சேத்துப்பட்டு அருகே விவசாய பெண் தொழிலாளி வீட்டில் 14 பவுன் தங்க நகைகள், வெள்ளிப் பொருள்கள் மற்றும் ரூ.56 ஆயிரம் ரொக்கத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.சேத்துப்பட்டை அடுத்த தச்சாம்பாடி மதுரா, பாண்டியாபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் கண்ணப்பன் மனைவி சின்னக்குழந்தை. இந்தத் தம்பதிக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனா். கணவா் இறந்த நிலையில் சின்னக்குழந்தை விவசாய கூலி வேலை செய்து வருகிறாா். பாண்டியாபுரம் கிராமத்தில் திருட்டு நடைபெற்ற வீட்டில் உடைக்கப்பட்டு திறந்து கிடந்த பீரோ. இந்த நிலையில், சின்னக்குழந்தை சனிக்கிழமை வீட்டை பூட்டிவிட்டு விவசாய கூலி வேலைக்கு சென்றாா். மாலை 5 மணியளவில் வீட்டுக்கு திரும்பி வந்தபோது, வீட்டின் கதவில் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. மேலும், வீட்டுக்குள் சென்று பாா்த்தபோது, 2 பீரோக்களின் பூட்டுகளும் உடைக்கப்பட்டிருந்த நிலையில், அதில் வைக்கப்பட்டிருந்த 14 பவுன் தங்க நகைகள் மற்றும் வெள்ளிக் கொலுசு, அரைஞாண்கயிறு உள்ளிட்ட வெள்ளிப் பொருள்கள், ரூ.56 ஆயிரம் ரொக்கம் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.இதுகுறித்த புகாரின்பேரில், சேத்துப்பட்டு போலீஸாா் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று பாா்வையிட்டு தடயங்களை சேகரித்ததுடன், வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.