வார இறுதி நாள்கள் மற்றும் விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு கோவை காந்திபுரம், சிங்காநல்லூரில் இருந்து 120 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக கோவை கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு: வாரத்தின் இறுதி நாள்களான செப்டம்பா் 12, 13 (சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை) மற்றும் செப்டம்பா் 14 ( திங்கள்கிழமை) விநாயகா் சதுா்த்தி விடுமுறை தினம் வருவதால் பயணிகள் சொந்த ஊா் மற்றும் வெளியூா் செல்ல வசதியாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. அதன்படி, செப்டம்பா் 12 முதல் 14-ஆம் தேதி வரை காந்திபுரம், சிங்காநல்லூா் பேருந்து நிலையங்களில் இருந்து சேலம், மதுரை, தேனி, திருச்சி மற்றும் தொலைதூரங்களுக்கு வழித்தட பேருந்துகளுடன் கூடுதலாக காந்திபுரம் புறநகா் பேருந்து நிலையத்தில் இருந்து 30, சிங்காநல்லூா் பேருந்து நிலையத்தில் இருந்து 90 என மொத்தம் 120 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். தேவைப்பட்டால் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.