இடைத் தேர்தலில் திமுக போட்டி: மு.க.ஸ்டாலின் முடிவுக்கு காரணம் என்ன?

Wait 5 sec.

பீ.ஜெபலின்ஜான்சென்னை, செப். 9: இடைத்தேர்தலில் திமுக போட்டியிடுமா, புறக்கணிக்குமா என்ற கேள்வி எழுந்த நிலையில், வேட்பாளர்களை உடனடியாக அறிவித்ததில் பல காரணங்கள் இருப்பதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.தமிழகத்தில் திருச்சி கிழக்கு, விராலிமலை, அம்பாசமுத்திரம், கரூர், தாராபுரம் (தனி), மதுராந்தகம் (தனி) , பெருந்துறை ஆகிய பேரவைத் தொகுதிகள் காலியாக உள்ள நிலையில், தேர்தல் வழக்குகள் காரணமாக இடைத்தேர்தல் காலதாமதமாகத்தான் அறிவிக்கப்படும் என திமுக தலைமை கருதியிருந்தது. இடைத்தேர்தல் காலதாமதமானால் முதல்வர் விஜய்யின் செல்வாக்கு குறைந்து, எளிதில் வெற்றி பெறலாம் என்பதும் திமுகவின் கணிப்பாக இருந்தது. அதனால்தான், கட்சிக் கட்டமைப்பு சீரமைப்புப் பணிகளைத் தொடங்கி 110 மாவட்டங்களாகப் பிரித்து அதற்கு தேர்தல் நடத்துவதற்கான ஆயத்தப் பணியில் இறங்கியது திமுக.ஆனால், வழக்கு நிலுவையில் உள்ள 5 தொகுதிகள் போக மீதமுள்ள செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம், திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் திடீரென அறிவித்துவிட்டது. திமுக ஆட்சியில் 2-ஆவது முறையாக நடைபெற்ற ஈரோடு கிழக்கு, விக்கிரவாண்டி இடைத்தேர்தல்களைப் புறக்கணித்த அதிமுக, தற்போது தவெக ஆட்சியில் துணிந்து களம் இறங்க மும்முரமாக ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.மு.க.ஸ்டாலின் தீவிர ஆலோசனை:இந்த நிலையில்தான், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனக்கு நெருக்கமானவர்கள், கட்சி மூத்த நிர்வாகிகளிடம் இடைத்தேர்தல் குறித்து தனிப்பட்ட முறையில் 2 நாள்களாகக் கருத்துகளைக் கேட்டறிந்தார். பெரும்பாலானோர் திமுக போட்டியிட வேண்டும் என்றும், சிலர் போட்டியிட வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளனர்.இந்த நிலையில்தான், தனது இல்லத்தில் கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை (செப். 9)ஆலோசனை நடத்தினார். இதில், திமுக பொதுச் செயலர் துரைமுருகன் பேசும்போது, இடைத்தேர்தலில் திமுக கண்டிப்பாகப் போட்டியிட வேண்டும். அதுதான் கட்சியின் எதிர்கால நலனுக்கு பொருத்தமாக இருக்கும் என்றார்.சில இரண்டாம் கட்ட நிர்வாகிகள் பேசும்போது, அதிமுக எம்எல்ஏக்களை தவெக குதிரை பேரம் நடத்தியதால் திணிக்கப்பட்ட இடைத்தேர்தல் இது. எனவே, போட்டியை திமுக தவிர்த்தால், அதிமுக வெற்றி பெறும்; மும்முனைப் போட்டி எனில் தவெக வெற்றிபெறும்.கடந்த தேர்தலில் தாராபுரத்தில் 2-ஆவது இடமும், மதுராந்தகத்தில் 3-ஆவது இடமும் திமுக பெற்றதால் இடைத்தேர்தலில் 3-ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டால் திமுகவின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்று வாதிட்டனர். ஆனால், பெரும்பாலான நிர்வாகிகள், திமுக பெரிய கட்சி, போட்டியிடாவிட்டால் தொண்டர்கள் சோர்ந்துவிடுவார்கள். எதிர்க்கட்சியான திமுக பயந்து களத்தை விட்டு ஓடிவிட்டது என தவெக பிரசாரம் செய்யும்போது கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மனச்சோர்வு அடையக்கூடும் என்றனர்.கடுமையாக உழைத்தால் வெற்றி சாத்தியம்: திமுக, அதிமுகவை தோற்கடித்து தவெக வென்றால் திராவிடக் கட்சிகள் வீழ்ந்துவிட்டன என்ற பிரசாரம் வலுப்பெறும் என சிலர் முன்வைத்தபோது, கடுமையாக உழைத்தால் வெற்றி பெறலாம்; கட்டமைப்பு இல்லாத தவெக இடைத்தேர்தலில் வெற்றி பெற முடியாது. தவெக கூட்டணி கட்சிகளில் விசிக தவிர்த்து மற்றவை வலுவற்றவை. எனவே, திமுக எளிதில் வெற்றி பெறும் என்றனர்.இறுதியாக, திமுக இடைத்தேர்தலில் நிச்சயம் போட்டியிடும், கட்சியின் மூத்த நிர்வாகிகள் 2 தொகுதிகளிலும் முகாமிட்டு இடைத்தேர்தல் பணியை உடனடியாகத் தொடங்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். வேட்பாளர்கள் தேர்வு: யாரை வேட்பாளர்களாக அறிவிக்கலாம்? என மு.க.ஸ்டாலின் யோசித்தபோது, மதுராந்தகத்தில் இ.பரந்தாமன்தான் போட்டியிட வேண்டும் என்று எல்லோரும் ஒருமித்த குரலில் பரிந்துரைத்துள்ளனர். சமூக ஊடகங்களிலும், காட்சி ஊடகங்களிலும் விவாதங்களைத் துல்லியமாக வாதாடும் திறன் பெற்ற அவரை தமிழகம் முழுவதும் எளிதில் தெரியும். மேலும், படித்த இளைஞரான அவரை நிறுத்தினால் எளிதில் வெற்றிபெறலாம் என்றதும், அவரை மறுப்பின்றி தேர்வு செய்தார் மு.க.ஸ்டாலின்.அதேபோல, தாராபுரத்தில் வழக்குரைஞராகவும், ஒன்றிய பொறுப்பிலும் உள்ள தேவேந்திர குல வேளாளர் சமூகத்தை சேர்ந்த வழக்குரைஞர் சுகன்யாவை நிறுத்தினால், கொமதேக செல்வாக்கு, தேவேந்திரகுல வேளாளர், இஸ்லாமிய வாக்குகள் மற்றும் திமுக அடிப்படை வாக்குகளுடன் வெற்றி பெறலாம் என திமுக துணை பொதுச் செயலர் மு.பெ.சாமிநாதன் பரிந்துரைத்துள்ளார். நீண்ட ஆலோசனைக்குப் பிறகு அவரையும் வேட்பாளராக மு.க.ஸ்டாலின் தேர்வு செய்துள்ளார்.