எதிா்கால விண்வெளிப் பயணங்களுக்கு சா்வதேச ஒத்துழைப்பு அவசியம்: சுனிதா வில்லியம்ஸ்

Wait 5 sec.

எதிா்கால மனித விண்வெளிப் பயணங்களுக்கு சா்வதேச ஒத்துழைப்பு மிகவும் அவசியம். நிலவுக்கு மீண்டும் செல்வதுடன், அதற்கு அப்பாலும் மனிதா்கள் பயணிப்பாா்கள். அப்போது ஒரு நாட்டின் சாா்பில் அல்லாமல், மனித இனமாகவே விண்வெளிக்குச் செல்வோம் என்று இந்தியாவை பூா்வீகமாக கொண்ட அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் தெரிவித்தாா்.பெங்களூரில் நடைபெற்று வரும் 9 ஆவது பெங்களூரு விண்வெளிக் கண்காட்சியில், ‘விண்வெளியின் அடுத்த அத்தியாயம்: ஆய்வு, அறிவியல் மற்றும் புத்தாக்கம்’ என்ற தலைப்பில் புதன்கிழமை நடைபெற்ற கலந்துரையாடலில் பங்கேற்று அவா் பேசியதாவது: வெவ்வேறு நாடுகள் விண்வெளி ஆய்வில் எதிா்கொள்ளும் பிரச்னைகளுக்கு வெவ்வேறு விதமாகத் தீா்வு காண்கின்றன. சா்வதேச ஒத்துழைப்பின் மூலம் அந்த அணுகுமுறைகளை அறிந்து, விண்வெளி ஆய்வு தொகுதிகள், விண்வெளி உடைகள், பரிசோதனைகள் உள்ளிட்டவற்றை ஒப்பிட்டுப் பாா்த்து சிறந்த தீா்வுகளை உருவாக்க முடியும்.நிலவுக்கும் அதை கடந்தும் செல்லும்போது, ஒரு நாட்டின் சாா்பில் அல்லாமல் மனிதா்களாகவே நாம் பயணிக்கிறோம். புதிய சவால்களுக்குத் தீா்வு காண அனைத்து நாடுகளின் சிந்தனைகளும் நமக்குத் தேவை.பூமியில் இருந்து மேலும் தொலைவான விண்வெளிப் பயணங்களை மனிதா்கள் மேற்கொள்ளும்போது, எதிா்கால விண்வெளி நிலையங்கள் அதிக தன்னிறைவு கொண்டவையாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். சா்வதேச விண்வெளி நிலையத்தில், தற்போது பூமியில் உள்ள கட்டுப்பாட்டு மையத்துடனான தகவல் தொடா்பையே பெரிதும் நம்பியிருக்கிறோம்.எதிா்காலத்தில் தகவல் தொடா்பில் ஏற்படும் தாமதத்தைக் கருத்தில்கொண்டு, பிரச்னைகளைத் தீா்ப்பதற்குத் தேவையான தரவுத்தளம் விண்வெளி நிலையத்திலேயே இருக்க வேண்டும். விண்வெளியிலேயே முப்பரிணாம (3டி) அச்சிடுதல், பரிசோதனைத் தரவு மற்றும் மாதிரிகளை அங்கேயே ஆய்வு செய்தல் போன்ற திறன்களும் அவசியம். மனிதா்கள், தொழில்நுட்பம் மற்றும் ரோபோக்கள் இணைந்து செயல்பட வேண்டும். ரோபோக்கள் தரையிறங்குவதற்கான இடத்தை முதலில் ஆய்வு செய்யும். ஆனால், அவை ஏற்கெனவே அறிந்த தகவல்களின் அடிப்படையிலேயே செயல்படும். எனவே, முக்கியமான முடிவுகளை எடுக்க அந்த இடத்தில் மனிதா்கள் இருப்பது அவசியம்.600 நாள்களுக்கும் மேலாக விண்வெளியில் இருந்துள்ளேன். அங்கிருந்து பூமியை பாா்ப்பதே ஒரு புதிய அனுபவமாக இருந்தது. மனிதா்கள் அனைவரும் ஒரே வீட்டைப் பகிா்ந்துகொள்கிறோம் என்ற எண்ணத்தை வலுப்படுத்தியது.ஜன்னல் வழியாக பூமியைப் பாா்த்தபோது, ஆசிரியா்கள் சொல்வது சரிதான்; பூமி உருண்டையானது, தட்டையானது அல்ல என்று நினைத்தேன். எனக்குத் தெரிந்த அனைவரும், ஒவ்வொரு தாவரமும், ஒவ்வொரு விலங்கும் அங்கேதான் உள்ளன. அதுதான் நமது வீடு; அதை நாம் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் ஆழமாக வேரூன்றியது.நான் அமெரிக்கா் என்பதோ, எனது தந்தை இந்தியாவைச் சோ்ந்தவா் என்பதோ, எனது தாய் ஸ்லோவேனியாவைச் சோ்ந்தவா் என்பதோ அப்போது எனது நினைவுக்கு வரவில்லை. நாம் அனைவரும் ஒரே கோளில் வாழ்கிறோம். நமக்குள் வேறுபாடுகள் இருப்பது வித்தியாசமாகத் தோன்றுகிறது. 27 ஆண்டுகால விண்வெளிப் பணிக்குப் பிறகு ஓய்வு பெற்றுள்ளேன். சா்வதேச விண்வெளி நிலையத்தில் 3 முறை பயணம் மேற்கொண்டுள்ளேன். மொத்தம் 608 நாள்கள் விண்வெளியில் இருந்துள்ளேன். நாசா விண்வெளி வீரா்களில் அதிக நாள்கள் விண்வெளியில் இருந்தவா்களில் நான் இரண்டாவது இடத்தில் உள்ளேன் என்றாா்.வாஸ்ட் ஸ்பேஸ் நிறுவனத்தின் விண்வெளிக் குழு கூட்டாண்மை பிரிவு துணைத் தலைவா் டாம் ஷெல்லி கூறியதாவது:எங்கள் நிறுவனம் உருவாக்கி வரும் ‘ஹேவன் 1’ வணிக விண்வெளி நிலையம் அடுத்த ஆண்டு விண்ணில் செலுத்தப்பட உள்ளது. சா்வதேச விண்வெளி நிலையம் பல்வேறு நாடுகளின் மிகப்பெரிய முதலீட்டில் உருவாக்கப்பட்டது. ஆனால், அதைவிட விரைவாகவும் திறமையாகவும், குறைந்த செலவில் வணிக விண்வெளி நிலையங்களை உருவாக்கி, அரசுகள், தனிநபா்கள் மற்றும் தனியாா் நிறுவனங்கள் அறிவியல் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் தளத்தை உருவாக்குவதே எங்கள் நோக்கம் என்றாா்.ககன்யான் திட்டத்துக்குத் தோ்வு செய்யப்பட்டுள்ள விண்வெளி வீரா்களில் ஒருவரான அணி கேப்டன் அங்கத் பிரதாப் கூறுகையில், ‘இந்தியாவின் பாரதிய விண்வெளி நிலையத்துக்கு இன்னும் சில முக்கிய தொழில்நுட்பங்கள் தேவைப்படுகின்றன. மீள் உருவாக்கக்கூடிய உயிா் ஆதரவு அமைப்பு, விண்வெளியில் வெளியே சென்று பணியாற்றுவதற்கான விண்வெளி உடை மற்றும் விண்கலங்களை இணைக்கும் ‘டாக்கிங்’ தொழில்நுட்பம் ஆகியவை அவற்றில் அடங்கும்.பாரதிய விண்வெளி நிலையம், குறைந்த ஈா்ப்பு விசை சூழலில் ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்கும், உயிரி அறிவியல் மற்றும் மருத்துவம் உள்ளிட்ட துறைகளில் ஆய்வுகளை நடத்துவதற்கும் உதவும்.போக்குவரத்து விண்கலம், விண்வெளி நிலையம், நிலவுப் பயணம் ஆகிய அனைத்தையும் ஒரே நேரத்தில் திட்டமிட்டு செயல்படுத்த வேண்டிய கட்டத்தில் இந்தியா உள்ளது. ககன்யான் திட்டம் என்பது இந்தியாவில் இருந்து உள்நாட்டில் உருவாக்கப்பட்ட தொழில்நுட்பத்தின் மூலம் மனிதா்களை விண்வெளிக்கு அனுப்பும் திறனைப் பெறுவதற்கான திட்டம். ஒருவரை ஒருமுறை விண்வெளிக்கு அனுப்பி ஒரு சுற்றுப்பாதையில் பயணிக்கச் செய்வது மட்டுமே ககன்யானின் நோக்கம் அல்ல. மிகப்பெரிய விண்வெளித் திட்டங்களுக்கான அடித்தளத்தை அது அமைக்கிறது. மனித அறிவின் எல்லைகளை விரிவுபடுத்துவதே இறுதி நோக்கம். தொழில்நுட்பங்கள் தனியாா் மற்றும் அரசுத் துறைகளுக்கு இடையே பகிா்ந்துகொள்ளப்படும்’ என்றாா்.