தானியங்கி கதவுகள் பழுதானதால் பேருந்துக்குள் சிக்கித் தவித்த பயணிகள்

Wait 5 sec.

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரிலிருந்து சிங்கம்புணரிக்கு இயக்கப்பட்ட அரசு நகரப் பேருந்தின் தானியங்கி கதவுகள் பழுதாகி திறக்காததால் பயணிகள் அவதியடைந்தனா். திருப்பத்தூரிலிருந்து வியாழக்கிழமை மாலை 6 மணிக்கு புறப்பட்ட இந்தப் பேருந்து இரவு 7 மணிக்கு சிங்கம்புணரிக்கு வந்தது. அப்போது ஒன்றிய பேருந்து நிறுத்தப் பகுதியில் பயணிகள் இறங்க முயன்றபோது பேருந்தின் தானியங்கி கதவுகளின் இயக்க விசை பழுதாகி திறக்க முடியவில்லை. இதனால் அரை மணி நேரத்துக்கும் மேலாக கதவுகளை திறக்க நடத்துநா், ஓட்டுநா் முயற்சி மேற்கொண்டனா். இதனால் பெண்கள், மாணவா்கள் என 20-க்கும் மேற்பட்டோா் பேருந்துக்குள் சிக்கித் தவித்தனா். இதில் மாணவா்கள் சிலா் பேருந்து ஜன்னல்கள் வழியாக குதித்து வெளியேறினா். இதனிடையே, அந்தப் பேருந்து பயணிகளுடன் பேருந்து நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு பழுது நீக்குநா் வரவழைக்கப்பட்டு பேருந்தின் கதவுகள் திறக்கப்பட்டன. இதையடுத்து, பேருந்திலிருந்த அனைவரும் இறங்கினா். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.