டிக்கெட் முன்பதிவு: கையறு நிலையில் ரயில் பயணிகள்!

Wait 5 sec.

ரயில் பயணத்துக்காக டிக்கெட் முன்பதிவு செய்யும்போது ஐஆர்சிடிசி இணையதளத்தில் தோன்றும் ஒரு புதிய பிரச்னை பயணிகளிடையே பெரும் சிரமத்தையும் அதிருப்தியையும் கடும் எரிச்சலையும் ஏற்படுத்துவதாக இருக்கிறது. பேருந்து பயணத்தைவிட சற்று நிம்மதியாகவும் வசதியாகவும் செல்ல முடியும் என்பதாலும் தனியார் பேருந்துகளுடன் ஒப்பிட கட்டணமும் சற்றுக் குறைவு என்பதாலும் மக்கள் ரயில் பயணத்தை விரும்புகின்றனர். அல்லாமல், குறிப்பாக முதியவர்கள், சிறு குழந்தைகள் வைத்திருக்கும் பெற்றோருக்கு ரயிலில் செல்வது மட்டுமே பத்திரமானதாக இருக்கிறது என்பதால் பயணத்துக்கான டிக்கெட்களை முன்பதிவு செய்கின்றனர்.ஆனால், இந்த ரயில் டிக்கெட் முன்பதிவு என்பதுதான் , அதுவும் விழாக் காலங்களில் செல்ல முன்பதிவு செய்யும்போது, உண்மையில் இப்போது குதிரைக் கொம்பாக மாறிவருகிறது. ஏனெனில், ரயில் டிக்கெட் கிடைப்பது இப்போது பெரும் சவாலாக இருக்கிறது. ரயில்களில் பயணிப்பதற்குத் தற்போது, 60 நாள்களுக்கு முன்பாக டிக்கெட் முன்பதிவு தொடங்குகிறது. ஒவ்வொரு நாளும் காலை 8 மணிக்கு இதற்கான முன்பதிவு தொடங்குகிறது. அதேபோல தட்கல் டிக்கெட் முன்பதிவுக்கு, பயணிப்பதற்கு முந்தைய நாள் டிக்கெட் முன்பதிவு செய்யலாம். ஏசி பெட்டிகளுக்கு காலை 10 மணிக்கும் ஸ்லீப்பர் பெட்டிகளுக்கு காலை 11 மணிக்கும் தொடங்குகிறது. இந்த நேரங்களில் ரயில் டிக்கெட் முன்பதிவுக்கு ஐஆர்சிடிசியின் அதிகாரப்பூர்வ பக்கத்தைத் திறப்பதே (லாக் - இன் செய்வது) கொஞ்சம் சவால்தான். சரியான நேரத்திற்குக் கணக்கைத் திறந்து, ரயில் மற்றும் பயணிகளின் தேவையான விவரங்களைப் பதிவு செய்துவிட்டு 'புக் நவ்' (book now) என்பதை கிளிக் செய்தால் இதுவரை இல்லாத அளவுக்கு ஓர் 'அறிவிப்பு' வருகிறது. ஐஆர்சிடிசி இணையதளத்தில்தோன்றும் 'ஹை லோட்' பிரச்னை.... "We are experiencing High Load - please retry" என்பதுதான் அது. "நாங்கள் அதிகப்படியான சுமையை எதிர்கொள்கிறோம் - தயவுசெய்து மீண்டும் முயற்சிக்கவும்" என்பதே அதன் தமிழாக்கம். அதாவது ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான பயணிகள் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது இணைய சர்வர் அதிக சுமையை எடுத்துக்கொள்வதால் இந்த பிரச்னை வருகிறது என்பதாகப் புரிந்துகொள்ளலாம். மொபைலில் ஐஆர்சிடிசி செயலியிலும் சரி, கணினியில் ஐஆர்சிடிசி இணையதளத்திலும் சரி இதே நிலைதான்.இந்த மாதிரி சமயத்தில், நாம் தொடர்ந்து முயற்சிக்கும்போது சில நிமிடங்கள் கழித்து டிக்கெட் முன்பதிவு செய்யும் ஆப்ஷன் வந்தாலும் பெரும்பாலும் அந்த நேரத்தில் நமக்குத் தேவையான டிக்கெட்டுகள் தீர்ந்துபோய் விட்டிருக்கும். சமீபமாக பலரும் இந்த பிரச்னையை எதிர்கொள்வதாகக் கூறுகிறார்கள்.ரயில்வே கவனத்தில் கொள்ளுமா?ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய முன்பு 4 மாதங்கள் - 120 நாள்கள் என்றிருந்து பின்னர் 3 மாதங்களாக்கப்பட்டு, அப்படியே 2024 இறுதியில் அது 60 நாள்களாகக் குறைக்கப்பட்டிருக்கிறது. இதனால் ரயில் டிக்கெட் முன்பதிவுக்கு கடும் போட்டி நிலவுகிறது. அதேபோல வேலை, படிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் நகரப் பகுதிகளில் வசிப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாலும் டிக்கெட் முன்பதிவுக்கான போட்டி இருக்கிறது. ஆனால், பயணிகளின் தேவைக்கேற்ப ரயில்களின் எண்ணிக்கையோ பெட்டிகளின் எண்ணிக்கையோ பெரிதாக அதிகரிக்கப்படவில்லை. சரி, தற்போதைக்குக் கிடைக்கும் ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்யலாமென்றால் இப்படியொரு புதிய பிரச்னை. பயணிகள் எளிதாக டிக்கெட் முன்பதிவு செய்யும் வகையில் ஐஆர்சிடிசி இணையதளம் மேம்படுத்தப்பட்டு புதிய இணையதளம் கொண்டுவரப்படும் என்று மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவித்து, அதன்படி கடந்த ஜூலை 15 ஆம் தேதி 'மேம்படுத்தப்பட்ட ஐஆர்சிடிசி இணையதளம்' அறிமுகமானது குறிப்பிடத்தக்கது. மேம்படுத்தப்பட்ட இணையதளத்திலும், டிக்கெட் முன்பதிவுக்கே உள்நுழைய முடியாத அளவுக்குதான் இருக்கிறது. தீபாவளி, பொங்கல் போன்ற விழாக் காலங்களில் மக்கள், சொந்த ஊர்களுக்குச் செல்ல டிக்கெட் முன்பதிவு செய்யும்போது இதுபோன்ற பிரச்னையால் பெரும்பாலும் டிக்கெட் கிடைக்காத நிலையே இருக்கிறது. டிக்கெட் முன்பதிவு செய்வோரின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது அதற்கேற்ப இணையதளத்தில் தேவையான தொழில்நுட்ப வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும். ஆனால் புதிய இணையதளத்திலும் இதுபோன்ற பிரச்னை வருவது ரயில் பயணிகள் மத்தியில் கடும் சிரமத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு காரணங்களால் தற்போது டிக்கெட் முன்பதிவு செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் ரயில்வே இதுகுறித்து கவனத்தில் கொண்டு இணையதள பிரச்னையை சரிசெய்ய வேண்டும் என்பதே ரயில் பயணிகளின் எதிர்பார்ப்பு. Passengers facing IRCTC website server issues when booking train tickets சென்னை அருகே சர்வதேச விளையாட்டு நகரம்!சாத்தியமும் அவசியமும்!!