேசுகிற திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும். பேசுவது ஒரு கலை; பொருள்படப் பேசுவது ஓர் அறிவியல். எந்த ஒரு பொருளைப் பற்றி பேசினாலும், அறிவார்ந்த நிபுணத்துவம் பெற்றவர்களிடம் கருத்துகளைப் பெற்று சட்டப்பேரவை பேச்சை முறையாக தயார் செய்து பேச வேண்டும்.அதற்காகத்தான் இவ்வளவு அலுவலக வசதிகள் பணியாளர்கள், நூலகங்கள், பயிற்சிகள். சட்டப்பேரவை உறுப்பினர் சட்டப்பேரவைக்குள் செய்யும் பணிக்கு இவ்வளவு தயாரிப்புகள் ஒவ்வொரு சட்டப்பேரவை உறுப்பினருக்கும் தேவை. அத்தனை பேருக்கும் பேச வாய்ப்புகள் கிடைக்குமா என்றால் கிடைக்காது. அதை நாம் உருவாக்கிக் கொள்ளலாம். அதற்கு சட்டப்பேரவை விதிகள் அடங்கிய புத்தகத்தை மீண்டும் மீண்டும் படிக்க வேண்டும். அதிலுள்ள வாய்ப்புகள் குறித்து புரிந்துகொண்டு பயன்படுத்த வேண்டும்.அதே நேரத்தில், சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு பேரவைக்கு வெளியில் தொகுதி மக்களுக்கு செய்ய வேண்டிய பணிகளும் பல உள்ளன. சட்டப்பேரவையில் ஒவ்வொரு கூட்டத் தொடரிலும் எடுத்த முடிவுகள், அரசு கொண்டு வந்த திட்டங்கள்} அவற்றை மக்கள் பெறுவது எப்படி என்பதை மக்களுக்குக் கொண்டு சேர்க்க வேண்டும்.ஒரு காலத்தில் மக்களுடன் மக்களாக பொது வாகனத்தில் பயணித்து - பொதுமக்களைச் சந்தித்து அவர்களின் பிரச்னைகளைச் சேகரித்து சட்டப்பேரவையில் பேசி, மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து எடுத்து வைத்து பிரச்னைகளைத் தீர்த்து மக்கள் மத்தியில் பெறும் பெயர் பெற்ற மனிதர்களும் உண்டு. நான் சிறுவனாக இருந்தபோது பட்டுக்கோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த ஏ.ஆர்.மாரிமுத்து என் மனதில் என்றும் நீங்கா இடத்தைப் பெற்றார். அவர் அரசுப் பேருந்தில்தான் எங்கள் ஊருக்கு வருவார். அவர் கையில் வைத்திருக்கும் துணிப்பையில் நோட்டு ஒன்று கொண்டு வருவார், குறிப்பெடுப்பார். யார் வீட்டிலாவது எளிய உணவு எடுத்துக் கொள்வார். தேநீர் கடையில் அமர்ந்து மக்களைச் சந்திப்பார். அவர் பையில் தினசரிகள் வைத்திருப்பார். ஏதாவது பிரச்னையைக் கூறினால் செய்தித்தாளில் படித்தேன் என்பார்.சட்டப்பேரவையை தெருச்சண்டை போடும் இடமாக ஆக்க நாம் செயல்படக்கூடாது. அநியாயம் நடைபெறும்போது ரெüத்திரம் கொள்ள வேண்டும். ஆனால், அந்தக் கோபம் பக்குவமான மொழியில் வெளிவந்து, சட்டப்பேரவை பேச்சாக வரும்போது நீங்கள் எவ்வளவு உயர்வான சிந்தனைக்குச் சொந்தக்காரர்கள், பக்குவத்துக்கு, பணிவுக்கு, கண்ணியத்துக்குச் சொந்தக்காரர்கள் என்பது வெளிப்பட வேண்டும்.எட்மண்ட் பர்க் என்பவர் பிரிட்டன் நாடாளுமன்றத்துக்கு பிரிஸ்டோல் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர். அவருடைய நாடாளுமன்ற உரைகள் இன்று வரலாற்று மாணவர்களுக்கும், அரசியல் அறிவியல்துறை மாணவர்களுக்கும், ஆங்கிலத் துறை மாணவர்களுக்கும் பாடமாக வைக்கப்பட்டுள்ளது. அவர் இந்தியாவில் ஆட்சியாளராக இருந்த வாரன் ஹேஸ்டிங்ஸ் பதவி நீக்கம் செய்ய நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை உலகப் புகழ் பெற்றது. அவர்தான் சட்டப்பேரவை நாடாளுமன்ற உறுப்பினர்களின் பங்கு பணி குறித்த பெரிய விளக்கத்தை உலகுக்குத் தந்தவர்.நம் நாட்டில் இன்று சட்டப்பேரவைகளில் விவாதிக்கப்படுவது முழுக்க முழுக்க கட்சி அரசியல். இவ்வளவு அரசியல் எந்த நாட்டிலும் பேசுவதில்லை. இதில் மக்களின் மேம்பாடு பின்னுக்குத் தள்ளப்படுகிறது. அந்த விவாதங்களும் தரம் தாழ்ந்த} பக்குவமில்லாத மொழியில்தான் நடைபெறுகின்றன. நாம் இன்று நிகழ்த்தும் தரம் தாழ்ந்த விவாதங்கள், கட்சிக்காரர்களை மகிழ்விக்கலாம்; ஆனால், அறிவார்ந்த குடிமக்களை மகிழ்விக்க முடியாது.பெரு மாற்றங்களைச் செய்யக்கூடிய இடத்தில்தான் ஒவ்வொரு சட்டப்பேரவை உறுப்பினரும் இருக்கிறோம் என்று தங்களைத் தயார் செய்துகொள்ள வேண்டும். ஒரு பதவி உயர்வதும் தாழ்வதும் அவரவர் செய்யும் பணிகளால்தான். பதவியை உயர்த்த நாம் நம்மை உயர்த்தி தமிழக சட்டப்பேரவை உலகுக்கு வழிகாட்டும் சட்டப்பேரவையாக மாற்றிக்கொள்ள ஒவ்வொருவரும் செயல்பட வேண்டும். அதற்கு நாம் நம்மை வலிந்து செதுக்கிக் கொள்ள வேண்டும்.கட்டுரையாளர்:பேராசிரியர்.