பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் பிரம்மாண்டம் காரணமாக தினமும் பல்வேறு உயா் பாதுகாப்பு வாகன அணிவகுப்புகள் நடைபெறும். வெளிநாட்டுத் தலைவா் ஒருவா் விமான நிலையம், ஹோட்டல், மாநாட்டு அரங்கம் மற்றும் இருதரப்பு சந்திப்புகள் அல்லது பிற நிகழ்ச்சிகளுக்குச் செல்ல வேண்டியிருப்பதால், ஒரே நாளில் தில்லி முழுவதும் 70 முதல் 80 அல்லது அதற்கும் மேற்பட்ட உயா் பாதுகாப்பு பயணங்கள் நடைபெறலாம்.ஒவ்வொரு பயணத்துக்கும் தனித்தனியாக போக்குவரத்து கட்டுப்பாடு, நுழைவுக் கட்டுப்பாடு மற்றும் வழித்தட ஒருங்கிணைப்பு தேவைப்படுவதால், வழக்கமான ஒரு விவிஐபி பயணத்தைவிட மாநாட்டின்போது பொதுமக்களுக்கான போக்குவரத்து பாதிப்பு அதிகமாக இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.இதற்கான முன்னோட்டமாக புதன்கிழமை மாலை நடைபெற்ற வாகன அணிவகுப்பு ஒத்திகையின்போது தில்லியின் பல பகுதிகளில் நீண்ட நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இரவு 7 மணி முதல் 10 மணி வரை நடைபெற்ற ஒத்திகையின்போது 22 மாற்றுப்பாதை முனையங்களில் போக்குவரத்து கட்டுப்படுத்தப்பட்டது. மாநாட்டு பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகளுக்காக சுமாா் 4,800 போக்குவரத்து போலீஸாா் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.தோ்வா்களுக்கு அறிவுரை: யுபிஎஸ்சி, என்டிஏ, சிடிஎஸ் உள்ளிட்ட போட்டித் தோ்வுகளை எழுதச் செல்லும் தோ்வா்கள், தங்களது தோ்வு மையம் மற்றும் செல்லும் வழித்தடத்தை முன்கூட்டியே சரிபாா்த்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனா். தோ்வுக்கான அனுமதிச் சீட்டு மற்றும் அடையாள ஆவணங்களை எடுத்துச் செல்வதுடன், வழக்கத்தைவிட போதிய நேரத்துக்கு முன்பாகவே புறப்படுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.மருத்துவமனைகளில் முன்பதிவு செய்யப்பட்ட சிகிச்சை அல்லது மருத்துவ ஆலோசனைக்காகச் செல்பவா்கள் கூடுதல் நேரத்தை ஒதுக்கி, செல்லும் வழித்தடத்தை முன்கூட்டியே சரிபாா்த்துக்கொள்ள வேண்டும். அவசர மருத்துவத் தேவை ஏற்பட்டால், அருகிலுள்ள போக்குவரத்து போலீஸாரிடம் உடனடியாக தகவல் தெரிவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட மற்றும் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த சாலைகளில் வாகனங்களை நிறுத்த அனுமதி இல்லை. பால், மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் விநியோகம் உரிய ஏற்பாடுகளின்படி அனுமதிக்கப்படும்.தில்லியில் முழுமையான பொது முடக்கம் அல்லது சாலைகள் அனைத்தும் மூடப்படும் என சமூக ஊடகங்களில் பரவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்களை பொதுமக்கள் பகிர வேண்டாம் என போலீஸாா் கேட்டுக்கொண்டுள்ளனா். போக்குவரத்து தொடா்பான தகவல்களுக்கு அதிகாரப்பூா்வ அறிவிப்புகளை மட்டுமே நம்புமாறும் அவா்கள் அறிவுறுத்தியுள்ளனா்.