ரயில்களில் பயணிப்பதற்கு டிக்கெட் முன்பதிவு செய்வோர் பலரும், முக்கிய நாள்களில் குறிப்பாக தீபாவளி, பொங்கல், தொடர் விடுமுறை நாள்களில், தொடங்கியதுமே முடிந்துவிட்டது, டிக்கெட் கிடைக்கவில்லை என்று புலம்ப வேண்டிய நிலையில் இருக்கின்றனர். இதற்கு காரணம் என்ன? பொதுவாகத் தனியார் பேருந்துகளைவிட ரயில் முன்பதிவு கட்டணம் குறைவு என்பதாலும் தங்கள் வசதிக்காகவும் பாதுகாப்புக்காகவும் ரயில் பயணத்தை மக்கள் தேர்வு செய்கின்றனர். குறிப்பாக நீண்ட தூரம் பயணிப்பவர்கள், சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்வோர், முதியோர், கர்ப்பிணிகள், பச்சிளம் குழந்தைகளை வைத்திருக்கும் பெற்றோர் - ரயில் பயணத்தையே அதிகம் விரும்புகிறார்கள். இதனால் முன்பதிவு திறக்கும் நாளிலேயே பயணத்துக்காக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்து விடுகின்றனர். ரயில்களில் பயணிப்பதற்குத் தற்போது, 60 நாள்களுக்கு முன்பாக டிக்கெட் முன்பதிவு செய்யலாம். ஒவ்வொரு நாளும் காலை 8 மணிக்கு இதற்கான முன்பதிவு தொடங்குகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு வருகிற நவ. 8 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தீபாவளி வருகிறது. தீபாவளியையொட்டி, ரயில்களில் பயணிப்பதற்கான டிக்கெட் முன்பதிவு கடந்த செப். 6 ஆம் தேதி தொடங்கியது. நவ. 5 ஆம் தேதி (வியாழக்கிழமை) பயணிப்பதற்கு ரயில் டிக்கெட் முன்பதிவு செப். 6 காலை தொடங்கிய சில நிமிடங்களில் முடிந்தது. அதுபோலவே நவ. 6, 7 தேதிகளில் பயணிப்பதற்கான டிக்கெட்டுகளும் சில நிமிடங்களில் முடிந்தன. அதேபோல சொந்த ஊர் சென்றவர்கள் திரும்பிவர, தீபாவளிக்கு மறுநாள் நவ. 9 ஆம் தேதி (திங்கள்கிழமை) பயணிப்பதற்கு ரயில் டிக்கெட் முன்பதிவு செப். 10 காலை 8 மணிக்குத் தொடங்கி சில நிமிடங்களில் டிக்கெட்டுகள் முடிந்தன. நவ. 10 (செவ்வாய்க்கிழமை) திரும்பிவர இன்றைய (செப். 11) டிக்கெட் முன்பதிவும் அதே நிலைதான். பயணிகளின் குற்றச்சாட்டுகள்டிக்கெட் முன்பதிவு செய்வதற்காக முந்தைய நாளே திட்டமிட்டு ஐஆர்சிடிசி 'இ- வாலாட்'டிற்கு பணப்பரிமாற்றம் செய்து, சரியாக காலை 8 மணிக்கு முன்பதிவு என்றால் 7.55 -க்கு எல்லாம் ரெடியாக கணினி / லேப்டாப் அல்லது மொபைலில் ஐஆர்சிடிசி கணக்கைத் திறந்து தயாராக இருந்தாலும் பல்வேறு பிரச்னைகளால் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாமல் போகிறது.டிக்கெட் கிடைக்கவில்லை என்றால், அதற்கு ஒவ்வொருவரும் ஒரு காரணத்தைக் கூறுகிறார்கள். ஐஆர்சிடிசி கணக்கு உள்நுழையக்கூட முடியவில்லை என்று பெரும்பாலானோர் குற்றச்சாட்டு முன்வைக்கிறார்கள். 40 நிமிடங்கள் வரை கணக்கு உள்நுழைய முடியவில்லை என்றும் அதன் பின்னர் டிக்கெட்டுகள் எல்லாம் தீர்ந்து 'ரெக்ரட்' (REGRET) - ரயில்வே வருத்தம் தெரிவிக்கும்போதுதான் - நிலைக்குச் சென்றுவிட்டதாகவும் புகார் தெரிவிக்கின்றனர். அடுத்து, ஐஆர்சிடிசி அதிகாரபூர்வ இணையதளத்தில், செயலியில் இந்தியா முழுவதும் ஒரே நேரத்தில் ஏராளமானோர் (லட்சக்கணக்கானோர் என்றெல்லாம் சொல்ல முடியுமா என்று தெரியவில்லை!) டிக்கெட் முன்பதிவு செய்வதால், இணையதள சர்வர் - அதிக சுமை (High Load) காரணத்தால் லாக் - இன் செய்ய முடியாமல் போவது, கணக்கில் உள்நுழைந்தாலும் டிக்கெட் முன்பதிவு பக்கம் செல்வதிலும் பணப் பரிமாற்றத்திலும் பிரச்னை ஏற்பட்டுப் பல காரணங்களால் டிக்கெட் கிடைக்காமல் பலரும் ஏமாற்றமடைகின்றனர். ஐஆர்சிடிசி மொபைல் செயலியில் தோன்றும் 'ஹை லோட்' பிரச்னை.... விழாக்காலங்களில் மட்டும்தான் இந்தக் கூத்து என்றில்லை. ஒவ்வொரு நாளும் தட்கல் முன்பதிவுக்கும் இதே நிலைதான் நீடிக்கிறது (தட்கல் டிக்கெட் முன்பதிவுக்கு, பயணிப்பதற்கு முந்தைய நாள் - ஏசி பெட்டிகளுக்கு காலை 10 மணிக்கும் ஏசி அல்லாத ஸ்லீப்பர் பெட்டிகளுக்கு காலை 11 மணிக்கும் தொடங்குகிறது). ஐஆர்சிடிசி அதிகாரபூர்வ இணையதளத்தில், அதிகாரபூர்வ செயலியில் இப்படி என்றால் ரயில் நிலைய டிக்கெட் கவுன்டர்களில் நிலைமை இன்னும் மோசம்!முன்பெல்லாம் டிக்கெட் கவுன்டர்களில் சென்று முன்பதிவு செய்தால், டிக்கெட் கிடைக்கும் சூழ்நிலை இருந்த நிலையில், இப்போது மணிக்கணக்கில் காத்திருந்தாலும், ஓரிருவருக்கு மட்டுமே டிக்கெட் கிடைப்பதாகக் கூறுகிறார்கள். தீபாவளி டிக்கெட்டுக்காக அதிகாலை முதலே ரயில் நிலைய டிக்கெட் கவுன்டர்களில் பயணிகள் காத்திருந்த நிலையில் 4 - 5 பேருக்கே டிக்கெட் கிடைத்திருக்கிறது. அவர்கள் தூக்கத்தைவிட்டு மணிக்கணக்கில் காத்திருந்து என்ன பயன்? ரயில் நிலைய டிக்கெட் கவுன்டரில் 'காத்திருப்புப் பட்டியல்' டிக்கெட் (Waiting List Ticket) எடுத்தால் முன்பதிவு பெட்டிகளில் ஏறிக் கொள்ளலாம். ஆனால் 'வெயிட்டிங் லிஸ்ட்' டிக்கெட்கூட கிடைக்கவில்லை என்று பலரும் புலம்புகின்றனர். இணையதளம் புதுப்பிக்கப்பட்டும் அதே நிலைதான்!ஐஆர்சிடிசி இணையதளத்தில் இதுபோன்று தொடர் பிரச்னைகள் ஏற்படுவதால் இணையதளம் புதுப்பிக்கப்பட்டு சர்வர் மேம்படுத்தப்படும் என்று மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவிக்க, அதற்காக ரயில் பயணிகள் எதிர்பார்த்து காத்திருந்தனர். அதன் பிறகு இணையதள சர்வர்ரீதியாக எந்த பிரச்னையும் இருக்காது என்று ரயில்வே துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதன்படியே கடந்த ஜூலை 15 ஆம் தேதி மேம்படுத்தப்பட்ட ஐஆர்சிடிசி இணையதளம் அறிமுகமானது. இனிமேல் இணையதளரீதியாக பிரச்னை இருக்காது என்று நினைத்தால் பெரும் ஏமாற்றம்தான். ஹை - லோட் பிரச்னை, ஐஆர்சிடிசி கணக்கு லாக் -இன் ஆவதில்லை, பணப் பரிமாற்றம் தோல்வி என இப்போது கூடுதலாகப் பல பிரச்னைகள். இதையெல்லாம் தாண்டி டிக்கெட் கிடைத்தால் அதிர்ஷ்டம்தான். நாடு முழுவதும் ரயில் டிக்கெட் முன்பதிவுக்கு ஒரே இணையதளம், ஒரே செயலி என்று இருக்கும்போது இணையதளம் எந்தளவுக்கு மேம்படுத்தப்பட்டதாக இருக்க வேண்டும்? (இதற்கு தீர்வாக ஒவ்வொரு மண்டலவாரியாக தனித்தனி இணையதளங்களைக்கூட உருவாக்கலாம்!).டிக்கெட் விற்றுத் தீர்ந்தனவா?இந்த காரணங்களை எல்லாம் தாண்டி ரயில்களில் டிக்கெட் கிடைக்காமல் போவதற்கும் 'அவ்வளவும் விற்றுத் தீருவதற்கும்' இன்னொரு பெரிய அபத்தம் இருக்கிறது. அதுதான், மக்கள்தொகைக்கும் பயணிகளின் எண்ணிக்கைக்கும் சற்றும் பொருத்தமில்லாத ரயில்களின் எண்ணிக்கையும் ரயில் முன்பதிவு இருக்கைகளின் எண்ணிக்கையும். வேலை, கல்வி உள்ளிட்ட காரணங்களுக்காக சொந்த ஊர்களில் இருந்து நகரங்களுக்குச் சென்று வசிப்பவர்கள், அதிகரித்து வருவதனால் ரயில் டிக்கெட் முன்பதிவில் போட்டாபோட்டி நிலவுகிறது. விழாக் காலங்களில் சிறப்பு ரயில்கள் என்று சில நாள்களுக்கு முன்னர் அறிவித்து இயக்கினாலும் அது பயணிகளுக்கு போதுமானதாக இல்லை. உதாரணமாக, சென்னையிலும் புறநகர்ப் பகுதிகளிலும் என்று எடுத்துக்கொண்டால் சுமார் ஒன்றரைக் கோடி மக்கள் வரை இருக்கலாம். இவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் பிற மாவட்டங்களிலிருந்து சென்னைக்கு வந்து வேலை செய்பவர்கள் அல்லது சென்னையிலேயே வசிப்பிடத்தை மாற்றிக்கொண்டவர்கள், குடியேறியவர்களாக இருப்பார்கள்.இதனால் விழாக் காலங்களில் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு குறிப்பாக தென் மாவட்டங்களுக்குச் செல்வோர் ரயில் டிக்கெட் முன்பதிவுக்கு முயற்சிக்கிறார்கள். ஆனால் பயணிப்பவர்கள் எண்ணிக்கையைவிட, ரயில்களின் எண்ணிக்கையும் முன்பதிவு டிக்கெட்டுகளின் எண்ணிக்கையும் பல மடங்கு குறைவாக இருப்பதுதான் முதல் காரணமாக இருக்கிறது.சென்னை - மதுரை சென்னையில் இருந்து மதுரைக்குச் செல்லும் தினசரி ரயில்கள் என்று கணக்கிட்டால் 14 ரயில்கள். இவற்றில் மதுரை மட்டுமின்றி திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, செங்கோட்டை வரை செல்லும் ரயில்களும் அடங்கும்.அதைத் தவிர்த்தால், மதுரைக்கு என்று தேஜஸ், வைகை, பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மட்டும்தான். தேஜஸ் ரயிலில் டிக்கெட் முன்பதிவு எண்ணிக்கை - 580 + 25 வைகை - 854 (2S) + 142 (AC chair car) பாண்டியன் - 224 (ஸ்லீப்பர்) + 177 (3 ஏசி) + 66 (2 ஏசி) போடிநாயக்கனூர் ரயில் (வாரத்தில் 6 நாள்கள்) - 172 (ஸ்லீப்பர்) ; ஏசி - 229 + 37இதுதவிர 2 வந்தே பாரத் ரயில்கள் (தோராயமாக தலா 800 டிக்கெட்டுகள்)மொத்தமாக - மதுரைக்கு தோராயமாக ஏசி உள்பட4,000 முன்பதிவு டிக்கெட்டுகள்தான் இருக்கின்றன. இதில் சாதாரண மக்கள் பயணிக்கும் இருக்கை (2S) மற்றும் ஸ்லீப்பர் டிக்கெட்டுகளின் எண்ணிக்கை வெறும் 1,078தான். நெல்லை, செங்கோட்டை, குமரிசென்னையில் இருந்து செங்கோட்டை செல்லும் ரயில்கள் என்று எடுத்துக்கொண்டால் 2 ரயில்கள்தான் தினசரி ரயில்கள். பொதிகை மற்றும் கொல்லம் அதிவிரைவு ரயில். சிலம்பு எக்ஸ்பிரஸ், தாம்பரம் - செங்கோட்டை சிறப்பு ரயில் (தற்காலிகமாக) ஆகியவை வாரத்திற்கு 3 நாள்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன. பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில் 'ஸ்லீப்பர்' முன்பதிவு டிக்கெட்டுகள் எண்ணிக்கை 283; ஏசி - 172 + 61 கொல்லம் ரயிலில் ஸ்லீப்பர் - 296; ஏசி - 69 + 26ஒரு நாளைக்கு 2 தினசரி ரயில்களிலும் சேர்த்து மொத்தமாகவே 579 'ஸ்லீப்பர்' டிக்கெட்டுகள்தான் முன்பதிவு செய்ய முடியும். 3 நாள்களுக்கு மற்ற 2 ரயில்கள் இயக்கப்படுவதால் அன்று மேலும் 400 டிக்கெட்டுகள் கூடுதலாக கிடைக்கும். அவ்வளவே! இதுபோலவே திருநெல்வேலிக்கு நெல்லை எக்ஸ்பிரஸ் (270 ஸ்லீப்பர் இருக்கைகள்), திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் (263), 2 வந்தே பாரத் ரயில்கள். தூத்துக்குடிக்கு முத்துநகர் எக்ஸ்பிரஸ் (234), கன்னியாகுமரிக்கு அனந்தபுரி (277), கன்னியாகுமரி (231), குருவாயூர் (432), திருக்குறள் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதுதவிர ஒரு சில வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. மேலே குறிப்பிட்டுள்ளவைகளில் தென் மாவட்டங்களுக்குச் செல்லும் தினசரி ரயில்கள் (சாதாரண மக்கள் பயணிக்கும் வகையிலான ஸ்லீப்பர் இருக்கை ரயில்கள்) 12 மட்டுமே. இதில் ஒரு ரயிலில் தோராயமாக 300 இருக்கைகள் என்றால் ஒரு நாளைக்கு 3600 டிக்கெட்டுகள்தான். தென் மாவட்டங்களில் இருந்து பல ஆயிரக்கணக்கானோர் / விழாக் காலங்களில் லட்சக்கணக்கானோர் ரயில்களில் பயணிக்க, ரயில் டிக்கெட் முன்பதிவுக்கு முயற்சிக்கும் நிலையில் 3600+ பேருக்குதான் டிக்கெட் கிடைக்கிறது.இந்த ரயில்களில் ஏசி முன்பதிவு டிக்கெட்டுகள் எண்ணிக்கை 1,800+ என்ற அளவில் இருக்கும். (இவையல்லாமல், பயணத்துக்கு முந்தைய நாளில் சில நூறு தட்கல் டிக்கெட்களுக்காக இதேபோன்ற பகீரத முயற்சிகளை மேற்கொண்டு, இணையதளத்துக்குள் புகுந்து டிக்கெட்டுகளும் கிடைக்கப் பெற்றவர்கள் மகா பாக்கியவான்களாகக் கருதப்படுகிறார்கள்).மற்றவர்கள் விழாக்கால ரயில்களையோ, முன்பதிவில்லாத ரயில் பெட்டிகளையோ அல்லது அரசுப் பேருந்துகளையோ நம்பியிருக்கும் சூழல் உருவாகிறது. பயணிகளின் கோரிக்கை தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு செல்வோர் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால், தென் மாவட்டங்களுக்கு ரயில்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்பது பயணிகளின் முக்கிய கோரிக்கையாக உள்ளது. அதேபோல சில ரயில்களில் வாய்ப்பிருப்பின் பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கலாம். விழா நாள்களில் சிறப்பு ரயில்கள் குறித்த அறிவிப்பு, முன்னதாகவே அறிவித்தால் திட்டமிட வசதியாக இருக்கும் என்று பயணிகள் கூறுகிறார்கள். விழாக் காலங்களில் பகல் நேரங்களில் ஸ்லீப்பர் அல்லாத இருக்கை (2S) வசதி மட்டும் கொண்ட ரயில்களை இயக்கினால் நடுத்தர மக்களுக்கு வசதியாக இருக்கும். சாதாரண, நடுத்தர மக்களுக்கானது ரயில் போக்குவரத்து என்று சொல்லப்படுகிறது. ஆனால், நிலைமை அப்படியில்லை. பயணிகளின் வசதிக்காக, அவர்களுக்கு டிக்கெட் கிடைப்பதற்காக ரயில்வே தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமா? Train ticket Reservation: There were only 3,600 sleeper tickets in daily trainsடிக்கெட் முன்பதிவு: கையறு நிலையில் ரயில் பயணிகள்!