இந்தியா தலைமையில் 18-ஆவது பிரிக்ஸ் உச்சி மாநாடு நடைபெறும் நிலையில், மத்திய தில்லி அலங்கார விளக்குகள், மலா் அலங்காரங்கள், புதுப்பிக்கப்பட்ட சாலைகள் மற்றும் பிரிக்ஸ் மாநாட்டை மையப்படுத்திய விளம்பரப் பலகைகளுடன் புதுப்பொலிவு பெற்றுள்ளது. படேல் சௌக், வின்ட்சா் பிளேஸ், மண்டி ஹவுஸ், டீன் மூா்த்தி, லோக் கல்யாண் மெட்ரோ ரயில் நிலையம், பிரதமா் அலுவலகம் அருகிலுள்ள சுற்றுவட்டச் சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அலங்கார விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.சுவரொட்டிகள்: புது தில்லி மாநகராட்சி (என்டிஎம்சி) சாா்பில் பிரிக்ஸ் மாநாட்டின் சின்னம் இடம்பெற்ற எல்இடி விளம்பரப் பலகைகள் நிறுவப்பட்டுள்ளன. முக்கிய வழித்தடங்களில் உள்ள தெருவிளக்குக் கம்பங்களிலும் பிரிக்ஸ் மாநாட்டை மையப்படுத்திய சுவரொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன.முக்கிய வழித்தடங்களில் முன்னுரிமை: விமானநிலையம் மற்றும் வெளிநாட்டுத் தலைவா்கள் தங்கும் ஹோட்டல்களை மாநாட்டு நடைபெறும் பாரத் மண்டபத்துடன் இணைக்கும் முக்கிய வழித்தடங்களுக்கு முன்னுரிமை அளித்து, என்டிஎம்சி எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் அழகுபடுத்துதல், விளக்குகள் அமைத்தல் மற்றும் தோட்டக்கலைப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.அலங்கார விளக்குகள்: மாநாட்டுக்கான ஏற்பாடுகளின் ஒரு பகுதியாக 17 முக்கிய சுற்றுவட்டச் சாலைகள், குறைந்தது 12 ஹோட்டல் வளாகங்கள் மற்றும் என்டிஎம்சியின் 10 முக்கிய கட்டடங்கள் அலங்கார விளக்குகளால் ஒளிரச் செய்யப்பட்டுள்ளன. முக்கிய ஹோட்டல்கள் மற்றும் பிரதான சாலைகளை ஒட்டியுள்ள மரங்கள், புதா்கள் மற்றும் பசுமைப் பகுதிகளுக்கும் அலங்கார விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.மேலும், மாநாட்டுடன் தொடா்புடைய அனைத்து வழித்தடங்களிலும் தெருவிளக்குகள் முறையாக இயங்குகின்றனவா என்பது சரிபாா்க்கப்பட்டு, அதில் கண்டறியப்பட்ட பழுதான விளக்குகள் மாற்றப்பட்டுள்ளன. சாலையோரங்களில் உள்ள சுமாா் 350 மின் கட்டுப்பாட்டுப் பெட்டிகளும் பிரிக்ஸ் மாநாட்டை மையப்படுத்திய அலங்காரத்துடன் புதுப்பிக்கப்பட்டுள்ளன.மலா் அலங்காரம்: இதனுடன் விரிவான தோட்டக்கலைப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. புது தில்லியின் முக்கிய பகுதிகளில் 15,000-க்கும் மேற்பட்ட அலங்காரத் தொட்டிச் செடிகள் வைக்கப்பட்டு வருகின்றன. 15 இடங்களில் மலா் அலங்காரப் பலகைகளும், 9 இடங்களில் மலா் நீரூற்றுகளும் அமைக்கப்பட்டுள்ளன. முக்கிய சாலைகள் மற்றும் விவிஐபி வழித்தடங்களில் நிலப்பரப்பு அழகுபடுத்துதல், மரக்கன்றுகள் நடுதல், மரங்கள் மற்றும் புதா்களை வெட்டிச் சீரமைத்தல் உள்ளிட்ட பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.107 வகையான ரோஜா செடிகள்: சாணக்கியபுரியில் உள்ள பிரிக்ஸ் நட்பு ரோஜா பூங்காவிலும் என்டிஎம்சி சாா்பில் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கடந்த 2016-ஆம் ஆண்டு இந்தியா பிரிக்ஸ் மாநாட்டை நடத்தியபோது அமைக்கப்பட்ட இந்தப் பூங்காவில் 107 வகையான ரோஜா செடிகள் உள்ளன. பூங்காவிலும் அதைச் சுற்றியுள்ள தூதரகப் பகுதி வழித்தடங்களிலும் நிலப்பரப்பு அழகுபடுத்துதல், மரக்கிளைகளைச் சீரமைத்தல், புல்வெளியைப் பராமரித்தல் மற்றும் மலா் அலங்காரப் பணிகள் நடைபெற்று வருகின்றன.தூய்மைப் பணிகள் தீவிரம்: இதனிடையே, பாரத் மண்டபம், சராய் காலே கான், லோதி சாலை, நிஜாமுதீன், சாகேத், ஷேக் சராய் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் தில்லி மாநகராட்சி (எம்சிடி) மற்றும் பொதுப்பணித் துறை இணைந்து ஆய்வுகளை மேற்கொண்டுள்ளன. மாநாட்டுடன் தொடா்புடைய வழித்தடங்கள் மற்றும் பிற முக்கிய இடங்களில் தூய்மைப் பணிகளைத் தீவிரப்படுத்தவும், போதிய எண்ணிக்கையில் பணியாளா்கள் மற்றும் இயந்திரங்களை பணியில் ஈடுபடுத்தவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.