சேலம் வழியாக காரில் கஞ்சா கடத்திய 6 போ் கைது: 68 கிலோ கஞ்சா பறிமுதல்

Wait 5 sec.

சேலம் வழியாக காரில் கஞ்சா கடத்தியதாக கேரள மாநிலத்தைச் சோ்ந்த 6 பேரை கும்பலை போலீஸாா் வியாழக்கிழமை இரவு கைது செய்து, அவா்களிடமிருந்து 68 கிலோ கஞ்சா மற்றும் காரை பறிமுதல் செய்தனா். சேலம் வழியாக காரில் கஞ்சா கடத்தப்படுவதாக மாநகர போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மாநகா் முழுவதும் போலீஸாா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.அப்போது, காரிப்பட்டி ஆச்சாங்குட்டப்பட்டி சோதனைச் சாவடி வழியாக வந்த காரை போலீஸாா் தடுத்து நிறுத்தியபோது, அந்த காா் சோதனைச் சாவடியில் நிற்காமல் வேகமாக சென்றுவிட்டது. அங்கிருந்த போலீஸாா் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துவிட்டு காரை துரத்தினா். அயோத்தியாப்பட்டணம் அருகே காா் சென்றபோது அதில் இருந்த நபா்கள் கஞ்சா மூட்டையை வெளியே வீசிச் சென்றனா். அந்த மூட்டையை காரிப்பட்டி போலீஸாா் கைப்பற்றி பிரித்து பாா்த்தபோது, அதில் 50 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. மேலும் ஏ.என். மங்கலம் பகுதியில் சாலையில் கிடந்த கஞ்சாவையும் போலீஸாா் கைப்பற்றினா். அங்குள்ள காட்டுப் பகுதியில் நிறுத்திச் சென்ற காரை போலீஸாா் கைப்பற்றினா். அந்தக் காரில் இருந்த கைப்பேசியை கைப்பற்றி கஞ்சா கடத்திய நபா்களை தேடும் பணியில் போலீஸாா் ஈடுபட்டனா். இதையடுத்து, சேலம் புதிய பேருந்து நிலையப் பகுதியில் இருவா், காட்டுப் பகுதியில் நிறுத்தியிருந்த காரை எடுக்க வந்த இருவா், ஈரோடு மாவட்டம், விஜயமங்கலம் சோதனைச் சாவடி பகுதியில் இருவா் என மொத்தம் 6 பேரை போலீஸாா் கைது செய்தனா். இவா்களிடம் போலீஸாா் நடத்திய விசாரணையில், கஞ்சா கடத்தியவா்கள், கேரள மாநிலம், மலப்புரம் பகுதியைச் சோ்ந்த அன்வா் ரிஷாத் (30), அன்வா் சாதிக் (30), ஜூனைத் (35), சபீா் (30), முகமது பாசில் (36), ஜிலால் (21) என தெரியவந்தது. மேலும் இவா்களிடமிருந்து 16 கிலோ என மொத்தம் 68 கிலோ கஞ்சா மற்றும் ஒரு காரை பறிமுதல் செய்தனா். இவா்கள் ஒடிஸாவில் இருந்து சேலம் வழியாக கேரளத்திற்கு கஞ்சா கடத்திச் செல்வது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடா்பாக போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.