மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, மதுரை மாநகரில் பாதுகாப்புப் பணியில் 6,000 காவலர்கள் ஈடுபடுத்தப்படவிருக்கிறார்கள்.மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பாதுகாப்பு பணிகள் மற்றும் முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் செய்தியாளர்களை சந்தித்தார்.கும்பாபிஷேகத்திற்கு வரும் பக்தர்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சிசிடிவி கேமராக்கள் மூலம் தொடர்ந்து கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.வரும் செப்டம்பர் 15-ம் தேதி முதல் 6,000 காவலர்கள் மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேக பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.பக்தர்களின் வசதிக்காக மதுரை மாநகர் முழுவதும் 1,000 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. கும்பாபிஷேகம் நிறைவடைந்த பின்னர் ஒரே நேரத்தில் அதிகளவில் பக்தர்கள் கோவில் வளாகத்தில் இருந்து வெளியேறாத வகையில் தேவையான ஏற்பாடுகள் செய்யப்படும்.கோவில் மேல் தளத்திற்கு செல்லும் பக்தர்களுக்காக 2,000 பாஸ்கள் வழங்கப்பட உள்ளது.மேலும், செப்டம்பர் 17-ம் தேதி மதுரை மாநகர் பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படும். இதற்கான அறிவிப்பை மாவட்ட நிர்வாகம் வெளியிடும். செப்டம்பர் 16-ம் தேதியும் மாநகரப் பகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படும்.இதனிடையே, மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு அறநிலையத்துறை சார்பில் கூடுதல் ஆணையர்கள் ஜெயராமன் மற்றும் மாரிமுத்து தலைமையில் 198 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவினருக்கு கும்பாபிஷேக முன்னேற்பாடு பணிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.