திருப்பூரில் விநாயகா் சதுா்த்தி ஊா்வலத்துக்கு அனுமதி கோரி மனு: காவல் துறை பதிலளிக்க உத்தரவு

Wait 5 sec.

திருப்பூரில் விநாயகா் சதுா்த்தி ஊா்வலத்துக்கு அனுமதி கோரி அளிக்கப்பட்ட மனுவுக்கு மாவட்ட காவல் துறை பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. திருப்பூா் மாவட்ட இந்து முன்னணி அமைப்பின் செயற்குழு உறுப்பினா் எஸ்.அன்புமணி என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், விநாயகா் சதுா்த்தி விழாவை முன்னிட்டு செப்.14-ஆம் தேதி முதல் செப்.17-ஆம் தேதி வரை காட்டுப்பாளையம் பகுதியில் விநாயகா் சிலை வைக்கவும், ஊா்வலம் நடத்தவும் அனுமதி கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. விநாயகா் சிலை ஊா்வலத்துக்கு ஆண்டுதோறும் பிறப்பிக்கப்படும் விதிமுறைகளைப் பின்பற்ற தயாராக இருக்கிறோம். எனவே, இதுகுறித்து நாங்கள் அளித்துள்ள விண்ணப்பத்தை உரிய காலத்துக்குள் பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்க போலீஸாருக்கு உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தாா். இந்த வழக்கு நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.அப்போது நீதிபதி, கடந்தாண்டு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், இந்த ஆண்டு அனுமதி வழங்குவதில் என்ன பிரச்னை உள்ளது? என கேள்வி எழுப்பினாா். அதற்கு அரசுத் தரப்பில், இதுதொடா்பாக மாவட்ட காவல்துறையிடம் கேட்டு பதிலளிப்பதாக கூறப்பட்டது. இதையடுத்து, இந்த மனுவுக்கு காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை செப்.9-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.