வாகனங்களில் செல்பவர்களை துரத்தும் தெரு நாய்கள்! நடவடிக்கை எடுக்குமா கோவை மாநகராட்சி?

Wait 5 sec.

கோவை சுந்தராபுரம் மதுக்கரை சாலை பகுதியில் தெருவில் செல்பவர்களை தெரு நாய்கள் துரத்துவதால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து சமூக ஆர்வலர், மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார். ​கோவை மாநகராட்சிப் பகுதிகளில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தெரு நாய்களின் தொல்லையால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் அச்சத்தில் உறைந்துள்ள நிலையில் சைக்கிளில் சென்றவரை தெரு நாய்கள் துரத்தும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி இணையத்தில் அதிர்வலையை ஏற்படுத்தி வருகின்றன.கோவை, சுந்தராபுரம், மதுக்கரை சாலை அஷ்ட லட்சுமி நகர் பகுதியில் நேற்று மாலை நபர் ஒருவர் தனது சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு கூட்டமாக நின்று இருந்த தெரு நாய்கள் திடீரென ஆக்ரோஷமாகக் குரைத்தவாறு அவரை நோக்கிப் பாய்ந்து கடிக்கத் துரத்தின. ​நாய்களிடம் கடிபடாமல் இருக்க, அவர் சைக்கிளை வேகமாகக் மிதித்துத் தப்பிச் செல்லும் நெஞ்சை பதறவைக்கும் காட்சிகள், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் (CCTV) பதிவாகி உள்ளன. இந்த விடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதன் இடையே, இதே பகுதியில் நாய் துரத்தியதால் 8 வயது சிறுமி ஒருவர் கூச்சலிட்டபடி இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்ற மற்றொரு சம்பவமும் அரங்கேறி உள்ளது.​இது குறித்துச் சமூக ஆர்வலர் நூர் அகமது கூறுகையில்: "அஷ்டலட்சுமி நகரில் பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு வெளியே ஓடி வந்தேன். அப்போது 8 வயது மதிக்கத்தக்கச் சிறுமி ஒருவரைத் தெருநாய்கள் கூட்டமாகத் துரத்தி உள்ளன. அந்தப் பயத்தில் அச்சிறுமி இருசக்கர வாகனத்தில் அதிவேகமாகத் தப்பிச் சென்று உள்ளார். நல்லவேளையாக எதிரே வேறு எந்த வாகனங்களும் வராததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டு அச்சிறுமி உயிர் தப்பினார்" எனக் கூறினார். கோவை மாநகரில் தெருநாய்களின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியரிடம் சமூக ஆர்வலர் நூர் அகமது நேரில் மனு ஒன்றை அளித்து உள்ளார்.​ அதில், "பொதுமக்களுக்கும் குழந்தைகளுக்கும் பெரும் அச்சுறுத்தலாக விளங்கும் தெருநாய்களைக் கட்டுப்படுத்த மாநகராட்சி உடனடியாகக் களமிறங்க வேண்டும். மேலும், பொதுமக்கள் வளர்ப்பு நாய்களை வெளியே அழைத்து வரும்போது அவற்றுக்குக் கட்டாயம் 'வாய்க்கவசம்' (Muzzle) அணிய வேண்டும்; மீறினால் கடும் அபராதம் விதிக்கப்பட வேண்டும்" என வலியுறுத்தி உள்ளார்.​மாநகராட்சி நிர்வாகம் உடனடியாகத் தலையிட்டு தெருநாய்களைப் பிடித்துக் கட்டுப்படுத்தத் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சுந்தராபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் முதன்மையான எதிர்பார்ப்பாக உள்ளது. Street dogs chasing motorists; Will the Coimbatore Corporation take action