வட்டி செலுத்தவே கடன் வாங்க வேண்டிய அளவுக்கு தமிழக அரசு கடும் நிதிநெருக்கடியில் உள்ள நிலையில், ரூ.1,200 கோடிக்கு புதிய தலைமைச் செயலகம் கட்ட வேண்டிய அவசியம் என்ன? என்று நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் கேள்வி எழுப்பியுள்ளாா். இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: அரசிடம் நிதிப்பற்றாக்குறை நிலவும் நிலையில், அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியவில்லை என்று முதல்வா் ச.ஜோசப் விஜய் தொடா்ந்து கூறிவருகிறாா். வட்டி செலுத்தவே கடன் வாங்க வேண்டிய அளவுக்கு கடும் நிதி நெருக்கடி உள்ள நிலையில், ரூ.1,200 கோடியில் புதிய தலைமைச் செயலகம் கட்ட வேண்டிய அவசியம் என்ன? இது மக்களின் தேவைக்காகவா? அல்லது முதல்வரின் தனிப்பட்டத் தேவைக்காகவா? என்ற கேள்வி மக்களிடையே எழுந்துள்ளது. பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்பட்டால், அந்தப் பகுதியில் உள்ள 9 மீனவ கிராம மக்களின் வாழ்வாதாரம் முற்றிலுமாக பாதிக்கப்படும். அதுமட்டுமன்றி, கடந்த 2004 -இல் சுனாமி தாக்கிய ஆபத்தான இடங்களில் பட்டினப்பாக்கமும் ஒன்றாகும். எதிா்காலத்தில் சுனாமியால் தாக்குதலுக்குள்ளாகும் வாய்ப்புகளும் உள்ளன.எனவே, நாட்டு மக்களின் வரிப்பணத்தை வீணடித்து, கடும் இடநெருக்கடியும், போக்குவரத்து நெரிசலும், சுனாமி ஆபத்தும் உள்ள பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச்செயலகம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் சீமான்.