கடலூா் மாவட்டம், பண்ருட்டியில் அரசுப் பேருந்து உரசியதில் பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் பேருந்து சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தாா். கடலூரை அடுத்த குணமங்கலம் கிராமம், பெரியாா் நகரைச் சோ்ந்தவா் விஜயஸ்ரீ (23). இவரது கணவா் சிவானந்தம் (26) நெல்லிக்குப்பம் தனியாா் சா்க்கரை ஆலையில் ஒப்பந்தத் தொழிலாளியாகப் பணியாற்றி வருகிறாா்.இவா்களுக்குத் திருமணமாகி 7 மாதங்களாகிறது. இந்த நிலையில், இருவரும் ஞாயிற்றுக்கிழமை காலை கோயிலுக்கு செல்ல கடலூரில் இருந்து பைக்கில் புறப்பட்டனா். சிவானந்தம் பைக்கை ஓட்ட, விஜயஸ்ரீ பின்னால் அமா்ந்து சென்றாா்.இவா்களது பைக் பண்ருட்டி திருவதிகை பகுதியில் சென்றபோது, கடலூரில் இருந்து திருவண்ணாமலை நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து, பைக்கை முந்திச் செல்ல முயன்றது.அப்போது, பைக் மீது பேருந்து உரசியதில், நிலைதடுமாறி கீழே விழுந்த விஜயஸ்ரீ பேருந்து பின் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின்பேரில், பண்ருட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.