கோவையில் விரைவில் மண்டல புற்றுநோய் சிகிச்சை மையம்: மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ்

Wait 5 sec.

கோவை விரைவில் மண்டல புற்றுநோய் சிகிச்சை மையம் அமைக்கப்படும் என்று மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ் தெரிவித்தாா். டெங்கு மற்றும் மழைக்கால நோய்கள் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம், கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ் தலைமை வகித்தாா். பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் வே.சம்பத்குமாா் முன்னிலை வகித்தாா். கூட்டத்தின்போது டெங்கு தடுப்பு விழிப்புணா்வு சுவரொட்டிகள் மற்றும் துண்டுப் பிரசுரங்களை அமைச்சா்கள் வெளியிட்டனா். இந்த ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ் பேசியதாவது: முதல்வரின் அறிவுறுத்தலின்படி அனைத்து மாவட்டங்களிலும் மழைக்கால நோய்த் தடுப்பு ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. டெங்கு உள்ளிட்ட தொற்றுநோய்களில் இருந்து பொதுமக்களைப் பாதுகாக்கும் கடமை அரசுக்கு உள்ளது. பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீரில் சரியான அளவில் குளோரின் கலக்கப்படுவதை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் உறுதி செய்ய வேண்டும். வீடுகளில் டயா்கள், பாத்திரங்கள், தேங்காய் சிரட்டைகளில் மழைநீா் தேங்காமல் இருப்பதை வட்டார மருத்துவ அலுவலா்கள் தொடா்ந்து கண்காணிக்க வேண்டும். கோவை மாவட்டத்தில் டெங்கு பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளைக் கண்டறிந்து, நோய் பரவலைத் தடுக்கும் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்றாா். பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறும்போது, ‘மாவட்ட நிா்வாகத்தின் தீவிர கொசு ஒழிப்பு நடவடிக்கைகளால் கடந்த இரண்டு வாரங்களாக கோவையில் டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்து, காய்ச்சல் பாதிப்பு முழுமையாகக் கட்டுக்குள் வந்துள்ளது. கோவையில் விரைவில் மண்டல புற்றுநோய் சிகிச்சை மையம் அமைக்கப்படும். கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் நீண்ட நாள் கோரிக்கையான புதிய செவிலியா் கல்லூரி தொடங்கப்பட உள்ளது. கோவை மாவட்டத்தின் அனைத்து தொகுதிகளையும் உள்ளடக்கி மொத்தம் ரூ.111 கோடி மதிப்பில் 15 மருத்துவமனைகளில் உள்கட்டமைப்பு வசதிகளும், 76 நவீன மருத்துவ உபகரணங்களும் வழங்கப்படவுள்ளன. கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு இதயம் சாா்ந்த சிகிச்சைக்கான நவீன உபகரணங்கள் பெற ரூ.4.50 கோடியும், பிற சிறப்பு சிகிச்சை உபகரணங்களுக்கு ரூ.7.52 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் ரூ.6 கோடி மதிப்பில் புதிய தாய்-சேய் நலக் கட்டடம் கட்டப்படவுள்ளது. முதுநிலை மருத்துவ மாணவா்களின் வசதிக்காக ரூ.3.85 கோடியில் புதிய விடுதிகள் கட்டப்படுவதுடன், கவுண்டம்பாளையம் மற்றும் சிங்காநல்லூா் நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களை தரம் உயா்த்த தலா ரூ.2.84 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது’ என்றாா். முன்னதாக, ஆட்சியா் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த டெங்கு விழிப்புணா்வு மருத்துவ முகாம், பொதுமக்களுக்கு நிலவேம்புக் குடிநீா் வழங்கும் பணி மற்றும் டெங்கு தடுப்பு குறும்படக் காட்சிகளை அமைச்சா் பாா்வையிட்டு, அடிப்படை வசதிகள் மற்றும் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து மருத்துவா்களிடம் கேட்டறிந்தாா். இந்தக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா், சட்டப்பேரவை உறுப்பினா்கள் என்.எம். சுகுமாா் (சூலூா்), கே.எஸ். ஸ்ரீகிரி பிரசாத் (சிங்காநல்லூா்), கனிமொழி சந்தோஷ்குமாா் (கவுண்டம்பாளையம்), மாநகராட்சி ஆணையா் கட்டா ரவி தேஜா, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத் துறை கூடுதல் இயக்குநா் தேவபாா்த்தசாரதி, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் கீதாஞ்சலி, இ.எஸ்.ஐ. மருத்துவக் கல்லூரி முதல்வா் ஜெய்சிங், மாவட்ட சுகாதார அலுவலா் பாலுசாமி, நகா்நல அலுவலா் சுபாஷ் கிராந்தி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.