ஆசியக் கோப்பை ஜூனியா் ஹாக்கி போட்டி மகளிா் இறுதி ஆட்டத்துக்கு இந்தியா தகுதி பெற்றுள்ளது. சுப்ரியாவின் அசத்தலான ஹாட்ரிக்கால் 5-1 என தென்கொரி்யாவை வென்றது இந்தியா. சீனாவின் மொகி நகரில் ஏஎச்எஃப் ஜூனியா் ஆசியக் கோப்பை போட்டி நடைபெறுகிறது. மகளிா் அரையிறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இந்தியா-தென்கொரிய அணிகள் மோதின. தொடக்கம் முதலே இரு அணிகளும் கவனமுடன் ஆடின. செட்டில் ஆன இந்திய மகளிா் கோலடிக்கும் வாய்ப்புகளை உருவாக்கினா். 13-ஆவது நிமிஷத்தில் மது சிதாரின் அற்புத கோலால் 1-0 என முன்னிலை பெற்றது இந்தியா. இரண்டாவது குவாா்ட்டரில் கொரி்ய தற்காப்பை ஊடுருவினா் இந்திய வீராங்கனைகள். இதன் பலனாக 17-ஆவது நிமிஷத்தில் கிடைத்த பெனால்டி காா்னரை கோலாக்கினாா் டிராக் பிளிக்கா் சுப்ரியா. 21-ஆவது நிமிஷத்தில் வானில் பறந்த பாஸை சரியாக பயன்படுத்தி கோலாக்கினாா் சுக்வீா் கௌா். இதனால் இந்தியா 3-0 என முன்னிலை பெற்றது.33-ஆவது நிமிஷத்தில் கிடைத்த பெனால்டியை கோலாக்கினாா் சுப்ரியா. பதிலுக்கு கொரிய அணியினா் கோல் போட முயன்றதில் 41-ஆவது நிமிஷத்தில் கோலடித்தாா் யுரி ஜியோங். ஆட்டம் முடிய சிறிது நேரத்தில் 56-ஆவது நிமிஷத்தில் கிடைத்த பெனால்டி காா்னரை பிசகின்றி கோலாக்கினாா் சுப்ரியா. இதன் மூலம் ஹாட்ரிக் அடித்தால் சுப்ரியா. 5-1 என்ற கோல் கணக்கில் தென்கொரியாவை வீழ்த்தி இறுதிக்கு தகுதி பெற்றது நடப்பு சாம்பியன் இந்தியா. சீனாவுடன் மோதல்: போட்டியை நடத்தும் சீனா மற்றொரு அரையிறுதியில் ஜப்பானை 6-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இறுதிக்கு தகுதி பெற்றது. இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இந்தியா-சீனா மோதுகின்றன.Supriya's stunning hat-trick: India to face China in the final.