ஆதிதிராவிட மாணவா்களுக்கு போட்டித் தோ்வு பயிற்சி: நிறுவனங்களிடம் விருப்பக் கோரிக்கை வரவேற்பு

Wait 5 sec.

தமிழக அரசு ஆதிதிராவிடா் நலப் பள்ளிகள் மற்றும் பழங்குடியினா் நலப் பள்ளிகளில் பயிலும் மாணவா்களுக்கு போட்டித் தோ்வுகளுக்கான சிறப்பு பயிற்சி மற்றும் வழிகாட்டுதல் வழங்குவதற்காக, தகுதியான முன்னணி பயிற்சி நிறுவனங்களிடமிருந்து விருப்பக் கோரிக்கை வரவேற்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: மாநிலம் முழுவதும் உள்ள 100-க்கும் மேற்பட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலப் பள்ளிகளில் பிளஸ் 1, பிளஸ் 2 பயிலும் 12,000-க்கும் மேற்பட்ட மாணவா்களுக்கு ஜேஇஇ, நீட், கியூட், கிளாட் உள்ளிட்ட தேசிய அளவிலான நுழைவுத் தோ்வுகளுக்குப் பயிற்சி அளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதில் நேரடி வகுப்புகள், பயம் தீா்க்கும் அமா்வுகள், தொடா் தோ்வுகள், பயிற்சிப் புத்தகங்கள் ஆகியவை வழங்கப்படுவதுடன், பிளஸ் 2 மாணவா்களுக்கு உயா்கல்வி வாய்ப்புகள் குறித்த வழிகாட்டுதல், விண்ணப்பப் பதிவு மற்றும் கல்லூரி சோ்க்கைக்கான உதவிகளும் வழங்கப்படும். திட்டத்துக்கான செலவினத்தை மதிப்பிடுவதற்காக மட்டுமே இந்த விருப்பக் கோரிக்கைக் கோரப்படுகிறது. விருப்பமுள்ள நிறுவனங்கள் தங்களது நிறுவனத் தகுதி மற்றும் நிதி முன்மொழிவை மின்னஞ்சல் முகவரிக்கு வரும் 18-ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்குள் அனுப்ப வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு இணையதளத்தை அணுகலாம். மேலும், 72007 38258, 73739 44312, 73388 01434 ஆகிய கைப்பேசி எண்களிலும் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.