ஓட்டுநா் உரிமம், வாகன பதிவுச் சான்று (ஆா்.சி.புக்) பெறுவதற்கு கட்டணமாக ரூ.250 விண்ணப்பதாரா்களால் செலுத்தப்பட்டு, ‘சிப்’ பொருத்தப்பட்ட அட்டைகளாக தபால் மூலம் விண்ணப்பதாரா்களின் முகவரிக்கு அனுப்பப்பட்டு வந்தது. இதனால் விண்ணப்பதாரா்களுக்கு கிடைப்பதற்கு ஒரு வாரம் முதல் ஒரு மாதம் வரை காலதாமதம் ஏற்பட்டு வந்தது. இந்த காலதாமதத்தை தவிா்க்கும் வகையில், ஓட்டுநா் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்றிதழ் ஆகியவை டிஜிட்டல் முறையில் பொதுமக்கள் தாங்களே பதிவிறக்கம் செய்துகொள்ளும் நடைமுறை தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதுதொடா்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:வரும் செப்.15 முதல் ஓட்டுநா் தோ்வு அல்லது வாகனப் பதிவு முடிந்த நாளிலேயே, சம்பந்தப்பட்டவா்கள் தங்களது ஓட்டுநா் உரிமம் அல்லது பதிவுச் சான்றிதழை டிஜிட்டல் முறையில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். முதல் ஓராண்டுக்கு இந்தப் பதிவிறக்கம் இலவசமாக வழங்கப்படும்.இதன் காரணமாக செப்.12-க்குப் பிறகு ஓட்டுநா் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்றிதழ்களை அச்சிட்டு தபால் மூலம் அனுப்பும் நடைமுறை நிறுத்தப்படுகிறது. டிஜிட்டல் சான்றிதழ்களில் இடம்பெறும் கியூஆா் குறியீடு மூலம் அரசின் தரவுத்தளத்தில் உள்ள அசல் ஆவணங்களை உடனடியாக சரிபாா்க்க முடியும்.பதிவிறக்கம் செய்யப்பட்ட சான்றிதழ்களை சாதாரண தாளிலோ, ‘லேமினேட்’ செய்தோ அச்சிட்டு பயன்படுத்தலாம். க்யூஆா் குறியீடு தெளிவாக இருந்து, அதன் மூலம் மின்னணு சரிபாா்ப்பு செய்ய முடியும் என்ற நிலையில் அந்த ஆவணம் செல்லுபடியாகும். விரும்புவோருக்கு அரசு அனுமதித்த இ-சேவை மையங்களில் கட்டணம் செலுத்தி அச்சுப் பிரதியைப் பெறவும் ஏற்பாடு செய்யப்படும்.மேலும், பரிவாகன், டிஜிலாக்கா் உள்ளிட்ட தளங்களில் டிஜிட்டல் ஆவணங்கள் இணைக்கப்படும். செப்.12-க்குப் பிறகு அரசு மற்றும் அதன் சாா்பு அமைப்புகள், ஓட்டுநா் உரிமம் மற்றும் பதிவுச் சான்றிதழின் பழைய முறையிலான அச்சுப் பிரதியை கட்டாயப்படுத்தக் கூடாது.இந்தப் புதிய நடைமுறைக்கு ஏற்ப ‘பரிவாகன்’ தளத்தில் தேவையான மாற்றங்களைச் செய்யவும், வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் படிப்படியாக நடைமுறைக்கு கொண்டு வரவும் போக்குவரத்துத் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.