நம் வீடுகளின் வரவேற்பறைகளில் ஒலித்த குரல். விழாக்காலங்கள் என்றால் இன்னும் கூடுதல் புத்துணர்ச்சியுடன் செவிகளில் சேர்ந்த குரல். பட்டிமன்றம் என்ற வடிவத்தை ஆழமாக பதியச் செய்த குரல் தமிழறிஞர் சாலமன் பாப்பையாவினுடையது.பேசுவது கலை என்பதை ஏற்கத் தயங்குவோர் உண்டு. ஆனால் பேச்சு ஒரு நுட்பம். தெரிந்து தெளிந்து தெரியப்படுத்துவது. ஓர் அரங்கில் வெவ்வேறு வகையான மனிதர்கள் இருப்பர். அனைவரையும் திருப்திபடுத்துகிற அளவில் அது அமைதல் வேண்டும். சவால் தான், அதை சமாளிக்க உள்ளடக்கம் கடுமையான உழைப்பை வேண்டி நிற்கும் .ஆனால் அதைவிட அவசியமானது, வழங்குமுறை. எப்படி அந்தப்பேச்சு பரிமாறப்படுகிறது என்பதைப் பொருத்தே வெற்றி அமையும். அந்த சூத்திரமறிந்து சுவைபட பரிமாறியவர் பாப்பையா.சொற்பொழிவு வடிவம் தனியொருவர் சார்ந்தது. மேற்கூறிய சூத்திரங்கள் தனிப்பொழிவுக்கு பொருந்தும் என்றாலும், பட்டிமன்றத்தில் ஓர் ஒருங்கிணைவு தேவைப்படுகிறது. இரு அணிகள். அவர்களின் கருத்துகளை உள்வாங்குதல், இடைமறித்தல், கேள்விக்குள்ளாக்குதல்...இன்னும் பிறவற்றையும் மேற்கொள்ள வேண்டும். இவை அனைத்தையும் மென்போக்குடன் செய்யும் பாங்கறிந்தவர் பாப்பையா.பட்டிமன்றங்களை நகைச்சுவை மன்றங்களாக மாற்றிவிட்டார் என்ற விமர்சனம் அவர் மீது உண்டு. அச்சுவையும் வாழ்வின் ஒரு பகுதிதானே என்பதை விமர்சிப்போர் அறிவதில்லை. பார்வையாளர்களை தங்கள் வசம் ஈர்க்க ஒரு யுக்தியாக மட்டுமே அதை பயன்படுத்தினார். கோவில் திருவிழாக்கள், சேவை அமைப்புகளின் நிகழ்ச்சிகள் என்ற நிலையிலிருந்து தொலைக்காட்சிக்கு சென்ற பிறகு, குறிப்பாக தனியார் தொலைக்காட்சிக்கு பட்டிமன்றம் சென்றபிறகு நகைச்சுவை அங்கே முதன்மை பெற்றது உண்மைதான். எனினும் பாப்பையாவோ அவர் அணியினரோ முகம் சுளிக்கும் துணுக்குகளை நகைச்சுவை என்று பெயரிட்டு எவர்மீதும் எறிந்தது இல்லை. பாப்பையாவுக்கு பின்னால் வந்த சில பட்டிமன்ற குழுக்கள் பட்டிமன்ற வடிவை சிதைத்ததும் மக்கள் அறிந்ததே.தமிழ் இலக்கியங்கள் மீதான பாப்பையாவின் பிடிப்பும் தொடர் வாசிப்பும் பட்டிமன்ற வடிவில் அதைக்கொண்டு சேர்க்க வேண்டும் என்ற அவாவும் அவரை விடாமல் இயங்கச் செய்தன எனலாம். தொடக்ககால பாப்பையாவின் பட்டிமன்றங்களில் தீர்ப்பு நீளமாக இருக்கும். இருதரப்பையும் சமதொலைவில் வைத்து ஆராய்வார். பிற்காலங்களில் நீளம் சுருங்கினாலும் நேர்த்தி குறையாது பார்த்துக்கொண்டார். எந்தத் தலைப்புக்கும் அல்லது எந்த விவாதத்திற்கும் விடை திருக்குறளில் பொதிந்துகிடக்கிறது என்பது அவர் நம்பிக்கை. அது வெறும் நம்பிக்கை மட்டுமல்ல உண்மை என்பதை, தொடர்ந்து பாப்பையா பட்டிமன்றங்களை பார்த்து வருபவர்களுக்குத் தெரியும். யார்பக்கம் தீர்ப்பு சொல்லப்போகிறார் என்று பார்வையாளர்கள் எளிதில் கணித்து விட முடியாது. இருதரப்பையும் ஒருசேர கொண்டு சென்று, எந்த இடத்தில் வேறுபடுகிறது என்பதை துல்லியமாக்கி நாம் ஏற்றுக்கொள்கிற வகையில் தீர்ப்பை வழங்குவார்.பாப்பையா பட்டிமன்றங்கள் மீது வைக்கப்பட்ட இன்னொரு விமர்சனம், பெரும்பாலும் குடும்பத் தலைப்புகளையே தேர்வு செய்கிறார்கள் என்று. அது உண்மைதான். இந்த விமர்சனம் சுமார் கால்நூற்றாண்டுக்கு முன்பே வைக்கப்பட்டதுதான். இதற்கும் அவர் பதில் சொல்லியிருக்கிறார். தஞ்சாவூர் பகுதியில் நாளிதழ் ஒன்றின் செய்தியாளராக பணியாற்றிக் கொண்டிருந்தபோது ,பட்டிமன்ற நிகழ்ச்சிக்காக வந்திருந்த அவரை நேர்காணல் செய்தேன். அந்த நீண்ட நேர்காணலில் இந்தக் கேள்வியையும் ஒன்றாக வைத்தேன். அதற்கு அவர், "எங்கள் நிகழ்ச்சியை யார் பார்க்க வருகிறார்கள் என்பது முக்கியம், தொலைக்காட்சியில் பார்த்தாலும் யார் பார்க்கிறார்கள் என்பது முக்கியம். குடும்பத்துடன் வருகிறார்கள்,..பார்க்கிறார்கள். எனவே அதற்கேற்ய சுவாரஸ்யமான தலைப்புகளை தேர்ந்தெடுக்கிறோம்.அது அவர்களுக்கு பிடித்திருக்கிறது. அதனால்தான் எங்களை இந்தளவுக்கு உயர்த்தி வைத்திருக்கிறார்கள். அதுமட்டுமல்ல நம் குடும்ப அமைப்பின் தன்மை, சிக்கல்கள் குறித்தும் பேச வேண்டும்தானே " என்றார்."ஆழமாக விவாதிக்க வேண்டிய தலைப்புகளும் இருக்கிறது அல்லவா "என்று துணைக்கேள்வி எழுப்பியபோது, "தொலைக்காட்சி பட்டிமன்றங்களில் அதைச் செய்ய இயலாது. அதற்கேற்ற இடங்களில் தொடர்ந்து செய்து வருகிறோம் "என்று வெளிப்படையாக பேசினார்.பதிவுசெய்யப்பட்ட நேர்காணல் நாளிதழின் தஞ்சைப்பதிப்பில் மட்டுமே இடம்பெறும் என்று கூறியபோது, அச்சில் வந்ததும் அனுப்பி வைக்குமாறு முகவரி, தொலைபேசி எண் கொடுத்தார். அவ்வாறு செய்த பிறகு, பிரதி கிடைக்கப்பட்டதை உறுதிசெய்ய தொலைபேசியில் அழைத்தேன். "ஏதோ சின்னதா வரும்ன்னு நினைச்சேன்..அரைப்பக்கம் போட்டிருக்கீங்களே! நான் சொன்னத சரியா எழுதியிருக்கீங்க.நல்லா படிங்க...இன்னும் நிறைய எழுதுங்க" என்று உரையாடல் வழி ஊக்கப்படுத்தினார்.அச்சில் வரும் தனது பேச்சு சரியாக இருக்கவேண்டும் என்பதில் கவனமாக இருந்த பாப்பையா, அலையில் (ஒலி/ஒளி) வரும் பேச்சிற்கு அதைவிடவும் கூடுதல் கவனத்துடன் செயலாற்றியிருப்பார் என்பது திண்ணம்.பேச்சை முழுமூச்சாகக் கொண்டோருக்கு தொடர் வாசிப்பு அவசியம். வாசிப்பு கைவரப்பெற்றோர் தங்கள் சிந்தைவழி படைப்புகளை உருவாக்க முடியும். பாப்பைபா அந்த வரிசையை வாஞ்சையுடன் வாரி அணைத்துக்கொண்டவர்.வாசித்தார்..படைத்தார்...பேசினார். நாம் அவரைப் பேசிக்கொண்டிருக்கும்போது,அவர் நம்மிடம் காலத்துக்கும் பேசிக்கொண்டிருப்பார் "அன்பு பெரியோர்களே..அருமைத் தாய்மார்களே..இனிய குழந்தைகளே..."என்று.