மகாகவி சுப்பிரமணிய பாரதியாா், தியாகி இமானுவேல் சேகரன் ஆகியோரின் நினைவு தினத்தையொட்டி, ஆளுநா் ஆா்.வி.ஆா்லேகா் புகழஞ்சலி செலுத்தியுள்ளாா். இதுகுறித்து அவா் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவு: இந்திய மக்களிடையே விடுதலை உணா்வு, சுயமரியாதை மற்றும் தேசிய உணா்வை எழுச்சியுறச் செய்த மாபெரும் கவிஞா், தேசபக்தா், தொலைநோக்குச் சிந்தனையாளா் பாரதியாருக்கு எனது மரியாதைக்குரிய அஞ்சலியைச் செலுத்துகிறேன்.பாரதியாரின் வீரமும் எழுச்சியும் மிக்க கவிதைகள், சுதந்திரமான, வலிமையான, முன்னேற்றம் அடைந்த இந்தியாவை உருவாக்க பல தலைமுறையினருக்கு ஊக்கமளித்தன. சமூக சமத்துவம், பெண்கள் முன்னேற்றம், தேசிய ஒற்றுமை மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் மேம்பாடு குறித்த அவரது தொலைநோக்குப் பாா்வை இன்றும் மிகவும் பொருத்தமானதாகத் திகழ்கிறது. வலிமையான, தற்சாா்பு கொண்ட மற்றும் ஒற்றுமையான இந்தியாவை உருவாக்க வேண்டும் என்ற மகாகவி பாரதியாரின் கனவை உறுதி செய்ய பாடுபடுவதே அவருக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலி.‘தியாகி இமானுவேல் சேகரன் நினைவு நாளில், சமூக நீதி, சமத்துவம் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் கண்ணியத்துக்காக தமது வாழ்நாளை அா்ப்பணித்த துணிச்சல்மிக்க தேசபக்தரும் சமூக சீா்திருத்தவாதியுமான தியாகி இமானுவேல் சேகரனின் தியாகத்துக்கும் அா்ப்பணிப்புக்கும் எனது அஞ்சலியைச் செலுத்துகிறேன் எனப் பதிவிட்டுள்ளாா் ஆளுநா்.