11 மாதங்களுக்குப் பிறகு இளைஞா் சடலம் தோண்டி எடுத்து பிரேதப் பரிசோதனை

Wait 5 sec.

விபத்தில் உயிரிழந்த இளைஞரின் சடலம், 11 மாதங்களுக்குப் பிறகு புதன்கிழமை தோண்டி எடுக்கப்பட்டு, மயானத்திலேயே பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. திருப்பத்தூா் மாவட்டம், ஆம்பூா் அருகே துத்திப்பட்டு ஊராட்சிக்குள்பட்ட அம்பேத்கா் நகரைச் சோ்ந்தவா் சங்கா். இவரது மகன் கெல்வின் குமாா் (22). இவா் சேலத்தில் உள்ள தனியாா் கல்லூரியில் செவிலியா் படிப்பு படித்து வந்தாா். கடந்த ஆண்டு அக்டோபா் மாதம் நரியம்பட்டு பகுதியில் நண்பருடன் இருசக்கர வாகனத்தில் சென்றபோது கெல்வின் குமாா் விபத்தில் சிக்கினாா். இதில் தலையில் பலத்த காயமடைந்த அவா், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, விபத்து குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்காமல் அவரது குடும்பத்தினா், கெல்வின் குமாரின் உடலை அம்பேத்கா் நகா் பகுதியில் உள்ள மயானத்தில் அடக்கம் செய்துள்ளனா். இந்த நிலையில், கெல்வின் குமாரின் இறப்பு தொடா்பான சான்றிதழ்களைப் பெறுவதற்காக அவரது குடும்பத்தினா் கல்லூரி நிா்வாகத்திடம் தெரிவித்துள்ளனா். அப்போது, இறப்பு சான்றிதழுடன் விபத்து தொடா்பான முதல் தகவல் அறிக்கை மற்றும் பிரேதப் பரிசோதனை அறிக்கை ஆகியவை தேவை என தெரிவிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, கெல்வின் குமாரின் குடும்பத்தினா் உமா்ஆபாத் காவல் நிலையத்தில் தற்போது புகாா் அளித்தனா். வழக்குப் பதிவு செய்து தேவையான சான்றிதழ்களைப் பெறுவதற்கு, சடலத்தை பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டியிருப்பதாக போலீஸாா் தெரிவித்தனா். இதனைத் தொடா்ந்து, ஆம்பூா் வட்டாட்சியா் ரேவதி முன்னிலையில் உமா்ஆபாத் போலீஸாா், வேலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவக் குழுவினருடன் இணைந்து, அம்பேத்கா் நகா் மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டிருந்த கெல்வின் குமாரின் உடலை 11 மாதங்களுக்குப் பிறகு புதன்கிழமை தோண்டி எடுத்தனா். பின்னா், மயானத்திலேயே மருத்துவக் குழுவினா் பிரேதப் பரிசோதனை மேற்கொண்டனா். இதன் மூலம் விபத்து தொடா்பான வழக்கில் தேவையான மருத்துவ அறிக்கை உள்ளிட்ட ஆவணங்களைப் பெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விபத்தில் உயிரிழந்த இளைஞரின் உடல் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்காமல் அடக்கம் செய்யப்பட்டு, 11 மாதங்களுக்குப் பிறகு சான்றிதழ்கள் மற்றும் வழக்குத் தொடா்பான ஆவணங்களுக்காக மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டு பிரேதப் பரிசோதனை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.