மதுரை மீனாட்சியும் மகாத்மா காந்தி கண்ட ஜீவசக்தியும்!

Wait 5 sec.

மதுரைக்கு ஐந்து முறை வந்திருக்கும் மகாத்மா காந்தி, ஒரு முறை கோவில் வாசல் வரை வந்து திரும்பிவிட்டுத் தன் வாழ்நாளின் கடைசிப் பயணத்தில்தான் மீனாட்சியம்மன் கோவிலுக்குச் செல்கிறார்; நீண்ட நாள் விருப்பம் ஈடேறியதெனக் குறிப்பிட்டதுடன், அம்மனிடம் ஜீவசக்தியைக் கண்டதாகவும் தெரிவிக்கிறார்.மதுரைக்கு முதன்முதலாக 1919, மார்ச்சில் ரௌலட் சட்டத்துக்கு எதிரான  சத்தியாகிரகப் போராட்டத்துக்குத் தொண்டர்களைச் சேர்ப்பதற்காக வருகிறார் மகாத்மா காந்தி.1921, செப்டம்பரில் மதுரை வந்திருந்தபோதுதான், தன்னையும் எளிய மக்களில் ஒருவராக அடையாளப்படுத்திக் கொள்ளும் வகையில் மேலாடை அணியும் பழக்கத்தைத் துறந்து வேஷ்டி துண்டுக்கு மாறுகிறார்.1927-ல் கதர் திட்டத்துக்கு நிதி திரட்டுவதற்காக ஒரு முறை மதுரை வருகிறார்.1934-ல் அகில இந்திய ஹரிஜன பயணத்தின் ஒருபகுதியாக மதுரை வந்தபோது, மீனாட்சியம்மன் கோவிலுக்குச் செல்வதற்காக வாசல் வரை வந்தார் மகாத்மா காந்தி. ஆனால், தான் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒருவன் என்பதால் அந்த இடத்திற்கு மேல் கோவிலுக்குள் தன்னால் வர இயலாது என்று உடன் வந்த காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான பி. கக்கன் தெரிவிக்கிறார். அவ்வாறெனில் தானும் கோவிலுக்குள் செல்லப் போவதில்லை என்று கூறிக் கோவிலுக்குள் தரிசனத்துக்குச் செல்லாமல் திரும்பிவிடுகிறார் மகாத்மா காந்தி. இதன் விளைவாகத்தான், விடுதலைப் போராட்ட வீரர் வைத்தியநாத அய்யர் தலைமையிலான தாழ்த்தப்பட்ட மக்களின் ஆலய நுழைவுப் போராட்டம்  நடைபெற்றது என்பது தனியொரு வரலாறு.1946, பிப்ரவரியில் மதுரை வந்த மகாத்மா காந்தி, ஹரிஜன மக்களுடன் சேர்ந்தே மீனாட்சியம்மன் கோவிலுக்கு உள்ளே சென்று தரிசனம் செய்கிறார்.தினமணியின் பக்கங்களிலிருந்து:1946, பிப். 3 - காலை 7.45 மணிக்கு காந்தி ஸ்ரீ மீனாட்சியம்மை ஆலயத்திற்குச் சென்று கயல்கண்ணியையும் சுந்தரேஸ்வரரையும் தரிசித்தார். வேத கணங்கள் மந்திரங்கள் ஓத, யானைகள் பீறிட, ஒட்டகங்கள் ஆர்ப்பரிக்க, மங்கள வாத்தியங்கள் முழங்க மகாத்மா ஆலயத்திற்குள் சென்றார். அவருக்கு பூர்ண கும்பம், பரிவட்டம் முதலிய கோவில் மரியாதைகள் செய்யப்பட்டன.ஹரிஜன கோஷ்டியுடன் சன்னிதானம் வரை சென்ற காந்திஜி, தம்மைச் சுற்றியிருந்த கூட்டத்தைப் பற்றிய பிரக்ஞையேயில்லாமல், மெய் மறந்து தியானத்தில் ஈடுபட்டிருந்தார். ஒரு மணி நேரத்துக்குப் பின், அவர் குங்கும திலகமிட்டு, பக்தி பரவசம் கொண்டு ஆலயத்திலிருந்து வெளிவந்து, வெளியே தெருக்களில் கூடியிருந்த திரளான மக்களுக்குத் தரிசனமளித்தார்.சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் மகாத்மா தரிசனம் செய்யும்போது, ஒரு பட்டர், மந்திரங்களை மிக வேகமாக சொல்லி அடித்துக்கொண்டு போனார். உடனே காந்திஜி அவரை அழைத்து, மந்திரத்தைச் சற்று மெதுவாகவும் நிதானமாகவும் ஓதுங்கள் என்று கூறினார்.மகாத்மாவுடன் ஸ்ரீமான்கள் தக்கர் பாபா, பியாரிலால், மங்களதாஸ் காந்தி ஆகியோரும் இதர (வார்தா) ஆசிரமவாசிகளும் சென்றனர். ஸ்ரீ கே. காமராஜ நாடாரும் ஆலயத்திற்குள் வந்திருந்தார். ஸ்ரீ வி.ஐ. முனுசாமி பிள்ளை தலைமையில் 20 தாழ்த்தப்பட்ட மக்களும் குழந்தைகளை ஏந்திக்கொண்டு சில பெண்களும் உடன் வந்தனர் (அன்றைக்கு வழக்கமாக இருந்த சில சொற்கள் மாற்றப்பட்டிருக்கின்றன).ஆலய வெளிப்புற வாயிலில் சம்பிரதாய முறைப்படி தங்க, வெள்ளி ஆடைகள் அணிந்திருந்த புரோகிதர்கள் காந்திஜியை வரவேற்றனர். கோவில் நிர்வாக அதிகாரி ஆர்.எஸ். நாயுடுவும் இதரரும் காந்திஜியை ஆலயத்துக்குள் அழைத்துச் சென்றனர்.கோவில் உள்புற வாசல் தாண்டியவுடன் மூன்று அலங்கரிக்கப்பட்ட யானைகள் காந்திஜி முன் வணங்கி மரியாதை செய்தன. ஜகத்குரு சங்கராச்சாரியார் போன்ற மதாசாரியார்களுக்கும் மஹாராஜாக்களுக்கும் மட்டுமே இம்மரியாதை  சாதாரணமாகச் செய்யப்படுவதுண்டு.காந்திஜி சன்னிதானத்தருகில் சென்றவுடன், மற்ற கூட்டம் பின்னால் நிறுத்தப்பட்டது. ஹரிஜன கோஷ்டியுடன் காந்திஜி சன்னிதானத்திற்குள் சென்றார். மோஹன்தாஸ் கரம்சந்திர காந்தியின் பெயரால் அர்ச்சனை செய்து குங்குமம், திலகம் வழங்கினர்.தம்மைச் சுற்றியிருந்த கூட்டத்தைப் பொருட்படுத்தாமல் காந்திஜி கண்களை மூடி தியானத்தில் ஈடுபட்டு, பக்தி பரவசம் கொண்டிருந்தார்.மீனாக்ஷியம்மையைத் தரிசித்த பிறகு சுந்தரேஸ்வரர் சன்னிதானத்துக்குச் சென்ற அவர், முழு நேரமும் சுந்தரேஸ்வரரைக் கண்ணால் பருகிக் கொண்டிருந்தார். பிறகு மற்ற சன்னிதானங்களுக்குச் சென்றுவிட்டு, வெளியே வீதிகளில் மக்களுக்குத் தரிசனமளித்துவிட்டு, சிவகங்கை மாளிகைக்குச் சென்றார்.ராஜாஜிக்குக் கடுமையான ஜலதோஷம் ஏற்பட்டிருந்ததால் அவர் காந்திஜியுடன் ஆலயத்துக்குச் செல்லவில்லை.1939-ல் காங்கிரஸ் மந்திரிசபை நிர்வாகத்தை நடத்திவந்தபோது இந்த ஆலயம் ஹரிஜனங்களுக்குத் திறக்கப்பட்டது. காந்திஜி முன்பு மதுரைக்கு மூன்று முறை விஜயம் செய்திருந்தபோதிலும் தாம் ஹரிஜனனென்றும் ஹரிஜனங்கள் அனுமதிக்கப்படாத ஆலயத்தில் தாமும் செல்வதில்லையென்றும் காந்திஜி சொன்னார்.காந்திஜியின் உதவிக்கு / ‘தினமணி’ நிருபர்கர்ப்பக்கிருஹத்திற்குச் செல்லும் வழியில் கூட்டம் அதிகமிருந்ததால் காந்திஜி தமது கோஷ்டியிலிருந்து தனியாகப் பிரிந்து கூட்டத்தில் சிக்கிக் கொண்டார். வழியில் ஏதோ தடங்கலிருந்ததால் தடுக்கி விழவிருந்த காந்திஜி கையைப் பிடித்து, தினமணி நிருபர் அவரை பத்திரமாய் மற்ற கோஷ்டியினர் நிற்கும் இடத்திற்கு அழைத்துச் சென்றார்.அன்று ஆலயப் பிரவேசத்தை எதிர்த்த பட்டர்கள்... இன்று மகாத்மாவையும் ஹரிஜனங்களையும் வரவேற்றனர் என்று பிரதான செய்தியிலேயே துணைத் தலைப்பிட்டுச் செய்தி தந்திருக்கிறார், காந்திஜியுடன் செல்லும் “தினமணி” நிருபர் என்ற பைலைனுடன்...‘காந்திஜி இன்று மீனாட்சியம்மை ஆலயத்திற்குச் சென்றபோது, 1939-ல் ஹரிஜன ஆலயப் பிரவேச சட்டத்தை எதிர்த்து மதுரை ஆலயத்திலிருந்து வெளியேறி, மீண்டும் இப்போது ஆலயத்தில் சேர்ந்துள்ள பட்டர்கள் சிலரும் அவரை மனமுவந்து வரவேற்று, அவரையும் அவருடன் வந்திருந்த ஹரிஜன கோஷ்டியையும் சன்னிதானத்துக்கு அழைத்துச் சென்றனர்’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.மகாத்மாவின் ஆலய விஜயம் பற்றிய தினமணியின் இந்தச் செய்தியில் உதவிய தினமணி நிருபர் என்று குறிப்பிட்டிருந்தபோதிலும் அவருடைய பெயர் குறிப்பிடப்படவில்லை.“நீண்ட நாள் விருப்பம் / ஈடேறியது”“பல வருஷங்களாக நான் கொண்டிருந்த விருப்பம் இன்று ஈடேறியது பற்றி மகிழ்ச்சியடைகிறேன்” என்று மீனாட்சி ஆலயத்துக்குச் சென்று திரும்பிய பின் கோவில் நிர்வாக அதிகாரி ஸ்ரீ ஆர்.எஸ். நாயுடுவிடம் மகாத்மா காந்தி கூறினார். கோவிலுக்கு வருவோருக்கென வைக்கப்பட்டிருக்கும் குறிப்புப் புத்தகத்திலும் காந்திஜி மேற்சொன்னவாறு ஹிந்துஸ்தானியில் தம் கைப்பட எழுதியிருக்கிறார்.மதுரையில் முந்தைய நாள் நடந்த பிரார்த்தனைக் கூட்டத்தில் ஐந்து லட்சம் மக்கள் குழுமியிருந்ததாகவும் இரவு 9 மணி வரை காந்திஜியைக் காணாமல் கூட்டம் கலைய மறுத்துவிட்டதாகவும் தினமணி செய்தியில் குறிப்பிட்டுள்ளது.மதுரையில் மீனாட்சியம்மன் கோவிலுக்குச் சென்று தரிசித்த பிறகு தங்குமிடம் திரும்பிய மகாத்மா காந்தி குழுவினர், அதே நாள் பிற்பகலில் மதுரை நகருக்கு அப்பாலுள்ள கேட் அருகில் தங்களுடைய சிறப்பு ரயிலிலேறி பழனிக்குப் புறப்பட்டுச் சென்றனர். பழனியில் மக்களிடையே பேசியபோதுதான் மதுரை மீனாட்சியம்மன் தரிசனம் பற்றிக் குறிப்பிடுகிறார் மகாத்மா காந்தி.மாலையில் பழனியில் அந்த பிரார்த்தனைக் கூட்டத்தில் ஒரு லட்சம் பேர் கூடியிருந்தனர்; பஜன்கள், நாமாவளிப் பாடல்களுக்குப் பிறகு மக்களிடையே பேசிய மகாத்மா காந்தி, தீண்டாமை பற்றியும் மதுரையில் மீனாட்சியம்மனைத் தரிசித்தது பற்றியும் குறிப்பிட்டார்.“ஜாதி, வகுப்பு, நிற வேற்றுமையில்லாத ஒரு சமுதாயம் ஏற்பட வேண்டிய காலம் வந்துவிட்டது. அந்தத் திசையில் முதல் நடவடிக்கை இதுதான்: ஒரு மனிதனைத் தீண்டத் தகாதவன் என்று சொல்லி ஆலயங்களுக்குச் செல்லக்கூட அனுமதிக்காமலிருப்பது அநீதி என்பதை ஆலயந்தொழுவோர் உணர வேண்டும். இந்த உணர்ச்சியை வளர்ப்பது முதல் நடவடிக்கையாகும். அந்த மனப்பான்மை பெற்றுவிட்டார்களானால் ஜாதிப் பிரிவினையில்லாத சமுதாயம் ஏற்பட்டுவிடும். பழனியாண்டவர் ஸ்ரீ சுப்ரமண்யன் முன்னிலையிலேயே நீங்கள் தீண்டாமை மனப்பான்மையை விட்டுவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இந்தத் தீமையை ஒழிக்க உங்களால் ஆனதெல்லாம் செய்வீர்கள் என எதிர்பார்க்கிறேன்.“ஒருவன் பிறப்பின் காரணமாக அவனைத் தொட்டால் தீட்டு என்ற கருத்து அடியோடு ஒழிந்துவிட வேண்டும். ஹரிஜனங்கள் விஷயத்தில், ஏன், உலகிலுள்ள எல்லா ஜீவன்களிடமும் நியாயமாக நடந்துகொள்ள வேண்டும் என்று பிரார்த்தனை செய்வதைவிட உயர்ந்த காரியம் வேறில்லை. பிரார்த்தனை என்பது உதவாக்கரை காரியமல்ல. அதை முழு கவனத்தையும் செலுத்தி ஏக சித்தத்துடன் செய்ய வேண்டும். அதன் மூலம் ஆண்டவனுடன் விடாத தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டும்.அம்மனிடம் ஜீவ சக்தி“பிரபலமான மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்குப் போனேன். விக்ரஹ ஆராதனையில் எனக்கு அவ்வளவாக நம்பிக்கை கிடையாது. ஹரிஜனங்கள் உள்பட சகலமானவர்களுக்கும் ஆலயத்தின் கதவுகள் திறந்துவிடப்பட்டதன் விளைவாக மீனாட்சியம்மனின் விக்ரஹத்துக்கு “ஜீவ சக்தி” ஏற்பட்டிருப்பதைக் கண்டேன். அம்மனின் விக்ரஹத்தைப் பிரார்த்தித்ததற்கு அதுதான் காரணம்.“ஆலயங்களுக்குச் செல்வோருக்கு தாழ்ந்திருப்போர், சமூகத்தின் பாதாளத்தில் கிடப்போர் விஷயத்தில் மனமாறுதல் ஏற்பட்டிருந்தால் விக்ரஹ ஆராதனைத் தத்துவம் விரும்பிய பலனை அளிக்கும்.“நாம் சமத்துவம், ஐக்கியம் ஆகிய தெய்விகமான உணர்ச்சிகளைக் கொண்டு, ஹரிஜனங்கள்பால் மனப்பான்மையை மாற்றினாலொழிய ஆலயம் தொழுவதனால் விசேஷ பலன் எதுவும் கிடையாது” என்று குறிப்பிட்டார் மகாத்மா காந்தி.கோவிலுக்குள் நுழைய ஹரிஜனங்களுக்கு அனுமதியில்லை என்றபோது, வாசல் வரை வந்த பிறகும் கோவிலுக்குள் நுழையாமல் திரும்பிச் செல்கிறார்; 12 ஆண்டுகளுக்குப் பிறகு அதே கோவிலுக்குள் தாழ்த்தப்பட்ட மக்கள் சூழத் தெய்வங்களைத் தரிசிக்கச் செல்கிறார் காந்தி மகாத்மா. பிரிக்க முடியாதவை அன்னை மீனாட்சியம்மன் கோவிலும் அன்பு மகாத்மாவின் நினைவுகளும்!From the archives of Dinamani: On the visit to the Madurai Meenakshi Amman Temple and Mahatma Gandhi’s resolve against untouchability