முற்றுப் பெறாமல் முடிவுக்கு வந்த கண்ணதாசனின் கடைசி கட்டுரைத் தொடர்! நூற்றாண்டுத் தொடர் - 12

Wait 5 sec.

சினிமாச் சந்தையில் 30 ஆண்டுகள்! – கவிஞர் கண்ணதாசன் பிறந்த நூற்றாண்டு விழா தொடக்கத்தையொட்டி - தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்திலிருந்து வெளிவந்த சினிமா எக்ஸ்பிரஸ் இருவார இதழில் 1981 ஜனவரி 1 தேதியிட்ட இதழில் தொடங்கி,  தன்னுடைய திரைப் பயணம் பற்றி அவர் எழுதிவந்த தொடர் கட்டுரைகள், கவிஞர் பிறந்த ஜூன் 24 முதல் வாரந்தோறும் புதன்கிழமைகளில் அவரை நினைவுகூர்ந்து சிறப்பிக்கும் வகையில் தினமணி இணையதளத்தில் மறுபிரசுரம் செய்யப்பட்டு வந்தன - படிப் படியாக, கவிஞர் எழுதியவாறே, முதற்படியில் தொடங்கி பதினொன்றாம் படி வரையிலும்.1981 ஜூலை 1 தேதியிட்ட பதினொன்றாம் படியின் முடிவில் தொடரும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தபோதிலும் அடுத்த ஜூலை 15 இதழில் தொடர்  வெளிவரவில்லை. பதிலாக, ‘கவியரசு கண்ணதாசன் அவர்கள் வெளிநாடு சென்றிருப்பதால் அவரது கட்டுரை இந்த இதழில் இடம்பெறவில்லை. வெளிநாடுகளிலிருந்து திரும்பியதும் அவர் கட்டுரை தொடர்ந்து வெளிவரும்’  என்ற அறிவிப்பு இடம் பெற்றிருக்கிறது – ஆனால், அந்தத் தொடர் தொடர முடியாமலேயே போய்விட்டது!அதே காலகட்டத்தில், 1981 ஜூலை 24  (அமெரிக்காவில் 23 ஆக இருக்கலாம்)  அமெரிக்காவிலுள்ள சான் பிரான்சிஸ்கோ நகரில் நடைபெற்ற அனைத்து நாடுகளைச் சேர்ந்த கவிஞர்கள் மாநாட்டில் பங்கேற்கச் சென்றிருந்த தமிழ்நாடு அரசவைக் கவிஞரான கண்ணதாசன், சிகாகோ நகரில் திடீர் நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சையளிக்கப்பட்டபோதிலும் நினைவிழந்த நிலையில் இருப்பதாகத் தகவல்கள் வரப்பெற்றன.ஜூலை மாதத் தொடக்கத்தில் அமெரிக்கா புறப்பட்டுச் சென்ற கவிஞர், 4 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை சான் பிரான்சிஸ்கோவில் கவிஞர்கள் மாநாட்டில் பங்கேற்றார். பிறகு பல்வேறு நகர்களுக்கு – நியு யார்க், வாஷிங்டன், லாஸ் ஏஞ்சலீஸ் என – சென்று தமிழர்கள் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். பின்னர், சிகாகோ நகரில் சென்னையைச் சேர்ந்த டாக்டர் ஆறுமுகம் இல்லத்தில் தங்கியிருந்தபோது நெஞ்சுவலி (மாரடைப்பு) ஏற்பட்டதாகவும் ஹோலி கிராஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுத் தீவிர சிகிச்சையளித்தாலும் இன்னமும் மயக்கம் தெளியவில்லை என்றும் தகவல்கள் வெளியாகின.மாதங்கள் கடந்தன. தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது. ஆனாலும், அக்டோபர் மாதம் 17 ஆம் தேதி, சனிக்கிழமை இரவு இந்திய நேரப்படி 10.45 மணிக்கு கவிஞர் கண்ணதாசன் காலமானார்; வெறும் 55 வயதுதான்.கவிஞர் கண்ணதாசனின் சிகிச்சைக்கான முழுச் செலவையும் முதல்வர் எம்ஜிஆர் தலைமையிலான தமிழக அரசே ஏற்று, அவரைக் காப்பாற்றுவதற்கான மருத்துவ முயற்சிகளை மேற்கொண்டது. தமிழ்நாடு கல்வித் துறை அமைச்சராக இருந்த சி. அரங்கநாயகமும் நேரில் சென்று பார்த்துவந்தார்.‘அறிவு நடை – ஆன்ற புலமை – அன்பு உள்ளம் – பிள்ளை மனது – உயர்ந்த சிந்தனை – உலகளாவிய பார்வை கொண்டவர் கவியரசு கண்ணதாசன். பாரதி நூற்றாண்டு விழா காணும் இந்த ஆண்டில் இந்த மாபெரும் கவிஞரின் மறைவு நம்மைப் பெரிதும் வாட்டுகிறது. எப்போதோ தோன்றுகிற இதிகாசக் கவிஞர் அவர்’ என்று தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டார் தமிழ்நாடு முதல்வர் எம்ஜிஆர்.கண்ணதாசனின் மறைவுச் செய்தி கிடைத்ததும் தியாகராய நகரிலிருந்த கவிஞரின் இல்லத்துக்குச் சென்று ஆறுதல் கூறிய திமுக தலைவர் மு. கருணாநிதி, கண்ணதாசனின் கடும் விமரிசனத்துக்கு உள்ளானவர்கள்கூட அவரின் தமிழ்ப் புலைமையையும் கவிதா ரசனையையும் ஏற்றுக்கொள்வார்கள் என்று குறிப்பிட்டார்; கைநீட்டிக் கொஞ்சுவோர் பக்கமெல்லாம்கரம் நீட்டித் தாவுகின்ற குழந்தை நீ! கல்லறைப் பெண்ணின் மடியிலும் அப்படித்தான் தாவி விட்டாயோ? என்றார் இரங்கல் கவிதை வரியில் அவர்.இயற்கைக் கவி மறைவு எனக் குறிப்பிட்டிருந்தது தலையங்கத்தில் தினமணி.கண்ணதாசனின் மிக நெருங்கிய நண்பரான காமராஜ் காங்கிரஸ் தலைவர் பழ. நெடுமாறன், இலக்கியத்திலும் அரசியலிலும் கண்ணதாசன் ஆற்றிய சாதனைகளை நினைவு கூர்ந்தார். சுப்பிரமணிய பாரதிக்குப் பிறகு தமிழகத்தில் ஒரு பெரிய கவிஞராகத் திகழ்ந்தவர் என்று குறிப்பிட்டார் சோ.பேரவைத் தலைவர் ராஜாராம், அமைச்சர்கள் ஆர்.எம். வீரப்பன், தமிழ்நாடு இ. காங்கிரஸ் தலைவர் எம்.பி. சுப்பிரமணியம், திண்டிவனம் ராமமூர்த்தி, முஸ்லிம் லீக் தலைவர் அப்துல் சமது, காந்தி காமராஜ் தேசிய காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தன், சென்னை நகர ஷெரீப் ரெக்ஸ், தென்னிந்திய நடிகர்கள் சங்கத் தலைவர் எஸ்.எஸ். ராஜேந்திரன், இலங்கைத் தமிழர் தலைவர் அமிர்தலிங்கம் என ஏராளமானோர் இரங்கல் தெரிவித்தனர்.அமெரிக்காவிலிருந்து கவிஞரின் உடல், ஏர் இந்தியா விமானத்தில் அக். 21 புதன்கிழமை காலையில் சென்னை கொண்டுவரப்பட்டது. முதல்வர் எம்ஜிஆர், நெடுஞ்செழியன் உள்ளிட்ட அமைச்சர்கள் பலரும் வந்திருந்து மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். நெடுமாறன், குமரி அனந்தன், எஸ்.ஆர். பாலசுப்பிரமணியம், அன்பில் தர்மலிங்கம் உள்பட தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.விமான நிலையத்திலிருந்து அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் தியாகராய நகர் இல்லத்துக்கு அவர் உடல் எடுத்துச்செல்லப்பட்டது. அதிகாலையிலிருந்தே கவிஞரின் இல்லத்தில் பல துறைகளைச் சேர்ந்தவர்களும் திரண்டிருந்து அஞ்சலி செலுத்தினர். தன்னுடைய குரு என கண்ணதாசன் அடிக்கடி கூறிவந்த பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார் தள்ளாத வயதிலும் காலை எட்டரை மணிக்கே வந்து காத்திருந்து அஞ்சலி செலுத்தினார்.திமுக தலைவர் மு. கருணாநிதி, பொதுச்செயலர் க. அன்பழகன் மற்றும் திமுக தலைவர்கள் வந்து அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து, முதல்வர் எம்ஜிஆர், நெடுஞ்செழியன், பண்ருட்டி ராமச்சந்திரன், ஆர்எம். வீரப்பன், மேலவைத் தலைவர் ம.பொ. சிவஞானம், பேரவைத் தலைவர் ராஜாராம், பழ. நெடுமாறன், ரெக்ஸ், அண்ணாமலைப் பல்கலை. துணைவேந்தர் சிட்டிபாபு, ஜனதா கட்சித் தலைவர் இஸ்மாயில், நெல்லை ஜெபமணி, ஆறுமுகசாமி, அமைச்சர் டாக்டர் ஹண்டே,  அகிலன், சுலோசனா சம்பத், முதல்வர் எம்ஜிஆரின் மனைவி வி.என். ஜானகி, இலங்கை அமைச்சர் ராஜதுரை எனப் பலரும் அஞ்சலி செலுத்தினர்.குடும்ப வழக்கப்படி சடங்குகள் செய்யப்பட்ட பின், மாலையில் நடிகர் சங்கக் கட்டடத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு மக்கள் அஞ்சலி செலுத்துவதற்காகக் கவிஞர் உடல் வைக்கப்பட்டது.  அங்கே தமிழ்நாடு இ. காங்கிரஸ் தலைவர் எம்.பி. சுப்பிரமணியம், சிவாஜி கணேசன் உள்பட தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.அக். 22 – வியாழக்கிழமை பகல் 11 மணிவாக்கில் நடிகர் சங்கக் கட்டடத்திலிருந்து கண்ணம்மாபேட்டை மயானத்துக்கு இறுதி ஊர்வலம் புறப்பட்டது. ஊர்வலம் நெடுகிலும் முதல்வர் எம்ஜிஆரும் சக அமைச்சர்களும் நடந்தே சென்றனர். மயானத்தில் எம்ஜிஆர் உள்பட தலைவர்கள் அனைவரும் கவிஞரின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினர். அப்போது சில நிமிஷங்கள் பேசிய முதல்வர் எம்ஜிஆர், காரைக்குடியில் கண்ணதாசனுக்கு மணிமண்டபம் கட்டப்படும் என அறிவித்தார்.நடிகர் சங்கத் தலைவர் எஸ்.எஸ். ராஜேந்திரன், வி.கே. ராமசாமி, சுந்தரராஜன், சிவாஜி கணேசன், நடிகைகள் மனோரமா, கே.ஆர். விஜயா, டி.எம். சௌந்தரராஜன், பி. சுசீலா, எஸ். ஜானகி, வி.என். சிதம்பரம், இசையமைப்பாளர்கள் எம்.எஸ். விசுவநாதன், இளையராஜா, சங்கர் - கணேஷ் என திரையுலகமே திரண்டு  வந்திருந்தனர். டி.எம். சௌந்தரராஜன் இரங்கல் பாடலொன்றைப் பாடும்போது கதறி அழுதார்.சிதைக்கு மகன் கண்மணி சுப்பு தீமூட்ட கவிஞரின் உடல் எரியூட்டப்பட்டது. வழக்கமாகத் தான் படுத்திருக்கும் அதே கட்டிலில்தான் உயிர் போக வேண்டும் என்று கண்ணதாசன் உயிருடன் இருந்த காலத்தில் சொன்னதன் நினைவாக, அவர் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் அதே படுக்கைக் கட்டிலைக் கொண்டுவந்து எரியூட்டினர்.அமெரிக்கா செல்வதற்கு முன் கவிஞர் எழுதித் தந்திருந்த இயேசுவின் வாழ்க்கை வரலாறு மற்றும் போதனைகள் கொண்ட இயேசு காவியம் என்ற 400 பக்க நூலை, அவர் நாடு திரும்பியதும் வெளியிடத் திட்டமிட்டிருந்த நிலையில், அப்போது அச்சிடப்பட்டிருந்த 350 பக்கங்களை மட்டுமே கொண்ட நூலின் பிரதியை கவிஞரின் உடல் மீது வைத்து பாதிரிமார்கள் அஞ்சலி செலுத்தினர்.ஒரு கவிதை சகாப்தம் முற்றுப் பெற்றது. ஆனால், சினிமா எக்ஸ்பிரஸ் இதழில் கவிஞர் கண்ணதாசன் எழுதிய, ஏறத்தாழ ஒரு தன் வரலாற்றுத் தொடரான,  சினிமாச் சந்தையில் 30 ஆண்டுகளோ முற்றுப் பெறாமலேயே முடிவுக்கு வந்துவிட்டது. அனேகமாக கவிஞர் கண்ணதாசன் எழுதிய கடைசித் தொடர் இதுதான். இதுவே கடந்த 11 வாரங்களாக தினமணி இணையதளத்தில் மீள் பிரசுரம் செய்யப்பட்ட இந்தத் தொடரின் தனிச் சிறப்பும்கூட. தொடரில் நிறைய விஷயங்களை வெளிப்படையாகத் தெரிவித்திருப்பார் கவிஞர். ஒருவேளை திட்டமிட்டபடி கவிஞருடைய இந்தத் தொடரின் எல்லாப் படிகளும் அவரால் எழுதப்பட்டு வெளிவந்திருந்தால் வனவாசம், மனவாசம் போல இன்னொரு வாசமும் வரலாறாகியிருக்கும்.தான் உயிருடன் இருக்கும்போதே கவிஞர் கண்ணதாசன் தனக்காகத் தானே பாடிய  இரங்கற்பா இங்கே அவர் நினைவாக:இருந்து பாடிய இரங்கற்பா!பாரியொடும் கொடைபோகப் பார்த்தனொடும் /  கணைபோகப் படர்ந்த வல்வில் / ஓரியொடும் அறம்போக உலகமறை /  வள்ளுவனோ டுரையும் போக /  வாரிநறுங் குழல்சூடும் மனைவியொடும் /  சுவைபோக, மன்னன் செந்தீ / மாரியொடுந் தமிழ்போன வல்வினையை /  என்சொல்லி வருந்து வேனே!தேனார்செந் தமிழமுதைத் திகட்டாமல் /  செய்தவன்மெய் தீயில் வேக, / போனாற்போ கட்டுமெனப் பொழிந்ததிரு /  வாய்தீயிற் புகைந்து போக, /  மானார்தம் முத்தமொடும் மதுக்கோப்பை /  மாந்தியவன் மறைந்து போக, / தானேஎந் தமிழினிமேல் தடம்பார்த்துப் /  போகுமிடம் தனிமை தானே!பாட்டெழுதிப் பொருள்செய்தான் பரிதாபத் /  தாலதனைப் பாழுஞ் செய்தான்; / கேட்டழுத பிள்ளைக்கோர் சிறுகோடும் / கீறாமற் கிளைமு றித்தான்; / நாட்டழுகை கேளாமல் நந்துயரும் / காணாமல் நமனெனும்பேய் / சீட்டெழுதி அவன் ஆவி திருடியதை /  எம்மொழி யாற்செப்பு வேனே!பொய்யரையும் இசைபாடிப் புல்லரையும் /  சீர்பாடிப் புகழ்ந்த வாயால், / மெய்யரையும் வசைபாடி வேசையையும் /  இசைபாடி விரித்த பாவி, / கையரையும் காசின்றிக் கடைநாளில் /  கட்டையிலே கவிழ்ந்த தெல்லாம் / பொய்யுரையாய்ப் போகாதோ புத்தாவி / கொண்டவன் தான் புறப்ப டானோ!வாக்குரிமை கொண்டானை வழக்குரிமை /  கொண்டானை வாத மன்றில் / தாக்குரிமை கொண்டானைத் தமிழுரிமை / கொண்டானைத் தமிழ் விளைத்த / நாக்குரிமை கொண்டானை நமதுரிமை /  என்றந்த நமனும் வாங்கிப் / போக்குரிமை கொண்டானே! போயுரிமை / நாம்கேட்டால் பொருள்செய் யானோ!கட்டியதோர் திருவாயிற் காற்பணமும் / பச்சரிசி களைந்தும் போட்டு / வெட்டியதோர் கட்டையினில் களிமண்ணால் / வீடொன்றும் விரைந்து கட்டி / முட்டியுடைத் தொருபிள்ளை முன்செல்லத் /  தீக்காம்பு முனைந்து நிற்கக் / கொட்டியசெந் தமிழந்தக் கொழுந்தினிலும் / பூப்பூத்த கோல மென்னே!போற்றியதன் தலைவனிடம் போகின்றேன் /  என்றவன்வாய் புகன்ற தில்லை; / சாற்றியதன் தமிழிடமும் சாகின்றேன் / என்றவன்வாய் சாற்ற வில்லை; / கூற்றவன் தன் அழைப்பிதழைக் கொடுத்தவுடன் / படுத்தவனைக் குவித்துப் போட்டு / ஏற்றியசெந் தீயேநீ எரிவதிலும் / அவன்பாட்டை எழுந்து பாடு!-    தொடரும்கவிஞர் கண்ணதாசன் எழுதிய, கண்ணதாசனைப் பற்றி மற்றவர்கள் எழுதிய, எழுதுகிற கட்டுரைகள் என வழக்கம்போல இந்தத் தொடர் கவிஞர் கண்ணதாசன் நூற்றாண்டு நெடுகிலும் தொடரும் – ஒவ்வொரு புதன்கிழமையும்.['தினமணி'யின் பக்கங்களிலிருந்து]Kavignar Kannadasan final series of articles that ended abruptlyரூ. 125 சம்பளத்தில் அன்றிருந்த நிம்மதி இன்று இல்லை! கவிஞர் கண்ணதாசனின் கட்டுரைத் தொடர்! - 11அந்த அஸ்திவாரமும் அனுபவ ஞானமும் இளையராஜாவுக்கு அதிகம்! கவிஞர் கண்ணதாசனின் கட்டுரைத் தொடர்! - 10எல்லோருக்கும் ஏதாவது ஒரு புத்தி இருக்கும்; எனக்குதான் எதுவுமே இல்லாது போயிற்று! கவிஞர் கண்ணதாசனின் கட்டுரைத் தொடர்! - 9என்னால் மறக்க முடியாத இசையமைப்பாளர் இவர்தான்! கவிஞர் கண்ணதாசனின் கட்டுரைத் தொடர்! - 8பணத்தைச் சம்பாதிக்க எல்லோருக்கும்தான் தெரிகிறது! எவனுக்குக் கொடுக்கத் தெரிகிறது? கவிஞர் கண்ணதாசனின் கட்டுரைத் தொடர்! - 7இந்தப் படத்தில் அழுததுபோல் வேறெதிலும் நான் அழுததில்லை! கவிஞர் கண்ணதாசனின் கட்டுரைத் தொடர்! - 6 கட்டபொம்மனைவிட வெள்ளையர்களை எதிர்த்தது மருதுபாண்டியரே! கவிஞர் கண்ணதாசனின் கட்டுரைத் தொடர்! - 5இந்த படத்தைப் பார்த்து அண்ணாவும் கருணாநிதியும் பாராட்டினார்கள்! கவிஞர் கண்ணதாசனின் கட்டுரைத் தொடர்! - 4மற்ற நடிகர்களுக்கு இல்லாத திறமை எம்.ஜி.ஆருக்கு இருந்தது! கவிஞர் கண்ணதாசனின் கட்டுரைத் தொடர்! - 3கருணாநிதியுடன் பகைமைக்குக் காரணம் என்ன? கவிஞர் கண்ணதாசனின் கட்டுரைத் தொடர்! - 2எம்ஜிஆர் ஆசைப்பட்டதால் மதுரை வீரனுக்கு எழுதினேன்... கவிஞர் கண்ணதாசனின் கட்டுரைத் தொடர்!