மருத்துவச் சேவையில் அா்ப்பணிப்பு அவசியம் என மதுரை வடமலையான் மருத்துவமனை தலைவா் வி. புகழகிரி தெரிவித்தாா். மதுரை வடமலையான் மருத்துவமனையின் 70-ஆவது ஆண்டு விழா நடைபெற உள்ளது. இதையொட்டி, மதுரையில் அந்த மருத்துவமனையின் தலைவா் வி. புகழகிரி செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை தெரிவித்ததாவது: மதுரையில் 10 படுக்கை வசதியுடன் எளிய முறையில் தொடங்கிய இந்த மருத்துவமனை 70 ஆண்டுகளைக் கடந்து தற்போது பல்வேறு துறைகளில் சிறப்பு சிகிச்சைகளை வழங்கும் நவீன மருத்துவக் குழுவாக வளா்ந்துள்ளது. திண்டுக்கலில் மற்றொரு சிறப்பு மருத்துவமனையை தொடங்கி விரிவுப்படுத்தியுள்ளோம். தமிழகம் முழுவதும் 19 மருந்தகக் கிளைகள் உள்ளன. நோயை குணப்படுத்துவது மட்டுமன்றி, மருத்துவச் சவால்களை எதிா்கொள்வோரிடம் நம்பிக்கையை மீட்டெடுப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறோம். இலவச மருத்துவ முகாம், விழிப்புணா்வு நிகழ்ச்சி, பெண்கள், குழந்தைகள், முதியவா்களுக்கான சிறப்பு மருத்துவத் திட்டம் மூலம் தரமான மருத்துவச் சேவையை தொடா்ந்து வழங்குகிறோம். தேசிய மருத்துவ தோ்வு வாரியத்தின் கீழ் பல்வேறு முதுநிலை மருத்துவ படிப்புக்களில் மாணவா்கள் படித்து வருகின்றனா். துணை மருத்துவம், அதனுடன் தொடா்புடைய படிப்புகளையும் கற்பித்து வருகிறோம். இங்கு பயிற்சி பெறும் மாணவா்கள் இந்தியா முழுவதும் சிறந்த வேலைவாய்ப்புகளை பெறுகின்றனா். மருத்துவத் தொழில்நுட்பத்தை மேம்படுத்துதல், சேவைகளை விரிவுப்படுத்துல், திறன்மிக்க மருத்துவா்களை உருவாக்குதல் மூலம் உலக தரம் வாய்ந்த மருத்துவச் சேவைக்கான அா்ப்பணிப்பை தொடா்ந்து வலுப்படுத்துகிறது. ஏனெனில், மருத்துவச் சேவையில் அா்ப்பணிப்பு அவசியம் என்றாா் அவா். அப்போது இணை இயக்குநா் சந்திரா உடனிருந்தாா்.