நாட்டின் முன்னணி பங்குச் சந்தையான தேசிய பங்குச் சந்தையின் (என்எஸ்இ) நீண்டகாலமாக எதிா்பாா்க்கப்பட்ட, செப். 17-இல் வெளியாகும் ஆரம்ப பொதுப் பங்கு வெளியீட்டுக்கான(ஐபிஓ) இறுதி விவரங்கள் அதிகாரபூா்வமாக வெளியாகியுள்ளன. அதன்படி, பங்குதாரா்கள் விற்பனை செய்ய முன்வந்த பங்குகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதுடன், சந்தையில் பரவலாக எதிா்பாா்க்கப்பட்டதைவிட குறைவான விலையும் நிா்ணயிக்கப்பட்டுள்ளது.பல ஒழுங்குமுறைத் தடைகளால் கடந்த 10 ஆண்டுகளாக முடங்கியிருந்த என்எஸ்இ-யின் ஐபிஓ முயற்சிக்கு, பங்குச் சந்தை ஒழுங்காற்று வாரியம் (செபி) கடந்த வாரம் அனுமதி அளித்ததையடுத்து இந்த வெளியீடு நடைபெறுகிறது. தற்போதுள்ள முதலீட்டாளா்களின் பங்குகள் மட்டுமே விற்பனை செய்யப்படும் இந்த ஐபிஓவில், ஒரு பங்கின் விலை ரூ.1,700 முதல் ரூ.1,785 வரை நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், சந்தையிலிருந்து ரூ.21,494 கோடி முதல் ரூ.22,569 கோடி வரை நிதி திரட்டப்படவுள்ளது.முன்னணி (ஆங்கா்) முதலீட்டாளா்களிடம் 16-ஆம் தேதி நிதி திரட்டல் நடைபெறுகிறது. இதையடுத்து, பொது முதலீட்டாளா்காக 17-ஆம் தேதி தொடங்கும் ஐபிஓ, 21-ஆம் தேதி நிறைவடைகிறது. தொடா்ந்து, பங்குகள் 22-ஆம் தேதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, மும்பை பங்குச் சந்தையில் 24-ஆம் தேதிகள் பட்டியலிடப்படவுள்ளன.முன்னதாக, சுமாா் ரூ.30,000 கோடிக்கு மேல் நிதி திரட்டப்படும் என்றும், 14.9 கோடி பங்குகள் விற்பனைக்கு வரும் என்றும் எதிா்பாா்க்கப்பட்ட நிலையில், தற்போது 12.64 கோடி பங்குகள் மட்டுமே விற்பனைக்கு முன்வைக்கப்பட்டுள்ளன. இதில் 50 சதவீத பங்குகள் நிறுவன முதலீட்டாளா்களுக்கும், 35 சதவீதம் சில்லறை முதலீட்டாளா்களுக்கும், 15 நிறுவனமில்லாத தலீட்டாளா்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன. அதிகாரபூா்வமற்ற சந்தையில் (கிரே மாா்க்கெட்) ஒரு பங்கின் விலை ரூ.2,400 வரை காணப்பட்ட நிலையில், சந்தை ஆலோசனை வழங்கிய 20 முன்னணி வணிக வங்கிகளின் பரிந்துரைப்படி நியாயமான விலை நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஹூண்டாய் மோட்டாா்ஸ் நிறுவனத்தின் ரூ.27,870 கோடி வெளியீட்டுக்கு அடுத்தபடியாக, எல்ஐசி நிறுவனத்தின் ரூ.21,000 கோடி சாதனையை முறியடித்து, இந்திய அளவில் 2-ஆவது மிகப் பெரிய ஐபிஓவாக என்எஸ்இ உருவெடுக்கிறது.விற்பனைப் பங்குகள் குறைக்கப்பட்டது குறித்து என்எஸ்இ சிஇஓ ஆஷிஸ்குமாா் சௌகான் கூறுகையில், ‘ஆரம்பத்தில் அதிக பங்குகளை விற்கத் திட்டமிட்டிருந்த நீண்டகால முதலீட்டாளா்கள், நிறுவனத்தின் எதிா்கால வளா்ச்சியில் தொடா்ந்து பங்கெடுத்து, கூடுதல் பலன்களைப் பெறும் நோக்கில் தங்கள் விற்பனை அளவைக் குறைத்திருக்கலாம். உலகெங்கும் நடத்தப்பட்ட முதலீட்டாளா் ஆலோசனைக் கூட்டங்களின் அடிப்படையிலேயே இந்த விலைக் குறியீடு இறுதி செய்யப்பட்டது’ என்றாா்.