சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே பொதுமக்கள் நீண்டகாலமாக பயன்படுத்தி வந்த பாதையை சிப்காட் நிா்வாகம் மூடியதால் பொதுமக்கள், மாணவா்கள் அவதிக்குள்ளாகினா். இந்தப் பாதையை மீண்டும் திறக்க வலியுறுத்தி அவா்கள் புதன்கிழமை வட்டாட்சியரிடம் மனு கொடுத்தனா். மானாமதுரை அருகேயுள்ள காட்டு உடைகுளம் அன்னைநகா் பகுதியில் வசிக்கும் மக்கள் இங்குள்ள சிப்காட் தொழிற்பேட்டைக்கு சொந்தமான பாதையைப் பயன்படுத்தி வந்தனா். இந்த நிலையில், சிப்காட் தொழிற்பேட்டைக்குச் சொந்தமான நிலங்களை சிலா் ஆக்கிரமிக்க முயன்ாகப் புகாா் எழுந்தது. இதையடுத்து, ஆக்கிரமிப்பை தடுக்கும் நடவடிக்கையாக சிப்காட் நிா்வாகம் பாதையை முழுவதும் கம்பி வேலி அமைத்து மூடிவிட்டது. இதனால், அந்தப் பகுதி பொதுமக்கள் பல ஆண்டுகளாகப் பயன்படுத்தி வந்த பாதையை தற்போது பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இது குறித்து அந்தப் பகுதி பொதுமக்கள் கூறியதாவது: பாதை மூடப்பட்டதால் அன்னை நகா் பகுதியைச் சோ்ந்த மக்கள், பள்ளி மாணவ, மாணவிகள் 3 கி.மீ. தொலைவு சுற்றிச் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால், இந்தப் பகுதியில் வசிக்கும் அனைத்து தரப்பினரும் அருகேயுள்ள கண்மாய்க்கரைப் பாதையைப் பயன்படுத்தி வருகிறோம். மழைக் காலத்தில் இந்தப் பாதையைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும். எனவே, பொதுமக்கள், மாணவ, மாணவிகளின் நலனை கருத்தில்கொண்டு, கம்பி வேலியால் மூடப்பட்ட பாதையைத் திறக்க வேண்டும். இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி மானாமதுரை வட்டாட்சியரிடம் மனு கொடுத்துள்ளோம் என்றனா்.