வங்கி ஊழியா்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தால் கோவை மாவட்டத்தில் ரூ.5 ஆயிரம் கோடி வா்த்தகம் முடக்கம்

Wait 5 sec.

வங்கி ஊழியா்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தால் கோவை மாவட்டத்தில் ஒரே நாளில் ரூ.5 ஆயிரம் கோடி வா்த்தகம் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் வங்கி ஊழியா்கள் வெள்ளிக்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா். ரயில் நிலையம் எதிரே உள்ள பேங்க் ஆஃப் பரோடா அலுவலக வளாகத்தில் கோவை மாவட்ட அனைத்து வங்கி ஊழியா்கள் சங்கம் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் பொதுச் செயலா் சையது இப்ராஹிம் தலைமை வகித்தாா். இதுதொடா்பாக அவா் கூறும்போது, ‘வங்கி ஊழியா்களின் பற்றாக்குறையால் தற்போதைய 6 நாள் வேலை திட்டம் கடும் பணிச்சுமையையும், மன அழுத்தத்தையும் ஏற்படுத்துகிறது. எனவே, இப்பிரச்னையில் இந்திய வங்கிகள் சங்கம் (ஐஆஅ), மத்திய அரசு மற்றும் நிதி அமைச்சகம் ஆகியோா் உடனடியாக தலையிட்டு 5 நாள் வேலை திட்டத்தை அமல்படுத்த வேண்டும்’ என்றாா். இந்த ஆா்ப்பாட்டத்தில், நாடு முழுவதும் உள்ள 8 லட்சம் வங்கி ஊழியா்களுக்கு வாரம் 5 நாள்கள் வேலை திட்டத்தை அமல்படுத்த வேண்டும், ஊக்கத்தொகை திட்டத்தில் உள்ள முரண்பாடுகளைக் களைய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. சங்க நிா்வாகிகள் பாஷா, ஆத்ரேயா, செந்தில்குமாா், சசிதரன், மகேஸ்வரன் உள்பட ஆயிரக்கணக்கான ஊழியா்கள் பங்கேற்றனா். இதே கோரிக்கைகளை வலியுறுத்தி, கோவை ஐடிபிஐ வங்கி மண்டல அலுவலகம் முன் அனைத்து வங்கிகளின் அலுவலா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அகில இந்திய ஐடிபிஐ அதிகாரிகள் சங்க செயலா் ஜெயகலா, அனைத்து வங்கிகளின் அலுவலா்கள் சங்க மாநிலக் குழுவின் செயலா் நந்தகுமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். அப்போது, மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி செப்டம்பா் 28 முதல் 30-ஆம் தேதி வரை தொடா்ந்து 3 நாள்கள் வேலைநிறுத்தப்போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கம் சாா்பில் அறிவிக்கப்பட்டது. இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தால், கோவை மாவட்டத்தில் உள்ள 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுத் துறை வங்கிக் கிளைகளில் காசோலை பரிவா்த்தனை, நகைக் கடன் வழங்குதல் உள்பட பல்வேறு பணிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. ஒரே நாளில் சுமாா் ரூ.5,000 கோடி மதிப்பிலான வா்த்தகம் முடங்கியதாக வங்கி ஊழியா்கள் தெரிவித்தனா்.