இந்தியாவில் எண்மவழி பரிவர்த்தனைகள் நாள்தோறும் புதிய சாதனைகளைப் படைத்துவரும் நிலையில், இணையவழி (சைபர்) குற்றவாளிகளின் சதி வலைகளிலிருந்து பொதுமக்கள் சிறுக, சிறுக சேமித்த பணத்தைப் பாதுகாக்க மத்திய தொலைத்தொடர்புத் துறை ஒரு சக்தி வாய்ந்த அரணை உருவாக்கியுள்ளது.தொலைத்தொடர்புத் துறையின் 'எண்ம நுண்ணறிவுத் தளத்தின்' (டிஐபி) கீழ் 2025, மே 22-ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்ட 'நிதி மோசடி அபாயக் குறியீட்டு' (எஃப்ஆர்ஐ) வசதி, வெற்றிகரமாக 15 மாதங்களை நிறைவு செய்துள்ளது. இந்தக் குறுகிய காலத்தில், ரூ.5,000 கோடிக்கும் அதிகமான இணையழி மோசடி இழப்புகள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு கூறுகிறது.இதன் சிறப்பம்சம் என்னவென்றால், இந்தப் பெருந்தொகை திருடப்பட்டு, பின்னர் கண்டறியப்பட்டு, முடக்கப்படவோ, மீட்கப்படவோ இல்லை. மாறாக, பயனர்களின் வங்கிக் கணக்கைவிட்டு ஒரு பைசாகூட வெளியேறாத வகையில், பரிவர்த்தனை நடைபெறவிருந்த விநாடி பொழுதிலேயே தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. வழக்கமாக ஓர் இணையவழி மோசடி நடக்கும்போது, குற்றவாளி திருடிய பணத்தை சில நிமிஷங்களிலேயே பல போலி (மியூல் கணக்குகள்) வங்கிக் கணக்குகளுக்கு மாற்றி, உடனடியாக எடுத்துவிடுவார். அதன் பிறகு தொடர்புடையவர்கள் புகார் அளித்து, காவல் துறை வழக்குப் பதிவு செய்து, வங்கிக் கணக்குகளை முடக்குவதற்குள் காலம் கடந்துவிடும்.தானியங்கி பரிசோதனை: அதாவது, பயனர் ஒருவர் 'யுபிஐ' அல்லது வங்கிச் செயலியில் பணப் பரிமாற்றம் செய்யும்போதே, பின்னணியில் மிகக் குறுகிய நேரத்தில் இந்தச் சரிபார்ப்பு சோதனை முடிந்துவிடும். இதன்மூலம் தொடர்புடையவர்கள் காவல் நிலையம் செல்ல வேண்டிய அவசியமோ, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டிய தேவையோ, வங்கிக் கணக்குகளை முடக்கும் அலைச்சலோ ஏற்படுவதில்லை.'இந்த விஷயத்தில் ரூ.5,000 கோடி பாதுகாக்கப்பட்டது என்பது தடுத்து நிறுத்தப்பட்ட பணத்தின் அளவு மட்டுமே. களத்தில் இதன்மூலம் தவிர்க்கப்பட்ட லட்சக்கணக்கான புகார்கள், விசாரணைக்கான கால நேரம், காவல் புலனாய்வாளர்களின் மனித உழைப்பு, மக்களின் மன உளைச்சல் எனக் கணக்கிட்டால், நாட்டின் பொருளாதாரத்துக்கு இதன் பங்களிப்பு அளப்பரியது' என்கின்றனர் மத்திய தொலைத்தொடர்புத் துறை அதிகாரிகள்.எஃப்ஆர்ஐ எவ்வாறு செயல்படுகிறது?: எஃப்ஆர்ஐ என்பது தொலைத்தொடர்பு தரவுகளையும், செயற்கை நுண்ணறிவுப் பகுப்பாய்வையும் இணைத்துச் செயல்படும் ஒரு நவீன பாதுகாப்பு வசதியாகும். இந்த எண்ம நுண்ணறிவுத் தளம் (டிஐபி) இயங்கும் முறை பின்வருமாறு விளக்கப்பட்டுள்ளது: பொதுமக்கள் புகார்கள் பதிவு செய்வதற்கான சஞ்சார் சாத்தி (Sanchar Saathi) தளம், தேசிய இணையவழி குற்றப் புகார் பதிவு இணையதளம் (என்சிஆர்பி) மற்றும் வங்கி, தொலைத்தொடர்புத் துறையின் நுண்ணறிவுத் தகவல்கள் ஆகிய மூன்று முக்கிய அமைப்புகளிலிருந்து பெறப்படும் தரவுகள் ஒருங்கிணைக்கப்பட்டு, எஃப்ஆர்ஐ தளத்துக்கு அனுப்பப்படுகின்றன.இந்தத் தளம், பெறப்பட்ட தகவல்களை நிகழ்நேரத்தில் விரிவாகப் பகுப்பாய்வு செய்து, அவற்றின் ஆபத்துத் தன்மையைப் பொறுத்து, நடுத்தர அபாய நிலை, உயர் அபாய நிலை மற்றும் மிக அதிக அபாய நிலை என மூன்று பிரிவுகளாக வகைப்படுத்துகிறது.இவ்வாறு பகுப்பாய்வு செய்யப்பட்ட முடிவுகளின் அடிப்படையில், தொடர்புடைய வங்கி மற்றும் யுபிஐ செயலிகளுக்கு ஒரே விநாடியில் எச்சரிக்கை குறுஞ்செய்தி அனுப்பப்படுகிறது. இதன்மூலம், இணையவழி அல்லது எண்ம முறையில் நடைபெறும் மோசடிப் பரிவர்த்தனைகள் உடனடியாகக் கண்டறியப்பட்டுத் தடுக்கப்படுகின்றன.உதாரணமாக, இந்த எச்சரிக்கை குறுஞ்செய்திகள் டிஐபி மூலம் வங்கிகளுக்கும், யுபிஐ செயலி நிறுவனங்களுக்கும் அனுப்பப்படும். ஒரு பயனர் அந்த சந்தேகத்துக்குரிய எண்ணுக்குப் பணம் அனுப்பும்போது, செயலியிலேயே 'இந்த எண் ஆபத்தானது' என்ற எச்சரிக்கை திரையில் தோன்றும் அல்லது பரிவர்த்தனை தானாகவே ரத்து செய்யப்படும்.'ரூ. 5,000 கோடி என்ற தொகையின் பின்னணியில் லட்சக்கணக்கான மக்களின் பாதுகாப்பும் மறைந்துள்ளன. உதாரணமாக, போலி கேஒய்சி அழைப்பை நம்பி வாழ்நாள் சேமிப்பை இழக்காமல் தப்பித்த ஓர் ஓய்வூதியதாரர், மோசடி விநியோகஸ்தருக்கு அனுப்ப இருந்த பணம் சில விநாடிகளுக்கு முன் தடுத்து நிறுத்தப்பட்ட ஒரு சிறு வணிகர், திரையில் தோன்றிய எச்சரிக்கையைப் பார்த்து உடனடியாக பரிவர்த்தனையை நிறுத்திய புதிய எண்ம பயனாளி என இவர்கள் ஒவ்வொருவரும் நிதி இழப்பு ஏற்பட்ட பிறகு விசாரணை என்ற அலைச்சலுக்கு ஆளாகாமல், பாதிப்பு நடப்பதற்கு முன்பே பாதுகாக்கப்பட்டிருக்கிறார்கள்' என்று மத்திய தொலைத்தொடர்புத் துறை அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.'இணையவழிக் குற்றங்கள்' வெறும் தொலைத்தொடர்புத் துறை மூலம் நிறுத்தப்படுவதில்லை. இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ), இந்திய தேசிய பணப் பரிவர்த்தனை ஆணையம் (என்பிசிஐ) ஆகியவை இணைந்து 1,600-க்கும் மேற்பட்ட வங்கிகள் மற்றும் யுபிஐ செயலிகளை 'டிஐபி' தளத்துடன் இணைத்துள்ளன.அத்துடன், இந்திய பங்குகள் பரிவர்த்தனை வாரியத்தின் (எஸ்இபிஐ) கூட்டுடன், போலி டீமேட் கணக்குகள் மற்றும் போலி வர்த்தகப் பயன்பாடுகள் மூலம் நடைபெறும் பங்குச்சந்தை மோசடிகளைத் தடுக்க ஏதுவாக எப்ஆர்ஐ தளம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.மேலும், காப்பீட்டு பாலிசிகள் வழங்குவது, க்ளைம் பெறுவது மற்றும் ஓய்வூதியதாரர்களின் கணக்குகளிலிருந்து பணம் திருடப்படுவதைத் தடுக்கவும் இந்த ஆபத்துகால குறிகாட்டி தற்போது பயன்படுத்தப்படுகிறது.அதிகாரிகளுக்குப் பயிற்சி: இந்தத் தொழில்நுட்பத்தைச் சரியாகப் பயன்படுத்த 1,500 வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களைச் சேர்ந்த அதிகாரிகளுக்கு 25-க்கும் மேற்பட்ட சிறப்புப் பயிற்சிகளை மத்திய தொலைத்தொடர்புத் துறை வழங்கியுள்ளது.இந்த விவகாரத்தில் 'ஜன பாகிதாரி' எனப்படும் பொதுமக்களின் பங்களிப்பே முதல் அரண் என்கிறது மத்திய அரசு. விழிப்புணர்வுள்ள ஒரு குடிமகன் அளிக்கும் ஒரு சிறிய புகார், பல ஆயிரம் பேரின் பணத்தைக் காப்பாற்றுகிறது. 'சஞ்சார் சாத்தி' செயலியை ஆண்ட்ராயிட், ஐபோன் தரவுத் தளத்தில் பதிவிறக்கம் செய்து கைப்பேசிகளில் நிறுவலாம்.மத்திய தொலைத்தொடர்புத் துறையின் இந்த நவீனத் தொழில்நுட்ப அரண், இந்தியாவின் எண்மப் பொருளாதாரத்தை மேலும் பாதுகாப்பானதாகவும் நம்பகமானதாகவும் மாற்றியுள்ளது என்பதால் இந்தச் சேவைக்கு மக்கள் மத்தியிலும் நாளுக்கு நாள் வரவேற்பு பெருகி வருகிறது.