தமிழகத்தின் பல்வேறு பள்ளி வளாகங்களில் நிகழும் வன்முறைச் சம்பவங்கள் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பெரிய சவால்களாக மாறியுள்ளன. அண்மையில் கோவையில் கல்லூரி மாணவர் ஒருவர் பல மாணவர்களால் தாக்கிக் கொல்லப்பட்டது சமூகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.மேலும், இவ்வாறான வன்முறைச் செயல்கள், இணையதள தவறான பயன்பாடுகள், ஆசிரியர்களுக்கான மதிப்புக் குறைதல், போதைப்பொருள் பயன்பாட்டுச் சிக்கல்கள், பாலியல் தொந்தரவுகள் போன்ற நிகழ்வுகள் நமக்கு அதிக மனவேதனையை அளிக்கின்றன. இது சார்ந்து அண்மையில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பேசிய இந்தியக் குடியரசுத் தலைவர் தனது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.2026-27 ஆம் ஆண்டில் தமிழகத்தில் கல்விக்கான நிதி ஒதுக்கீடு ரூ. 52,920 கோடியாகும். மேலும், அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 2015-16 ஆம் ஆண்டில் 75.52 லட்சமாக இருந்தது. 2025-26 ஆம் ஆண்டில் இது 43.03 லட்சமாகக் குறைந்துள்ளது. அதே காலகட்டத்தில் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 36.56 லட்சத்திலிருந்து 62.03 லட்சமாக உயர்ந்துள்ளது. மேலும், தனியார் நிறுவனங்கள் பயன்பெறும் வகையில் நடப்பில் உள்ள கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் அளிக்கப்படும் இட ஒதுக்கீட்டை அரசு மறுபரிசீலனை செய்வது நல்லது.தமிழக அரசுப் பள்ளிகளில் பல ஆண்டுகளாக நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை மாணவர்களின் கல்வித் தரத்தையும், ஒழுக்கத்தையும் வெகுவாகப் பாதிக்கிறது. ஆசிரியப் பணிக்கு படித்து விட்டு வேலைவாய்ப்பின்றி உள்ள இளைஞர்களைக் கொண்டு உடனடியாக பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும். ஆசிரியர்களைக் கற்பித்தல் பணி அல்லாத பிற பணிகளுக்குப் பயன்படுத்துவது தவிர்க்கப்படுவது நல்லது.மாணவர்களிடையே அதிகரித்துவரும் கோபம், சமூக வலைதளங்களின் எதிர்மறைத் தாக்கம், ஆசிரியர்களின் மாணவர் கட்டுப்பாட்டில் உள்ள குறைபாடு, சமூகத்தில் தொழில்நுட்பத்தால் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், படித்தோரின் வேலையின்மை, குடும்ப அமைப்பில் ஏற்பட்டுள்ள சிதைவுகள், கல்வி முறையில் உள்ள குறைபாடுகள், பெற்றோரில் ஒருவர் வேலைவாய்ப்புக்காக வேறு இடத்தில் பிரிந்து வாழ்வது, ஒரே பெற்றோர் குடும்பங்களின் அதிகரிப்பு, பெற்றோரின் நேரக்குறைப்பாட்டால் குழந்தைகளின் நடத்தையைக் கண்காணிப்பதில் ஏற்படும் கவனக் குறைவு, வீடுகளில் அடிக்கடி நடைபெறும் வன்முறைகள் போன்றவை இவ்வாறான நிகழ்வுகளுக்குக் காரணங்களாகக் கூறப்படுகின்றன.சிறந்த கல்வியும், ஒழுக்கமும் கொண்ட மாணவர்கள்தான் வாழ்வில் வெற்றி பெற முடியும். இந்நிலையை சமூகம் அடைவதற்கு பள்ளிகளும், குடும்பங்களும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டியது மிகவும் அவசியம். பெற்றோர் அன்றாடம் தங்களின் குழந்தைகள் மீது அன்பு செலுத்தி, அவர்களைக் கண்காணிப்பது மிகவும் அவசியம். தங்கள் குழந்தைகளின் நண்பர்கள் குறித்தும் பெற்றோர் அறிந்திருக்க வேண்டும்.மாணவர்களின் தனிமை வேற்றுமைகளைப் புரிந்துகொண்டு நன்கு கற்பிக்கும் ஆசிரியர்கள் அவர்களுடன் இணைந்து செயல்படும் பொறுப்புமிகுந்த பெற்றோர் அடங்கிய சமூகமே இன்றையத் தேவை.மாணவர்களின் முழுமையான வளர்ச்சி, நன்னெறிக் கல்வி, வாழ்க்கைத்திறன் வளர்த்தல் போன்றவை பின் தள்ளப்பட்டு, மதிப்பெண்களை மட்டுமே மையமாகக் கொண்டு கற்கும் இன்றைய மாணவர்கள் அதிக மனஅழுத்தத்தைப் பெறுகின்றனர்.மேலும், அவர்கள் எதிர்மறை நடத்தைகளுக்கும் உள்ளாகின்றனர். இவற்றுடன் அவர்களின் மீது அதிக அளவு செல்வாக்கு செலுத்தும் திரைப்படங்கள், தொலைக்காட்சி தொடர்கள், பிற சமூக ஊடகங்களின் நிகழ்ச்சிகளும் இவர்களின் நல்ல வாழ்க்கையின் உண்மையான இலக்கணத்தை சொல்லிக் கொடுக்கத் தவறுகின்றன.வன்முறையையும் மரியாதை இல்லாத நடத்தை முறைகளையும் இவற்றில் இயல்பான நிகழ்வுகளாக இடம்பெறுவது தவிர்க்கப்படுவது நல்லது. இவை நல்ல சமூகத்தை உருவாக்கும் நோக்கில் மட்டுமே தயாரிக்கப்படுவது நல்லது. இவற்றின் தீய பாதிப்பிலிருந்து நாளைய சந்ததிகளைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு நம் எல்லோருக்கும் இருக்கிறது.மதிப்பெண் மையப்படுத்தப்பட்ட கல்வியிலிருந்து மாணவர் திறனை மேம்படுத்தும் கல்வி, அடுத்த வகுப்பு தேர்ச்சிக்கு நன்னெறிக் கல்விக்கான குறைந்தபட்ச மதிப்பெண்ணை ஒதுக்குதல், அனைத்துப் பள்ளிகளிலும் தகுதியுள்ள மனநல ஆலோசகர்களை நியமனம் செய்தல், ஆசிரியர் கல்விப் பயிற்சியில் மேம்பாடு, மாணவர்களின் சிக்கல்களுக்கு தீர்வு காணும் திறன்கள் சார்ந்து பெற்றோருக்கும், ஆசிரியர்களுக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், பெற்றோர் குழந்தைகளுடன் அதிக நேரம் செலவிடுவதை உறுதி செய்தல், அவர்களின் எண்மப் பயன்பாட்டைக் கண்காணித்தல், பள்ளி ஆசிரியர்கள் பெற்றோரின் தொடர்பில் இருத்தல், இளைஞர் வழிகாட்டல் முகாம்களுக்கு ஏற்பாடு செய்தல் போன்றவையும் இன்றைய பள்ளிக் கல்வியின் தேவையாக மாறியுள்ளன.பள்ளிகளில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பை உறுதி செய்து ஆசிரியர்கள் அச்சத்துடன் செயல்படும் போக்கு மாற வேண்டும். மாணவர் ஒழுக்கம் சார்ந்து புதிய நெறிமுறை வழிகாட்டுதல்களை அரசு அறிவிக்கலாம்.மாணவர்களின் ஒழுக்கக் குறைவு பள்ளிக் கல்வியின் துறையின் தோல்வி மட்டுமல்ல, அது குடும்பம், அரசு, சமூக அமைப்புகள் அனைத்தும் இணைந்துள்ள ஒரு சமூகத்தின் பிரதிபலிப்பே ஆகும். அறிவும் ஒழுக்கமும் கல்வியுடன் இணைந்தால் மட்டுமே ஒரு நல்ல மாணவர் உருவாக முடியும்.