திருக்கோவிலூா் அருகே 61 அடி உயர பாலமுருகன் சிலைக்கு கும்பாபிஷேகம்

Wait 5 sec.

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் அருகே கனகனந்தல் ஸ்ரீவள்ளி, தேவசேனா சமேத சிவசுப்பிரமணியன் சுவாமி கோயிலில் 61 அடி உயர பாலமுருகன் சிலைக்கு கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கனகனந்தல் கிராமத்தில் உள்ள ஸ்ரீவள்ளி, தேவசேனா சமேத சிவசுப்பிரமணிய சுவாமி கோயிலில் உள்ள மஹா கணபதி, மஹா மாரியம்மன், ஐயப்பன் மற்றும் 61 அடி உயர பாலமுருகன் சுவாமிக்கு அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகத்துக்காக திருப்பணிகள் நிறைவு பெற்று, கும்பாபிஷேக விழா தொடங்கியது. இதையொட்டி செப்.9-ஆம் தேதி காலை 8 மணிக்கு கணபதி ஹோமம், நவக்கிர ஹோமம், மாலை 6 மணிக்கு ஸ்ரீலட்சுமி ஹோமம், தீபாராதனை, விக்னேஷ்வர பூஜை, வாஸ்துசாந்தி, பிரவேசபலி நடைபெற்றது. சனிக்கிழமை மாலை 6 மணிக்கு யாகசாலை பூஜைகள், இரவு 9 மணிக்கு தீபாராதனை நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கு விக்னேஷ்வர பூஜை, கும்ப பூஜை, 8.30 மணிக்கு மூலமந்திர ஹோமம், மஹாபூா்ணாஹுதி, தீபாராதனை நடைபெற்றது. 9 மணிக்கு கலச புறப்பாடு, 9.30 மணிக்கு மஹா கணபதி, ஐயப்ப சுவாமிக்கு மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. 10.15 மணிக்கு ஸ்ரீவள்ளி, தேவசேனா சமேத சிவசிப்பிரமணிய சுவாமி மற்றும் 61 அடி உயர ஸ்ரீபாலமுருகன் சுவாமிக்கு மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து மஹா தீபாராதனை காண்பிக்கப்பட்டு, கும்பாஷேக தீா்த்த பிரசாதம் வழங்கப்பட்டது. இரவு 9 மணிக்கு வாணவேடிக்கையுடன் சுவாமி திருவீதி உலா நடைபெற்றது. விழாவில் கனகநந்தல் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களிலிருந்து திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.