மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி தேர்தலுக்கானது இல்லை! - திருமாவளவன் பேச்சு

Wait 5 sec.

மதச்சார்பின்மை மற்றும் சமூகநீதியை இந்திய அளவில் எடுத்துரைக்கும் கூட்டணி என தவெக தலைமையிலான கூட்டணிக் குறித்து விசிக தலைவரும், மக்களவை உறுப்பினருமான தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழக அலுவலகத்தில் கூட்டணிக் கட்சிக் கூட்டம் இன்று (செப். 9) தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், விசிக, காங்கிரஸ், ஐயுஎம்எல், மதிமுக ஆகிய கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர். இந்த நிலையில், இந்தக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியார்களைச் சந்தித்த விசிக தலைவர் திருமாவளவன், இதுவரை ஆதரவு கட்சிகளாக இருந்த நாங்கள் இப்போது கூட்டணிக் கட்சிகளாக பரிணாமம் பெற்றுள்ளோம் எனக் கூறியுள்ளார்.இதுபற்றி, அவர் பேசியதாவது: “இதுவரை ஆதரவு கட்சிகளாக இருந்த நாங்கள் இப்போது கூட்டணிக் கட்சிகளாகப் பரிணாமம் அடைந்துள்ளோம். முதல்வர் தலைமையில் நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டத்தில் ஒருமனதாகக் கூட்டணிப் பெயர் தீர்மானிக்கப்பட்டுள்ளது. மதச்சார்பின்மையும் சமூக நீதியும் இந்தக் கூட்டணியின் முதன்மையான குறிக்கோள்கள் கோட்பாடுகள். ஆகவே, இந்தக் கூட்டணிக்கு மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி எனப் பெயரிடப்பட்டுள்ளது. மதச்சார்பின்மையை தமிழ்நாட்டில் மட்டுமின்றி அகில இந்திய அளவில் நாம் பாதுகாக்க வேண்டிய தேவையுள்ளது. அந்த நோக்கத்தோடு தேசிய அளவில் இயங்கிக் கொண்டிருக்கும் காங்கிரஸ் மற்றும் இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் போன்ற கட்சிகளும், தமிழகத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் விசிக மற்றும் மதிமுக ஆகிய கட்சிகளும் ஒருமித்த கருத்தோடு இந்தக் கூட்டணியை உருவாக்கியுள்ளோம். மதவாத, சாதியவாத சக்திகளுக்கு இந்த மண்ணில் இடமில்லை என்பதை மீண்டும் உறுதிப்படுத்துவதற்கான ஒரு களத்தில் நாங்கள் கைகோர்த்துள்ளோம். தேர்தலுக்காக மட்டுமில்லை, இடைத்தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் போன்ற தேர்தல்களை பொதுத் தேர்தலுக்கு முன்னதாக நாம் சந்திக்க இருக்கிறோம்.அந்தத் தேர்தலுக்காக உருவாக்கப்பட்ட கூட்டணி இல்லை இது. மதச்சார்பின்மை, சமூகநீதி, சமதர்மம் போன்ற அரசிலமைப்புச் சட்டம் முன்மொழியும் கோட்பாடுகளைப் பாதுகாக்கும் தொலைநேக்குப் பார்வையுடன் இந்தக் கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது. ஆகவே, நாங்கள் இணைந்து அந்தக் கருத்தியல் களத்தில் பயணிப்போம். இடையிலே வரும் தேர்தல்களையும் சந்திப்போம். வெற்றிப் பெறுவோம்” எனத் தெரிவித்துள்ளார். இடைத்தேர்தல்: தவெக கூட்டணி வேட்பாளர்கள் நாளை அறிவிப்பு!VCK leader Thol. Thirumavalavan has described the TVK-led alliance as one that champions secularism and social justice at the national level.