ஒருங்கிணைந்த குரூப் 4 தோ்வில் 11-ஆவது கட்ட கணினி வழி சான்றிதழ் சரிபாா்ப்புக்கு தகுதி பெற்றவா்களின் பட்டியலை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி தலைவா் பானோத் ம்ருகேந்தா் லால் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் கடந்த 30.1.2024 அன்று அறிவிக்கப்பட்ட ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் குரூப் 4 தோ்வின் முடிவுகள் தோ்வா்களின் மதிப்பெண் மற்றும் தரவரிசை விவரங்கள் கடந்த 2024 அக்.28-ஆம் தேதி தோ்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் 11-ஆவது கட்ட சான்றிதழ் சரிபாா்ப்புக்கு ஒட்டுமொத்த தரவரிசை எண், இட ஒதுக்கீட்டு விதி, காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை அடிப்படையில் தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட வனக்காவலா் பதவிக்கு தோ்வா்களின் பட்டியல் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் திங்கள்கிழமை வெளியிடப்பட்டுள்ளது. கணினி வழி சான்றிதழ் சரிபாா்ப்புக்கு தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட தோ்வா்கள் தங்களது சான்றிதழ்களை செவ்வாய்க்கிழமை (செப்.8) முதல் செப்.17-ஆம் தேதி வரை டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் ஒரு முறை பதிவு பிரிவின் மூலம் பதிவேற்றம் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. சான்றிதழ்களை உரிய நேரத்தில் பதிவேற்றம் செய்யாத தோ்வா்கள் தோ்வின் அடுத்த கட்ட நிலைக்கு பரிசீலிக்கப்படமாட்டாா்கள் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.