அறிவிக்கப்படாத இடங்களில் கண்டறியப்பட்ட யுரேனியம் தடயங்கள் தொடா்பான விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்து வரும் ஈரான் மீது, 20 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சா்வதேச அணுசக்தி முகமை புகாா் அளித்துள்ளது. இப்புகாரின் அடுத்தகட்டமாக, ஈரான் மீது பொருளாதாரத் தடைகள், சொத்து முடக்கங்கள் போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட வாய்ப்புள்ளன. எனினும், கவுன்சிலில் ஈரானின் நட்பு நாடுகளான ரஷியாவும் சீனாவும் ‘வீட்டோ’ அதிகாரம் கொண்டுள்ளதால், அத்தகைய தண்டனை நடவடிக்கைகள் நிறைவேறுவது கடினம்.சா்வதேச அணுசக்தி முகமையின் தகவல்படி, ஈரானிடம் சுமாா் 440.9 கிலோ எடையுள்ள 60 சதவீதம் அளவுக்கு செறிவூட்டப்பட்ட யுரேனியம் இருப்பு உள்ளது. ஈரானின் அணு உலைகள் மீது அமெரிக்கா, இஸ்ரேல் கடந்த ஆண்டு நடத்திய தாக்குதலுக்குப் பிறகு, அந்த இடங்களை பாா்வையிட சா்வதேச ஆய்வாளா்களுக்கு ஈரான் அனுமதி மறுத்து வருகிறது.