ஓட்டுநர், நடத்துநர் பற்றாக்குறை: திருமங்கலம் வழித்தடத்தில் 30 சதவீதம் பேருந்துகள் முடக்கம்

Wait 5 sec.

ஓட்டுநர்கள், நடத்துநர்கள் பற்றாக்குறையால் திருமங்கலம் வழித்தடத்தில் பிற்பகலுக்குப் பிறகு 30 சதவீதம் பேருந்துகள் பணிமனையில் நிறுத்தி வைக்கப்படுவதால் பயணிகள் அவதியடைந்து வருகின்றனர்.அரசுப் போக்குவரத்து கழக மதுரை மண்டலத்தில் 900-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன. திருமங்கலம் கிளையில் மட்டும் 79 நகரப் பேருந்துகளும், 7 புறநகர்ப் பேருந்துகளும் பயன்பாட்டில் உள்ளன. இதே போல, திருப்பரங்குன்றம் கிளையிலும் போதிய எண்ணிக்கையில் பேருந்துகள் உள்ளன. இருப்பினும், இவற்றை இயக்கும் ஓட்டுநர், நடத்துநர் பற்றாக்குறை பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. காலையில் சுழற்சி முறையில் ஓட்டுநர்களும், நடத்துநர்களும் முழுமையாகப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு, அனைத்துப் பேருந்துகளும் தடையின்றி இயக்கப்படுகின்றன.பிற்பகல் ஒரு மணிக்கு பிறகு பணி சுழற்சியின்போது, மாற்றுப் பணியாளர்கள் இல்லாததால், திருமங்கலம் உள்ளிட்ட முக்கிய வழித்தடங்களில் இயக்கப்படும் பேருந்துகளில் சுமார் 30 சதவீதம் பணிமனைக்குள்ளேயே முடக்கப்படுகின்றன.இதனால், பணி முடித்து மாலையில் வீடு திரும்பும் தொழிலாளர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், வெளியூர் பயணிகள், திருமங்கலம், திருப்பரங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து மதுரை மாநகரின் பெரியார், ஆரப்பாளையம், மாட்டுத்தாவணி எம்.ஜி.ஆர். பேருந்து நிலையங்களுக்குச் செல்ல போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.பணியாளர் பற்றாக்குறைக்கான காரணங்கள்: கடந்த ஓராண்டில் ஏராளமான ஓட்டுநர்கள், நடத்துநர்கள் பணி ஓய்வு பெற்றுவிட்டனர். இந்தப் பணியிடங்களில் நிரந்தர பணியாளர்கள் போதிய அளவு நியமிக்கப்படவில்லை. மேலும், வழக்கமான பணிக்கு முழு ஊதியமும் அளிக்கப்படுவதில்லை. இத்துடன் இரட்டைப் பணி செய்யும் ஊழியர்களுக்கு குறைந்த தொகுப்பூதியமே வழங்கப்படுவதால், கூடுதல் நேரம் பணியாற்ற அவர்கள் முன் வருவதில்லை. ஜிசிசி ஒப்பந்த அடிப்படையில் ஆள்களைப் பணியமர்த்தும் முறை தொடர்ந்தாலும், அது தற்காலிகத் தீர்வாக உள்ளதே தவிர, பணியாளர் பற்றாக்குறையை முழுமையாகத் தீர்க்கவில்லை.இதுகுறித்து பொதுமக்களும் தொழிலாளர் அமைப்பினரும் தொடர்ந்து கோரிக்கை விடுத்த போதிலும், அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் முறையான நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டி வருவதாகப் புகார் எழுந்துள்ளது.தென் மாவட்டங்களின் நுழைவாயிலாகவும், போக்குவரத்து மையமாகவும் திகழும் திருமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் பேருந்து சேவையை சீரமைக்க மதுரைக் கோட்ட நிர்வாகமும், அரசும் இணைந்து உடனடியாக நிரந்தர ஓட்டுநர்கள், நடத்துநர்களை பணியமர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பேருந்து பயணிகளின் எதிர்பார்ப்பாகும்.இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: அரசுப் பேருந்துகள் சரியான நேரத்துக்கு வருவதில்லை. முன்பு, அந்தந்த பகுதிகளில் பேருந்துகளின் கால அட்டவணை பயணிகளின் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கும். ஆனால் தற்போது பேருந்துகள் எந்த நேரத்துக்கு வருகின்றன என்பதே தெரியவில்லை.குறிப்பாக, மதுரை ஆரப்பாளையம், எம்.ஜி.ஆர். பேருந்து நிலையங்களுக்கு குறைந்த அளவிலேயே பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அவையும் ஒரே நேரத்தில் அடுத்தடுத்து இயக்கப்படுகின்றன. பிறகு, 40 நிமிஷங்களுக்கு மேலாக பேருந்துகள் வருவதில்லை. எனவே, அரசுப் போக்குவரத்து கழக அதிகாரிகள் போதுமான பேருந்துகளை சீராக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.