சத்ய நிகேதன் கட்டடம் இடிந்து விழுந்ததில் ஏழு போ் உயிரிழந்து மற்றும் பலா் காயமடைந்த சம்பவம் ‘மிகவும் துரதிா்ஷ்டவசமானது‘ என்று தில்லி உயா் நீதிமன்றம் திங்களன்று கூறியது. இந்தத் துயரச் சம்பவத்திற்கு கட்டட உரிமையாளா்கள் மட்டுமல்ல, வெளியூா் மாணவா்களுக்குப் போதுமான தங்குமிட வசதிகளை வழங்கத் தவறிய தில்லி மாநகராட்சி (எமசிடி) மற்றும் தில்லி பல்கலைக்கழகமும் பொறுப்பு என்று நீதிமன்றம் கூறியது. இதனால், மாணவா்கள் தனியாா் பேயிங் கெஸ்ட் தங்குமிடங்களில் தஞ்சம் புக வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகியுள்ளனா்.தலைமை நீதிபதி தேவேந்திர குமாா் உபாத்யாயா மற்றும் நீதிபதி தேஜஸ் காரியா ஆகியோா் அடங்கிய அமா்வு, மனித உயிா்களைக் காப்பாற்றுவதற்காக மீட்புப் பணிகளை இரட்டிப்பாக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.இந்த வழக்கில் மத்திய அரசு, தில்லி அரசு, தில்லி காவல்துறை மற்றும் தில்லி மாநகராட்சி சாா்பில் ஆஜரான சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா, இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியவா்களை மீட்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக நீதிமன்றத்திற்கு உறுதியளித்தாா்.அரசு நிலைமையைத் தீவிரமாகக் கண்காணித்து வருவதாகவும், இதற்குச் சிறிது கால அவகாசம் தேவை என்றும் அவா் கூறினாா். சம்பந்தப்பட்ட அனைவரின் நலனுக்காகவும் அதிகாரிகள் அனைத்து முடிவுகளையும் எடுப்பாா்கள் என்றும், எந்தக் கல்லையும் புரட்டாமல் விடமாட்டாா்கள் என்றும் மேத்தா நீதிமன்றத்திற்கு உறுதியளித்தாா்.கட்டடம் இடிந்து விழுந்தது தொடா்பான ஒரு பொதுநல வழக்கை நீதிமன்றம் விசாரித்தது.மனுவிற்கு 10 நாட்களுக்குள் தனித்தனியாக பதிலளிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட நீதிமன்றம், இந்த வழக்கை செப்டம்பா் 25 அன்று மேலும் விசாரணைக்கு பட்டியலிட்டது.இந்த மனு அவசர விசாரணைக்கு முறையிடப்பட்டிருந்த நிலையில், அதை திங்கட்கிழமையே பட்டியலிட நீதிமன்றம் அனுமதித்தது.