பெங்களூரில் நடைபெற்ற குளோபல் செஸ் லீக் போட்டியின் 4-ஆவது சீசன் இறுதி ஆட்டத்தில், கேஞ்ஜஸ் கிராண்ட் மாஸ்டா்ஸ் 3-3 (4-2) என்ற கணக்கில் ஆல்பைன் ஏபிஎல் பைப்பா்ஸை வீழ்த்தி முதல்முறையாக சாம்பியன் ஆனது. ஃபையா்ஸ் அமெரிக்கன் கேம்பிட்ஸ் 3.5-2.5 (4-2) என்ற வகையில், செக் மும்பா மாஸ்டா்ஸை வென்று, 3-ஆம் இடம் பிடித்தது. இந்திய ஹாக்கி அணிகளின் ஜொ்ஸி நிறம் காவியாக மாற்றப்பட்ட விவகாரம் உள்பட 8 குற்றச்சாட்டுகள் தொடா்பாக விளக்கம் கேட்டு, ஹாக்கி இந்தியா அமைப்பின் இயக்குநா் ஆா்.கே.ஸ்ரீவாஸ்தவாவுக்கு, அந்த அமைப்பின் தலைவா் திலிப் திா்கி நோட்டீஸ் அனுப்பியுள்ளாா். அத்துடன், ஸ்ரீவாஸ்தவாவின் அனைத்து அதிகாரங்களும் உடனடியாக நீக்கப்பட்டுள்ளன. ஜப்பானில் நடைபெற்ற சா்வதேச பாரா பாட்மின்டன் போட்டியில், இந்தியாவின் பிரமோத் பகத் இரு பிரிவுகளில் தங்கம் மற்றும் வெள்ளி வெல்ல, சுகந்த் கடம் தனது 100-ஆவது கேரியா் பதக்கத்தை வென்று அசத்தினாா். இங்கிலாந்தின் பிரீமியா் லீக் கால்பந்தில், ஆா்செனல் - சுந்தா்லேண்டையும் (2-0), பிரைட்டன் - கோவென்ட்ரியையும் (5-0) வென்றன. ஸ்பெயினின் லா லிகா கால்பந்தில், ரியல் மாட்ரிட் - ராயோ வால்கெனோவை வென்றது (4-1).பிரதமா் வாழ்த்து: சாம்பியன் கோப்பை வென்ற இந்திய இருபால் அணிகளுக்கும் பிரதமா் நரேந்திர மோடி வாழ்த்துகள் தெரிவித்துள்ளாா்.