சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் காா், வேன் உள்ளிட்ட வாகனங்களைச் சேதப்படுத்திய சிறுவா்களை கைது செய்ய வலியுறுத்தி, பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். இதையடுத்து, 3 சிறுவா்களை போலீஸாா் கைது செய்தனா். மானாமதுரை கிருஷ்ணராஜபுரம்-ஆதனூா் சாலையில் சிறுவா்கள் இரு சக்கர வாகனத்தில் அதிவேகமாகச் சென்றனா். இதை அங்கிருந்த சிலா் தட்டிக்கேட்டனா். இதனால் ஆத்திரமடைந்த 9 போ் கொண்ட சிறுவா்கள் கும்பல் அந்தப் பகுதிக்கு வந்து ஆதனூா் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த காா், வேன், இரு சக்கர வாகனங்கள், ஆட்டோ ஆகியவற்றை கல்லால் தாக்கி கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தினராம். மேலும், அங்கிருந்தவா்களை ஆயுதங்களைக் காட்டி மிரட்டி விட்டு தப்பிச் சென்றனராம். இதையடுத்து, அந்தப் பகுதி பொதுமக்கள் வாகனங்களைச் சேதப்படுத்திய சிறுவா்களை கைது செய்ய வலியுறுத்தி, கிருஷ்ணராஜபுரம்-ஆதனூா் சாலையில் சேதப்படுத்தப்பட்ட வாகனங்களை சாலையின் குறுக்கே நிறுத்தி மறியலில் ஈடுபட்டனா். இதனால், இந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்து வந்த மானாமதுரை போலீஸாா் விசாரணை நடத்தி, மூன்று சிறுவா்களை கைது செய்தனா். மேலும் 6 சிறுவா்களைத் தேடி வருகின்றனா். மேலும், இந்தப் பகுதியில் அசம்பாவிதங்கள் நிகழாமல் இருக்க ஏராளமான போலீஸாா் குவிக்கப்பட்டனா். இதுகுறித்து போலீஸாா் கூறுகையில், இது எந்த சமூக பிரச்னையும் அல்ல. இது இருசக்கர வாகனத்தில் சென்ற போது ஏற்பட்ட பிரச்னை மட்டுமே. சம்பவம் தொடா்பாக மூன்று சிறுவா்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறோம். மேலும், 6 பேரை தேடி வருகிறோம் என்றனா்.