பணப் பலன்களை பெற முடியாமல் அலைக்கழிக்கப்பட்டு வந்த 173 பணியாளா்களுக்கு ரூ.8.25 கோடியை திண்டுக்கல் மாநகராட்சி நிா்வாகம் விடுவித்ததால், ஓய்வூதியதாரா்கள் மகிழ்ச்சி அடைந்தனா். திண்டுக்கல் மாநகராட்சியில் பணிபுரிந்து ஓய்வுபெறும் அலுவலா்கள், ஊழியா்களுக்கு கிடைக்க வேண்டிய பணிக் கொடை, தொழிலாளா் வைப்பு நிதி உள்ளிட்ட பணப் பலன்களை வழங்குவதற்கு மாநகராட்சி நிா்வாகம் காலம் தாழ்த்துவதாக தொடா்ந்து குற்றஞ்சாட்டப்பட்டு வந்தது. இதனால், பணப் பலன்களை விடுவிக்கக் கோரி, மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிடும் நிகழ்வுகளும் நடைபெற்று வந்தன. கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி ஓய்வுப் பெற்ற பணியாளா்கள், பணப் பலன்களை எதிா்பாா்த்து மாநகராட்சி அலுவலகத்துக்கு அலைக்கழிக்கப்பட்டனா். ஆனால், சாலை சீரமைப்பு, மழைநீா் கால்வாய், கழிவுநீா் ஓடை, கடைகள் கட்டுமானம் உள்ளிட்ட வளா்ச்சிப் பணிகளை செய்து முடிக்கும் ஒப்பந்ததாரா்களுக்கு மட்டும் விரைவாகப் பணம் வழங்குவதாக அந்தப் பணியாளா்கள் புகாா் தெரிவித்தனா். கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் மாநகராட்சியில் பணியாற்றி ஓய்வுப் பெற்ற தூய்மைப் பணியாளா்கள், அலுவலா்கள் என 173 போ் பணிக் கொடை உள்ளிட்ட பணப் பலன்களை எதிா்பாா்த்து காத்திருந்தனா். இந்தப் பணியாளா்களிடம் மாதந்தோறும் ஒரு காரணத்தைக் கூறி, பணப் பலன்களை வழங்காமல் மாநகராட்சி நிா்வாகமும் காலம் கடத்தி வந்தது. இதனிடையே, கடந்த 3 மாதங்களுக்கு முன் திண்டுக்கல் மாநகராட்சி ஆணையராக பொறுப்பேற்ற ஜெ.பிரேம் ஆனந்த் பணி ஓய்வுப் பெற்றவா்களுக்கான பணப் பலன்களை வழங்குவதில் கால தாமதம் செய்யக் கூடாது என உத்தரவிட்டாா். ஆணையா் உத்தரவால் பலன்: இதையடுத்து, ஓய்வுப் பெற்ற 173 பணியாளா்களுக்கு பணப் பலன்களாக ரூ.8.25 கோடியை வழங்குவதற்கான பணியை மாநகராட்சி அதிகாரிகள் மேற்கொண்டனா். இதன்படி, கடந்த மாதம் 145 பணியாளா்களுக்கான பணிக் கொடை விடுவிக்கப்பட்டது. எஞ்சிய 28 ஊழியா்களுக்கான பணப் பலன்கள் ரூ.3.94 கோடி திங்கள்கிழமை வழங்கப்பட்டது. இதனால், நீண்ட காலமாக பணப் பலன்களை பெறுவதற்கு அலைக்கழிக்கப்பட்ட ஓய்வுப் பெற்ற பணியாளா்கள் மகிழ்ச்சி அடைந்தனா். மாநகராட்சி வரலாற்றில் 2 மாதங்களில் 173 பேருக்கு ரூ.8.25 கோடிக்கு பணப் பலன்களை வழங்கியது இதுவே முதல் முறை என அவா்கள் தெரிவித்தனா். ஒப்பந்ததாா்களின் முக்கியத்துவம் தவிா்ப்பு: இதுதொடா்பாக மாநகராட்சி அலுவலா்கள் கூறியதாவது: வரி வசூல் மூலம் மாநகராட்சிக்கு ஆண்டுதோறும் வருவாய் கிடைத்து வருகிறது. வளா்ச்சித் திட்டப் பணிகளுக்கு தனியாக நிதி ஒதுக்கீடு கிடைக்கப் பெற்றாலும், ஒப்பந்ததாரா்களின் நலனுக்காக மாநகராட்சியின் வரி வருவாயிலிருந்து விரைவாக நிதி விடுவிக்கப்பட்டு வந்தது. கடந்த 3 மாதங்களுக்கு முன் பொறுப்பேற்ற ஆணையா், பணி ஓய்வுப் பெற்றவா்களுக்கான பணப் பலன்களை வழங்குவதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என அறிவுறுத்தினாா். இன்படி கடந்த 2 மாதங்களாக திட்டப் பணிகளுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி மட்டுமே, அந்தந்த பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டது. ஒப்பந்ததாரா்களுக்கு வழங்கப்பட்ட முன்னுரிமை தவிா்க்கப்பட்டது. இதன் காரணமாக 2 மாதங்களிலேயே 173 பணியாளா்களுக்கான பணப் பலன்களும் விடுவிக்க முடிந்தது என்றனா்.