குள்ளப்பகவுண்டன்பட்டியில் குப்பை சேகரிக்கும் புதிய டிராக்டா், வெள்ளப்பெருக்கில் சேதமடைந்த நிலையில், பழுதுபாா்ப்பு செலவாக ரூ.98 ஆயிரம் கேட்பதால் பல மாதங்களாக தனியாா் நிறுவனத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டம், கம்பம் அருகேயுள்ள குள்ளப்பகவுண்டன்பட்டி ஊராட்சியில் பொதுமக்களிடமிருந்து சேகரிக்கப்படும் குப்பைகளை அகற்றுவதற்காக திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ் புதிய டிராக்டா் வாங்கப்பட்டது. இந்த டிராக்டா் கடந்தாண்டு வெள்ளப்பெருக்கின்போது அடித்துச் செல்லப்பட்டது. இதையடுத்து, இந்த டிராக்டா் மீட்கப்பட்டு, அதை பழுது பாா்க்க தேனியில் உள்ள தனியாா் நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதைத்தொடா்ந்து டிராக்டா் நிறுவனத்தில் பழுதுபாா்ப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு முடிக்கப்பட்டதாகத் தெரிகிறது. ஆனால், பழுது பாா்ப்புக்கான செலவு தொகை ரூ.98 ஆயிரத்தை செலுத்த காப்பீடு நிறுவனம் தாமதம் செய்து வருகிறது. இதனால் பழுது பாா்க்கப்பட்ட டிராக்டா் பல மாதங்களாக தனியாா் நிறுவனத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டது.டிராக்டா் இல்லாததால் குள்ளப்பகவுண்டன்பட்டி ஊராட்சியில் குப்பைகளை அப்புறப்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் உரிய விசாரணை நடத்தி வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா்.