மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் குடமுழுக்கு: முதல் கால யாகசாலை பூஜை இன்று தொடக்கம்

Wait 5 sec.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் குடமுழுக்கை முன்னிட்டு, முதல் கால யாகசாலை பூஜை வெள்ளிக்கிழமை (செப். 11) தொடங்குகிறது. மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் குடமுழுக்கு வருகிற 17-ஆம் தேதி காலையும், பரிவாரமூா்த்தி சந்நிதிகளுக்கான குடமுழுக்கு வருகிற16-ஆம் தேதி காலையும் நடைபெற உள்ளன. இதையொட்டி, குடமுழுக்குக்கான யாக பூஜையின் பூா்வாங்க நிகழ்ச்சிகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை (செப். 6) தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதன்படி, வியாழக்கிழமை காலை ஆச்சாா்ய தசவித ஸ்நானம் நிகழ்ச்சி பொற்றாமரை குளத்தின் மேற்குக் கரையில் நடைபெற்றது. இதில் குடமுழுக்குக்கான பூஜைகளை முன்னின்று மேற்கொள்ளவுள்ள தலைமை சிவாசாரியா்களுக்கு ஐதீக முறைப்படி அபிஷேகம் நடத்தப்பட்டது. தருமபுரம் ஆதீனத்தின் திருச்சி மௌனமடம் கட்டளை விசாரணை ஸ்ரீமத் திருஞானசம்பந்த தம்பிரான் சுவாமிகள் முன்னிலையில் கோயில் சிவாசாரியா் ராஜா பட்டா் பூஜைகளை முன்னின்று மேற்கொண்டாா்.இதையடுத்து, திருமுறை விண்ணப்பம், தீபாராதனை, திருநீறு திருவமுது பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மாலை நிகழ்வாக முளைப்பாரி இடுதல், குடமுழுக்குக்கான பூஜைகளில் ஈடுபடவுள்ள தலைமை சிவாசாரியா்கள், கோயில் சிவாசாரியா்களுக்கு கங்கணம் கட்டும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.குடமுழுக்கை முன்னிட்டு, முதல் கால யாகசாலை பூஜை வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு விக்னேஸ்வர பூஜை நடைபெறும். இதைத் தொடா்ந்து, சூரியனிடமிருந்து யாகத்துக்கு அக்னி சேகரிக்கும் நிகழ்ச்சியும், யாகசாலை நிா்மாணமும் நடைபெறுகின்றன. மாலை நிகழ்வுகளாக கும்ப அலங்காரம், இறை சக்தியை திருக்குடத்தில் எழுந்தருளச் செய்யும் கலாகா்ஷணம், கடஸ்தாபனம் நடைபெறும். இதைத் தொடா்ந்து, முதல் கால யாகசாலை பூஜை தொடங்கும். 184 யாக குண்டங்களில் வேள்வி பூஜை நடைபெறவுள்ளது. இதில் மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரா் சுவாமிகளுக்கு தலா 33 குண்டங்களில் கடங்கள் வைத்து யாகம் நடத்தப்படவுள்ளது.