243 பயணிகளுடன் இந்தோனேசிய கப்பல் மாயம்: 103 பேர் மீட்பு!

Wait 5 sec.

இந்தோனேசியாவின் ஜாவாவிலிருந்து போர்னியோவிற்கு 243 பயணிகளை ஏற்றிச் சென்ற கப்பல் ஒன்று மோசமான வானிலை காரணமாக மாயமான நிலையில், அந்தக் கப்பலில் இருந்து 103 பேர் மீட்கப்பட்டதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இதில், ஒருவர் பலியானதாகக் கூறப்படுகிறது. கிழக்கு ஜாவாவில் உள்ள சுராபயா தீவிலிருந்து நேற்று புறப்பட்ட ‘விர்கோ டிரான்ஸ் போர்ட் 8’ என்கிற பயணிகள் மற்றும் சரக்குக் கப்பல் பாஞ்சர்மசின் திசையில் சென்று கொண்டிருந்தபோது இன்று அதிகாலை கப்பல் நிறுவனத்துடனான தொடர்பை இழந்தது. பாஞ்சர்மசின் பகுதியில் இருந்து சுமார் 150 கி.மீ. தொலைவில் உள்ள ஜாவா கடல் பகுதியில் கடைசியாக அந்தக் கப்பலின் சிக்னல் கிடைத்த நிலையில், அதன் பின்னர் மாயமானது. இதனைத் தொடர்ந்து, கடற்படையினர் மற்றும் காவல்துறையினருடன் இணைந்து கப்பல் நிறுவனம் சார்பில் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. இதுதொடர்பாகப் பேசிய மீட்புப் படையினர், பாதிக்கப்பட்டவர்களைத் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்தனர். இந்த நிலையில், மோசமான வானிலை காரணமாக கப்பலில் நீர் புகுந்ததாகக் கூறப்படும் நிலையில், தற்போது வரை 103 பயணிகள் வரை வெற்றிகரமாக மீட்கப்பட்டதாகவும், மீட்கப்பட்டவர்களில் ஒருவர் பலியானதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கப்பலில் இருந்த மற்ற பயணிகளைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து முகமைகளும் ஒருங்கிணைந்து செயல்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 17,000-க்கும் மேற்பட்ட தீவுகளைக் கொண்ட இந்தோனேசியாவில், போக்குவரத்து மற்றும் சுற்றுலாவுக்கு படகுகள் மற்றும் கப்பல்களையே மக்கள் பெரிதும் நம்பியுள்ளனர். அதேபோல, அங்கு கப்பல் விபத்துகளும் சகஜமாக நடைபெறக்கூடியதே. மோசமான பாதுகாப்புத் தரநிலைகள் மற்றும் வானிலை காரணமாக இதுபோன்ற விபத்துகள் அடிக்கடி நிகழ்கின்றன. சமீப மாதங்களில் அங்கு ஏற்பட்ட பல படகு விபத்துகள் இந்த அபாயங்களைச் சுட்டிக்காட்டியுள்ளன. கடந்த மாதம் கூட, பாலிக்கு அருகில் உள்ள லோம்போக் ஜலசந்தி பகுதியில் ஏற்பட்ட படகு விபத்தில் ஒருவர் பலியாகி, 5 பேர் காணாமல் போயினர். 211 பேர் மீட்கப்பட்டனர். ஜூலை மாதம், செலாயார் தீவு அருகே 70-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்ற படகு ஒன்று மூழ்கியது. அதேபோல, முன்னர் எரிமலை வெடிப்புப் பற்றி செய்தி சேகரிக்கச் சென்ற 5 பத்திரிகையாளர்கள் உள்பட 8 பேரை ஏற்றிச் சென்ற அதிவேகப் படகு எரிமலை அருகே சென்றபோது காணாமல் போனது. அதைத் தேடும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. Indonesian ship goes missing with 243 passengers: 103 rescued!ஹோர்முஸ் நீரிணையில் வணிகக் கப்பல் மீது தாக்குதல்: ஒருவர் பலி; மூவர் காயம்!